480
சிதம்பரம்
         தனனதன தான தனனதன தான
தனனதன தானத் தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத
    கருணைமுரு கேசப்                     பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
    கரகமல சோதிப்                         பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
    விரகுரச மோகப்                         பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ருரருணகிரி நாதர்
   விமலசர சோதிப்                         பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
   சதமகிழ்கு மாரப்                         பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
    தருமுருக நாமப்                         பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகு மாதொ
    டியல்பரவு காதற்                       பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
    மியல்புலியுர் வாழ்பொற்                 பெருமாளே.
பதம் பிரித்து உரை
கனக சபை மேவும் எனது குரு நாத
கருணை முருகேச பெருமாள் காண்
கனக சபை மேவும் = கனக சபையில் நடனம் செய்யும். எனது குரு நாத = எனது குரு நாதராகிய. கருணை = கருணை நிறைந்த. முருகேசப் பெருமாள் காண் = முருகேசப் பெருமாள் நீ தான்.
கனக நிற வேதன் அபயம் இட மோது
கர கமலம் சோதி பெருமாள் காண்
கனக நிற வேதன் = பொன்னிறம் வாய்ந்த பிரமன். அபயம் இட = அடைக்கலம் என்று ஓலமிட. மோது = (அவன் தலையில்) குட்டிய. கர கமல = தாமரையை ஒத்த கையைக் கொண்ட. சேதிப் பெருமாள் காண் = சோதிப் பெருமாள் நீ தான்.
வினவும் அடியாரை மருவி விளையாடும்
விரகு ரச மோக பெருமாள் காண்
வினவும் அடியாரை = உன்னை ஆய்ந்து ஓதும் அடியார்களிடம். மருவி = பொருந்தி. விளையாடும் = அவர்களிடம் விளையாடும். விரகு = உற்சாகமும். ரசம் = இன்பமும். மோகம் = ஆசையும் உடைய. பெருமாள் காண் = பெருமாள் நீ தான்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
விமல சர சோதிப் பெருமாள் காண்
விதி = பிரமன். முநிவர் = முநிவர்கள். தேவர் = அமரர்கள். அருணகிரி நாதர் = அருணாசுலேசுரர். விமல = பரிசுத்தமான. சர சோதி = எனது மூச்சுள் விளங்கும் [சரம்- சுவாசம்]. பெருமாள் காண் = பெருமாள் நீ தான்.
சனகி மணவாளன் மருகன் என வேத
சதம் மகிழ் குமார பெருமாள் காண்
சனகி மணவாளன் = சீதையின் கணவனான இராமனின். மருகன் என = மருமகன் என்று. வேத சதம் = நூற்றுக் கணக்கான வேதங்களும். மகிழ் = கூறி மகிழ்கின்ற. குமாரப் பெருமாள் காண் = குமாரப் பெருமாள் நீ தான்.
சரண சிவகாமி இரண குல காரி
தரு முருக நாம பெருமாள் காண்
சரண சிவகாமி = அடைக்கலம் பாலிக்கும் சிவகாமி. இரண குல = போர் செய்யும் (அவுணர்) குலத்தை. காரி = அழித்தவள். தரு = பெற்ற. முருக நாம = முருகன் என்னும் பெயரை உடையவ. பெருமாள் காண் = பெருமாள் நீ தான்.
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு
இயல் பரவு காதல் பெருமாள் காண்
இனிது = சுகமான. வனம் மேவு = (வள்ளி மலைக்) காட்டில் தினைப்புனத்தில் இருந்த. அமிர்த = இனிய. குற மாதொடு = வள்ளியுடன். இயல் பரவு = உழுவலன்பு விரிந்த. காதல் பெருமாள் காண் = காதல் பூண்ட பெருமாள் நீ தான்
இணை இல் இப தோகை மதியின் மகளோடும்
இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே.
இணை இல் = ஒப்பற்ற. இப தோகை = (ஐராவதம் என்ற) யானை வளர்த்த மயில் போன்ற தேவசேனையுடன். மதியின் மகளோடும் = அறிவு நிறைந்த நங்கையாகிய வள்ளியுடன். இயல் = தகுதி கொண்ட. புலியர் வாழ் = சிதம்பரத்தில் வாழ்கின்ற. பொன் = அழகிய. பெருமாளே = பெருமாளே.
சுருக்க உரை
கனக சபையில் நடனம் செய்யும் எனது குரு நாதராகிய கருணை நிறைந்த பெருமாள் நீ தான்! பொன்னிறம் வாய்ந்த பிரமனைக் குட்டிய தாமரை போன்ற கரத்தைக் கொண்ட சோதிப் பெருமாள் நீ தான்! உன்னை ஆய்ந்து ஓதும் அடியார்களிடம் பொருந்தி உற்சாகத்துடன் விளையாடும் பெருமாள் நீ! பிரமன், தேவர்கள், முனிவர்கள், திருஅண்ணா மலையில் விளங்கும் அருணாசலேசுரர், பரிசுத்தமாய் என்னுடைய மூச்சுள் விளங்கும் சோதிப் பெருமாள் எல்லாம் நீ!.
சீதையின் கணவன் என்று வேதங்கள் கூறி மகிழ்கின்ற இராமனின் மருகனாகிய குமரப் பெருமாள் நீ! அவுணர் குலத்தை அழித்த சிவகாமி ஈன்றருளிய பெருமை உடையவன் நீ! வள்ளி மலைக் காட்டில் தினைப் புனத்தில் காவல் புரிந்த வள்ளியுடன் காதல் பூண்டவன் நீ! தெய்வயானையுடனும் வள்ளி நாயகியுடனும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகன் நீ! போற்றி, போற்றி.
விளக்கக் குறிப்புகள்
இரணகுல காரி – இரணம் – போர். குல ஹரி – குல காரி என வந்திருக்கிறது. போர்புரியும் அவுணர் குலத்தை அழிப்பவன் என பொருள்.
அருணகிரி நாதர் விமல......
அருணாசலேசுரரை முருக வேள் என்கின்றார். சிவன் வேறு முருகன் வேறு அன்று என்று உணரத் தக்கது..
செம்மைய ஞானசத்தித் திருவுருக்கொண்ட செம்மல்
எம்மின் வேறல்லன் யாமும் அவனின் வேறல்லேம் கண்டீர்
 ---- தணிகைப் புராணம்.
சரசோதிப் பெருமாள்....
சரம் = சுவாசம். இறைவனே நம்முள் உயிர்ப்பாய் (மூச்சாய்) நிற்கின்றான்.
என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்
கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே --- திருநாவுக்கரசர் தேவாரம்
இப தோகை மதியின் மகளோடும்.....
இப தோகை = யானையால் வளர்க்கப்பட்ட தேவ சேனை. மதியின் மகள் = மதி என்னும் சொல்லுக்கு வள்ளி என்னும் பொருள் உண்டு. வள்ளி மலையில் வளர்ந்த வள்ளி நாயகியைக் குறிக்கும்.
அமிர்த குற மாதொடு – அமுதா சனத்திகுற மடவாள் – திருப்புகழ், வலிவாத
சனகி – ஜானகி - ஜனகன் அன்புற்றுப் பெற்றமடப் பெண் - திருப்புகழ்,
புலியுர் வாழ்....
புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) தொழுது நின்ற தலம் சிதம்பரம். புலியூர் எனப்படும். இங்கு மருவி புலியுர் என வந்தது.
rev 30-5-2022
