பின் தொடர்வோர்

Wednesday 27 April 2022

497. காரணமதாக

  

497





காரணமதாக

 

காரணம தாக வந்து                            புவிமீதே

    காலனணு காதி சைந்து              கதிகாண

நாரணனும் வேதன் முன்பு             தெரியாத

    ஞானநட மேபு ரிந்து                    வருவாயே

ஆரமுத மான தந்தி                        மணவாளா

    ஆறுமுக மாறி ரண்டு           விழியோனே 

சூரர்கிளை மாள வென்ற                திர்வேலா

    சோலைமலை மேவி நின்ற    பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

காரணம் அதாக வந்து  புவிமீதே
காலன் அணுகாது இசைந்து கதிகாண

 

காரணம் அது ஆக -ஊழ்வினையின் காரணமாக

புவி மீது  வந்து - இந்த பூமியில் வந்து பிறந்து,

காலன் அணுகாது -  காலன் என்னை நெருங்காத வண்ணம்

இசைந்து – தாங்கள் மனம் பொருந்தி

கதி காண - நான் நற்கதியை அடைய

நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநடமே புரிந்து வருவாயே
    

நாரணனும் - திருமாலும்

வேதன் - பிரம்ம தேவனும்

முன்பு தெரியாத    முன்பு கண்டறியாத

ஞான நடமே புரிந்து -  ஞான நடனம் செய்து

வருவாயே - வருவீர்களே

ஆரமுதம் ஆன தந்தி மணவாளா
ஆறுமுகம் ஆறு இரண்டு விழியோனே
   

ஆர் அமுதம் ஆன - நிறைந்த அமுது ஆகிய

தந்தி - தேவயானையின்

மணவாளா - இனிய மணவாளனே
ஆறுமுகம் - ஆறு திருமுகங்களையும்

ஆறி ரண்டு விழியோனே -  பன்னிரண்டு கண்களையும் உடையவனே  

 

சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.

 

சூரர் கிளை  மாள  - சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக

வென்ற - வெற்றி கொண்ட

கதிர் வேலா - ஒளிமிக்க வேலனே

சோலைமலை - பழமுதிர்சோலை மலையில்  

மேவி நின்ற பெருமாளே - எழுந்தருளிய பெருமையின்  மிகுந்தவரே

 

சுருக்கவுரை

நிறைந்த அமுது ஆகிய தேவயானையின் இனிய மணவாளனே! ஆறு திரு முகங்களையும் பன்னிரண்டு கண்களையும் உடையவனே!  சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே! பழமுதிர்சோலை மலையில் எழுந்தருளிய பெருமையின் மிகுந்தவரே! ஊழ் வினையின் காரணமாக இந்த பூமியில் வந்து பிறந்த என்னை, காலன் நெருங்காத வண்ணம் தாங்கள் மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய, திருமாலும்  பிரம்ம தேவனும் முன்பு கண்டறியாத ஞான நடனம் செய்து வருவீர்.


rev 30-5-2022

பாடலை கேட்க 

 




495. ஆசை நாலு

 

495


பழமுதிர்சோலை

 

                  தான தானதன தத்ததன தத்ததன

                       தான தானதன தத்ததன தத்ததன

                       தான தானதன தத்ததன தத்ததன       தந்ததான

 

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி

    வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி

    ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு     மிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி

    யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத

    ழாகி யேழுமன விட்டருண விற்பதியின்          விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக

    மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு

    மோது வேதசர சத்தியடி யுற்றதிரு                   நந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற

    மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்

    யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய்

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்

    வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்

    மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண  செங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை

    வாயின் மாதுதுதிர் பச்சைவடி விச்சிவையென்

    மாசு சேரெழுபி றப்பையும றுத்தவுமை         தந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி

    ஆரூர் வேலுர்தெவுர் கச்சிமது ரைப்பறியல்

    காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல்   செந்தில்நாகை

காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு

    நாவ லு\ர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்

    காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே.

 

பதம் பிரித்து உரை

 

ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி

வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி

ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை

ஆசை = திக்குகள் நாலு சதுரக் கமலம் = நான்கு பக்கங்கள் கொண்ட சதுரமான மூலாதாரக் (மூலக்) கமலத்தில் உற்று இன் ஒளி வீசி = பொருந்தி இனிய நல்ல ஒளி வீசிட ஓடி இரு பக்க மொடு அறச்செல் = இரண்டு பக்கங்களிலும் பொருந்தச் செய்கின்ற (இடை கலைபிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற வளி = பிராண வாயு ஆவல் கூர = விருப்பம் மிக்கெழ மண் முதல் சலசம் = (சுவாதிட்டான (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவநடு) ஈறாக உள்ள) ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து. பொன் சபை = கனக சபையும் இந்து வாகை = சந்திர காந்தியும்.

 ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி

ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி

ஏழும் அளவு இட்டு அருண விற்பதியில் விந்து நாத

ஆர = நிரம்பி விளங்க மூணு பதியில் கொளு நிறுத்தி = மூன்று (அக்கினி,ஆதித்தசந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி வெளி ஆரும் சோதி= வெளிப்படும் சோதியான நூறு பத்தினுடன் எட்டு = ஆயிரத்து எட்டு. இதழாகி = இதழோடு கூடிய. ஏழும் அளவிட்டு = ஆறு ஆதாரங்களுடன் பிரமரந்திரம் (மூலவாசல்உச்சித் துவாரம்) கூடிய ஏழு இடங்களையும் அளவு இட்டு = கண்டறிந்து. அருண விற்பதி= சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்தத்) தானத்தில். விந்து நாத = சிவ தத்துவ நாத

ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு

கூடி ஒருமித்து அமுத சித்தியொடும்

ஓது வேத சர சத்தி அடி உற்ற திரு நந்தி ஊடே

ஓசை சாலும் = ஓசை மிகுந்துள்ள ஒரு சத்தம் = ஒப்பற்ற சத்தம் அதிக = அதிகமான. படிக மோடு கூடி = பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய் ஒருமித்து = ஒன்று சேர்ந்து. அமுத சித்தியோடும் = மதி மண்டலத் தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேறுடன் ஓது வேத= புகழந்து சொல்லப்படும் வேத சர சித்தி அடியுற்ற = வாசி சத்திக்கு ஆதாரமாக உள்ள. திரு நந்தி ஊடே = திரு நந்தி ஒளிக்குள்ளே

ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற

மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்

யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்

ஊமையோனை = ஊமையாகிய என்னை. ஒளிர்வித்து = விளங்க வைத்து உனது முத்தி பெற = நீ அருளும் முத்தியைப் பெற. மூல வாசல் வெளி விட்டு = பிரமரந்திரம் எனப் படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க உனது உரத்தில் ஒளிர் = உனது அருளாற்றலால் யோக பேத வகை எட்டும் = யோக விதங்கள் எட்டும். இதில் ஒட்டும் வகை = இதில் பொருந்தும் வல்லமையை இன்று தாராய் = இன்று தந்தருளுக

வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ்

வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள்

மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி

வாசி = குதிரை. வணிகன் என = வியாபாரி என வந்து. குதிரை விற்று மகிழ் = குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட வாதவூரன் = திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமைக் கொளு = அடிமையாகக் கொண்ட க்ருபைக் கடவுள் = கிருபாகர மூர்த்தி மாழை ரூபன் = பொன் உருவத்தினன் மத்திகை விதத்து

குதிரை சம்மட்டி வகைகளைக் கொண்ட. அருண செம் கையாளி = செவ்விய திருக்கையைக் கொண்டவனாகிய சிவபெருமானுடைய

வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை

வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என்

மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே

வாகு பாதி உறை = இடது பக்கத்தில் உறைகின்ற சத்தி கவுரி = சத்திகௌரி குதலை வாயின் மாது = மழலைச் சொல் பேசும் மாது. துதிர்பச்சை வடிவி = பவள நிறமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள் சிவை = சிவை என் மாசு சேர் = என்னுடைய குற்றம் நிறைந்த எழு பிறப்பையும் அறுத்து = ஏழு பிறப்புகளையும் அறுத்த. உமை = உமா தேவியார் தந்த வாழ்வே = ஈன்ற செல்வமே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி

ஆரூர் வேலூர் தெவூர் கச்சி மதுரை பறியல்

காவை மூதூர் அருணை கிரி திருத்தணியல் செந்தில் நாகை

காசி ராமெசுரம் = காசிஇராமேசுரம் ரத்நகிரி = திருவாட்போக்கி சர்ப்பகிரி = திருச்செங்கோடு ஆரூர் = திருவாரூர் வேலுர் = வேலூர் தெவுர் = தேவூர் கச்சி = காஞ்சீபுரம் மதுரை = மதுரை பறியல் = திருப்பறியல் காவை = திருவானைக்கா மூதூர் = திருப்புனைவாசல் அருணைக்கிரி = திருவண்ணாமலை திருத்தணியல் = திருத்தணிகை செந்தில் = திருச்செந்தூர் நாகை = நாகப்பட்டினம்.

 காழி வேளூர் பழநிக்கிரி குறுக்கை

திரு நாவலுர் திருவெ(ண்)ணெய் பதியில் மிக்க திகழ்

காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே.

காழி = சீர்காழி வேளூர் = வேளூர் பழனிக்கிரி = பழநி மலை குறுக்கை = திருக்குறுக்கை திருநாவலூர் = திருநாவலூர் திருவெண்ணெய் = திருவெண்ணெய் நல்லூர் பதியில் மிக்க திகழ் = முதலிய தலங்களில் விளங்கும் காதல் = உனக்கு விருப்பமான சோலை வளர் வெற்பில் = சோலை மலையிலும். உறை = உறைகின்ற முத்தர் = சீவன் முத்தர்கள் புகழ் தம்பிரானே = புகழ்கின்ற தம்பிரானே.

 

தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு

  

சுருக்க உரை

 இடைகலை பிங்கலை என்னும் இரு நாடி வழியாக ஓடிக் கழியும் பிராண வாயுவை மூலாதாரத்தில் ஊன்றிஅங்கிருந்து சுழுமுனை நாடி வழியாக மற்ற ஆதார கமலங்களிலும் ஒட்டி நிறுத்திஅப்பால் 1008 இதழோடு கூடிய குரு கமலத்தில் செலுத்திஅங்கு நாத ஓசையும் மதிக்கலாமிர்தமும் பொங்கி எழஅவற்றோடு கூடி ஒருமிக்கச் செய்துசரசத்தக்கு ஆதாரமாக உற்ற நந்தி ஒளியையும் ஊமையேனுக்குத்

தெரிசிப்பித்துஉனது முத்தி பெற மூலவாசல் வெளியிட்டுஇங்ஙனம் செய்வதில் அட்டாங்க யோகமும் பொருந்தும் வகையை இன்று தந்தருள வேண்டும்.

குதிரை வணிகனாக வந்த மாணிக்க வாசகரை அடிமை கொண்ட சிவபெருமானின் இடது பக்கத்தில் உறையும் உமா தேவி ஈன்ற செல்வமே. பல தலங்களில் உறையும் சீவன் முத்தர்கள் போற்றும் தம்பிரானே. எனக்கு யோக பேதவகை ஒட்டும் வகையைத் தந்தருளுக.

 

விளக்கக் குறிப்புகள்

 யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை.....

 இந்தப் பாடலில் அஷ்டாங்க யோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

 யோக பேதவகை எட்டு (அஷ்டாங்க யோகம் )

 (இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே) --- திருமந்திரம் 534.

      இயமம் -        பொய்கொலைபொருளாசை நீங்கிப் புலனடக்கி இருத்தல்.   -  தவிற்கவேண்டியவை

நியமம் -         தவம்தூய்மைதத்துவம் ஓதுதல்தெய்வ வழிபாடு. - கடைபிடிக்கவேண்டியவை

ஆதனம் -      யோக ஆசனங்கள் (பதுமாசனம்,சுகாசனம் முதலியன) செய்வது.

 

பிராணாயாமம் - இரேசகம் (வெளிவிடுதல்)பூரகம் (உள்ளிழுத்தல்)கும்பகம் (மூச்சை உள் நீறுத்துதல்) என்ற மூன்று வகையாகச் சுவாசங்களை அடக்கி  ஆளுதல்.

பிரத்தியாகாரம் - இந்திரியங்களை விடயங்களிலிருந்து   திருப்புதல்.

தாரணை -           மனத்தை ஒரு வழி நிறுத்துகை.

தியானம் -           ஐம்புலனடக்கம்.

சமாதி -               மனத்தைப் பரம் பொருளோடு ஐக்கியப் படுத்துதல்.

 

நாலு சதுரக் கமலம் = மூலாதாதக் கமலம்.

மண்முதற் சலசம் = கொப்பூழ்  முதல் புருவநடு வரை உள்ள ஐவகை கமலம்.

 மூணு பதி = அக்கினி மண்டலம்ஆதித்த மண்டலம்சந்திர மண்டலம்.

 அமுத சித்தி = மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் அமிர்தப் பேறு.

ஏழும் அளவிட்டு.....

       ஆறு ஆதாரங்கள் + பிரமரந்திரம். பிரமரந்திரம் என்பது உச்சித் துவாரம்    (மூலவாசல்).

ஆறு ஆதாரங்கள் பின் வருமாறு.

மூலம் (மூலாதாரம்) கொப்பூழ் (சுவாதிஷ்டானம்)மேல் வயிறு ( மணி பூரகம்)நெஞ்சம் (அநாகதம்)மிடறு (விசுத்தம்)புருவ நடு (ஆக்ஞேயம்).

சரசத்தி அடி உற்ற திரு நந்தி.....

வாசி சத்திக்கு ஆதாரமாக உள்ள நந்தி ஒளி.

 

 வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாத ஊரன் ......

 

மாணிக்வாசகர் வரலாறு 

மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ்   பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.

அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன்தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.

வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார்சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார்.

வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்கஅவர் சிவஞான போதம் என்றார்

சிவம் என்பதும்ஞானம் என்பதும்போதம் என்பதும் யாதுஅடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்துதிருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டுவாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரைஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது?

 - நரியை பரியாய் மாற்றிய கதை

அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார். பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.  குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.  ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.அவரை சிறையில் அடைத்தார். வாதவூரார் சிவனை தியானித்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும்நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பிதாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான். குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்திஅவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிகுதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறிமுதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.

இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான்.

ஒரே ஒரு வந்திக் கிழவிபிட்டு சுட்டு விற்பவள்மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லைஅவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்

 அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய்ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டுமர நிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடை பட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.

கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்டஅது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும்கருவில் இருந்த குழந்தை மீதும்படவே பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.

மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால்சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்தவண்ணம் இருந்தார். அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் அமைச்சராகத் தன்னிடம் இருக்கக் கோரியும் அதனை விரும்பாத திருவாதவூரார் சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார்.

அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்என்று அந்தணர் கூறினார்.'நான் சொல்கிறேன்நீர் அவற்றை எழுதும்என்று கூறினார் திருவாதவூரார்.அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர்வாதவூரார் சொல்லச் சொல்லச் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.

முடித்ததும்ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்என்று கையொப்பமிட்டுதிருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லைவாழ் அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்கஅது திருவாசகமும்திருக்கோவையாரும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனமகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத் துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

- நன்றி விக்கி


    added   30-5-2022   பாடலை கேட்க