பின் தொடர்வோர்

Wednesday 15 May 2019

374.தத்த னமுமடிமை


374
பொது

          தத்த தனதனன தத்த தனதனன 
          தத்த தனதனன                      தனதான

தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
   தக்க மனையினமு                          மனைவாழ்வுந் 
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு  
   தைக்கு மயல்நினைவு                         குறுகாமுன் 
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் 
   பற்று மருள்நினைவு                              தருவாயே
அத்தி முகவனழ குற்ற பெழைவயிற 
   னப்ப மவரைபொரி                         அவல்தேனும் 
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட  
   விக்குள் மறமகளை                     யணைவோனே 
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு 
   முற்று மறைமொழியை                 மொழிவோனே 
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் 
   வெட்டி யமர்பொருத                         பெருமாளே.

பதம் பிரித்தல்

தத் தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் 
தக்க மனை இனமும் மனை வாழ்வும்

தத்தனமும் - அந்தப் பொருளும். அடிமை - ஏவலாலர்களும். சுற்றமொடு - சுற்றத்தினரும். புதல்வர் -  புதல்வர்களும். தக்க மனை - தகுதியான மனைவியும். இனமும் - மனைவியைச் சார்ந்தவர்களும். மனை வாழ்வும் - இல்லற வாழ்வும் (ஆன இவைகள்).

தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு 
உதைக்கும் மயல் நினைவு குறுகா முன்

தப்பு நிலைமை - இழக்கும் படியான நிலைமை. அணுகைக்கு வர - குறுகி வர. விரகு உதைக்கும் - அறிவைச் சிதைக்கும். மயல் நினைவு - புத்திமாறாட்டம் குறுகா முன் - (என்னை) அணுகி வருவதற்கு முன்.

பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள்
பற்றும் அருள் நினைவு  தருவாயே

பத்தியுடன் உருகி - பக்தியுடனே மனம் உருகி. நித்தம் - தினமும். உனது அடிகள் - உன்னுடைய திருவடிகளை. பற்றும் அருள் - பற்றும் திருவருள். நினைவு தருவாயே - நினைவைத் தந்தருள்க.

பத்து முடி உருளுவித்த பகழியினர்
பச்சை நிற முகிலின் மருகோனே

பத்து முடி உருளுவித்த - (இராவணனுடைய)  பத்து முடிகளையும் அறுத்துத் தள்ளிய. பகழியினர் - அம்பைக் கொண்டவர். பச்சை நிற முகிலின் - மேக நிறத்தினறான திருமாலின். மருகோனே - மருகனே.

அத்தி முகவன் அழகு உற்ற பேழை வயிறன் 
அப்பம் அவரை பொரி அவல் தேனும்

அத்தி முகவன் - யானை முகம் உடைய விநாயகன். அழகு உற்ற - அழகுள்ள. பேழை வயிறன் - பெட்டி போன்ற வயிற்றை உடையவன். அப்பம் அவரை பொரி  அவல் - அப்பம் முதலியவற்றோடு. தேனும் - தேனையும்.

அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ
அடவிக்குள் குற மகளை அணைவோனே

அப்பி அமுது செயும் - தொப்பையில் நிரப்பி உண்ணும். மொய்ப்பன் - வலிமையை உடையவன். உதவ - உதவி செய்ய. அடவிக்குள் - காட்டில். மற மகளை அணைவோனே - வேடப் பெண்ணாகிய வள்ளியை அணைபவனே.

முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு
முற்று(ம்) மறை மொழியை மொழிவேனோ

முத்தி தரு முதல்வர் - வீட்டுப் பேறு அளிக்கும் முதல்வரும்.
முக்கண் இறைவரோடு - முக்கண் இறைவருமாகிய சிவபெருமானுக்கு. முற்றும் மறை மொழியை - வேத மொழி முழுவதையும். மொழிவோனே - உபதேசித்தவனே.

முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல்
வெட்டி அமர் பொருத பெருமாளே.

முட்ட அசுரர் கிளை - அரக்கர் கூட்டம் முழுமையும். கெட்டு - தோற்றுப் போய் அழிய. முதல் வெட்டி - முன்பு வெட்டி. அமர் பொருத பெருமாளே - போர் செய்த பெருமாளே.

சுருக்க உரை

அந்தத் தனமும், உற்றார் உறவினர்களும், மனைவியும் இல்லற வாழ்க்கையும் இழக்கும்படியான நேரம் வந்து, நான் புத்தியையும் இழக்கும் நிலைமை அணுகு முன் பக்தியுடன் மனம் உருகி உன் திருவடியைப் பற்றும் திருவருளை எனக்குத் தந்து அருளுக.

இராவணனுடைய பத்துத் தலைகளும் உருள ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இரமனின் மருகனே. அழகிய யானை முகம் உடையவனும், அப்பம், அவல், பொரி முதலியவற்றை அப்பி உண்ணும் விநாயகனின் உதவியால் காட்டில் வள்ளியை அணைந்தவனே. முக்கண் இறைவனுக்கு வேத மொழியை உபதேசித்தவனே. அசுரர்கள் கூட்டம்  முழுதும் அழிய போர் புரிந்த பெருமாளே. நான் இறக்கு முன் உன் திருவடிகளைப் பற்ற அருள் புரிய வேண்டும்.

ஒப்புக

1அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன்... 
   வாழைக் கனிபல வின் கனி மாங்கனி தாஞ்சிறந்த
   கூசைச் சுருள் குழையப்பம் எள் ளுண்டை எல்லாம் துறுத்தும்
   பேழைப் பெருவயிற் றோடும் புகுந் தென்னுளம் பிரியான்
   வேழத் திருமுகத் துச் செக்கர் மேனி விநாயகனே...
கபிலர் மூத்த நாயனார் இரட்டை  மணி மாலை.

2. முத்தி தரு முதல்வர் முக்கணிறைவர்...
    ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே...திருப்புகழ், வேதவெற்பிலே.
 


No comments:

Post a Comment