பின் தொடர்வோர்

Monday 30 March 2020

407.மக்கள்தாயர்க்கு


407
பொது

          தத்ததா தத்ததன தத்ததா தத்ததன
          தத்ததா தத்ததன               தனதான

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
   விக்கும்வாழ் நர்க்குமிக                  மனதூடே
மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
   வைத்துவா டச்சமனு                  முறமேவித்
திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
   திக்கஆ விக்களவு                     தெரியாமுன்
சித்தமோ வித்துயிலு மற்றவா ழச்சிறிது
   சித்ரபா தக்கமல                      மருள்வாயே
இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
   யிட்டுயோ கத்தமரு          மிறையோர்முன்
எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
   லெட்டொணா வித்தைதனை  யினிதீவாய்
பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
   பத்தர்பா டற்குருகு                 முருகோனே 
பக்கம்யா னைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
   பச்சைமா னுக்கினிய              பெருமாளே

பதம் பிரித்து உரை

மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே

மக்கள் - பெற்ற மக்களுக்கும் தாயர்க்கும் - தாயாருக்கும் மருகர்க்கும் - மருமகப் பிள்ளைகளுக்கும் மாமர்க்கும் - மாமன்மார்களுக்கும் மனைவிக்கும் - மனையாளுக்கும் வாழ்நர்க்கும் - உடன் வாழ்பவர்களுக்கும் மிக - மிகவும். மனது ஊடே - மனத்திடத்தில்

மைத்த வேலைக்கு நெடிது உற்ற மாய துயரம்
வைத்து வாட சமனும் உற மேவி

மைத்த - கரு நிறம் கொண்ட வேலைக்கு - கடலைக் காட்டிலும் நெடிது உற்ற - பெரிதாயுள்ள மாயத் துயரம் - மாயை சம்பந்தமாக வரும் துன்பத்தை வைத்து வாட - உண்டாக்கி மனம் சோர்வு உற சமனும் உற மேவி - யமனும் வந்து சேர்ந்து.

திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி
திக்க ஆவி களவு தெரியா முன்

திக்கு நாடி - இருக்கும் இடத்தைத் தேடி கரிய - கரு நிறமான மெய்க் கடாவில் - எருமைக் கடாவின் மீது திருகி - செறுக்குடன்வந்து திக்க - என் சொற்களைக் குழற வைக்க ஆவிக்கு அளவு தெரியா முன் - என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது இறப்பதற்குமுன்).

சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது
சித்ர பாத கமலம் அருள்வாயே

சித்தம் - மனம் ஓவி - நீங்கி ஒடுக்கம் உற்று துயிலும் அற்ற - நனவும் கனவும் அற்று வாழ - நான் வாழ்வதற்கு சிறிது - (நீ) சற்று சித்ர பாதக் கமலம் அருள்வாயே - உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக

இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை
இட்டு யோகத்து அமர் இறையோர் முன்

இக்கு வேளை - கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை கருக - கருகும்படி. முக்கண் - மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு நாடி - அந்த மன்மதனின் செயலை ஆராய்ந்து கனலை இட்டு - (அவன் மீது) நெருப்பை ஏவி யோகத்து அமரும் - யோகத்தில் அமர்ந்த இறையோர் முன் - சிவபெருமானுடைய முன்னிலையில்
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல்
எட்டொணா வித்தை தனை இனிது ஈவாய்

எச்சராதிக்கும் உற நிற்கும் - இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயற்கும் முதல் - மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்டொணா - எட்ட முடியாத வித்தை தனை - ஞானப் பொருளை இனிது ஈவாய் - நன்கு உபதேசித்தவனே

பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும்
பத்தர் பாடற்கு உருகும் முருகோனே

பக்கம் - உன் பால் ஆர்வத்துடன் - ஆசையுடன் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. நாடிப் பரவும் - விரும்பிப் போற்றும் பத்தர் பாடற்கு - பக்தர்களின் பாடல்களுக்கு உருகும் முருகோனே - மனம் உருகும் முருகனே.
பக்கம் யானை திருவோடு ஒக்க வாழ குறவர்
பச்சை மானுக்கு இனிய பெருமாளே.

பக்கம் - உனது (இடது) பக்கத்தில் யானை - தேவசேனையாகிய திரு ஒக்க வாழ் - இலக்குமியுடன் பொருந்தி வாழும். அக்குறவர் - அந்த வேடர்களால் வளர்ந்த பச்சை மானுக்கு - பச்சை நிறம் கொண்ட மான் போன்ற வள்ளிக்கு இனிய பெருமாளே - இனிய பெருமாளே

சுருக்க உரை
மக்கள், தாய், மனைவி, சுற்றத்தார் ஆகியோரின் மனம் கடலினும் பெரிதாகத் துன்பம் அடைந்து சோர்வடையும்படி, யமன் தனது எருமைக் கடா
வாகனத்தின் மீது வந்து, என் சொற்கள் குழறும்படி, உயிர் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று தெரிவதற்கு முன், என் சித்தம் ஒடுங்கி,  நனவு, கனவு அற்று, நீ சற்று உன் திருவடிகளைத் தந்து அருள்வாயாக.

கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனின் செயல்களை ஆராய்ந்து, அவனைத் தம் நெற்றி கண்ணால் எரித்து யோகத்தில் அமர்ந்த சிவபெருமான் முன்னிலையில், யாவற்றிலும் எஞ்சி நிற்கும் திருமால் முதலானோர்களுக்கு எட்ட ஒண்ணாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே, மனம் நெகிழப் பாடும் அன்பர்களின் பாடல்களில் மனம் உருகும் முருகனே, உனது இடது பாகத்தில் இலக்குமியாகிய தேவசேனையுடன் மனம் பொருந்தி வாழும் வேடப் பெண்ணாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே,  என் உயிர் போகு முன் உனது தாமரைத் திருவடியைத் தந்து அருள்வாய்.

ஒப்புக
சித்தம் ஓவித் துயிலுமற்று....
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மானந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய் யாரென்செய் வார்யம தூதருக்கே
                                                               ....கந்தர் அலங்காரம்.

இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை....
    மதனுடல் திருநீறாய்...                திருப்புகழ், பாட்டிலுருகிலை

எச்சராதிக்குமுற நிற்கு மாயற்கு....
   அண்ட பந்திகள் தாமாய் வானாய்
   ஒன்றி நுங்கடை தோயா மாயோன் மருகோனே
                                                            ..திருப்புகழ் அங்கைமென்

பத்தர் பாடற்கு உருகு முருகோனே...
   மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
   வைதாரையும் அங்கு வாழ வைப்போன்....கந்தர் அலங்காரம்

No comments:

Post a Comment