பின் தொடர்வோர்

Wednesday 7 April 2021

437. பொக்குப்பை

 

437

காஞ்சீபுரம்

 


தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்

தத்தத்தத் தத்தத்                         தனதான

 

பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்

      பொய்த்தெத்துத்  தத்துக்             குடில்பேணிப்

பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்

      பொற்சித்ரக் கச்சுக்                    கிரியார்தோய்

துக்கத்துக் கத்திற் சிக்கிப்பட் டிட்டுத்

      துக்கித்துக் கெய்த்துச்                        சுழலாதே

சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்

      துச்சற்றர்ச் சிக்கப்                        பெறுவேனே

திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்

      செற்பத்ரக் கொக்கைப்             பொரும்வேலா

செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்

      செச்சைக்கொத் தொப்பித்           தணிவோனே

கக்கக்கைத் தக்கத் கக்கட்கக் கக்கிக்

      கட்கத்தத் தர்க்குப்                       பெரியோனே

கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்

      கச்சிக்குட் சொக்கப்                      பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

பொக்கு பை கத்தம் தொக்கு குத்து

பொய்த்து எத்து தத்து குடில் பேணி

 

பொக்கைப் பை - குற்றம் நிறைந்த பை கத்த(ம்) மலம் தொக்குப் பை  - கூடிய பை குத்து பொய்த்து - சுடு சொல் பொய்யோடு கலந்து எத்து - வஞ்சகம். தத்து - ஆபத்து (இவை எல்லாம் கூடிய) குடில் பேணி - குடிசையாகிய இந்த உடலை விரும்பி.

 

பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று

பொன் சித்ர கச்சு கிரியார் தோய்

 

பொச்சை - குற்றமானதும் பிச்சு - பைத்தியம் கொண்டதும் அற்ப - அற்பமானதும் கொச்சை - இழிவானதுமான. சொல் கற்று - சொற்களைக் கற்று பொன் - அழகிய சித்ர - விசித்திரமான கச்சுக் கிரியார் - கச்சு அணிந்த மலை போன்ற கொங்கைகளை உடைய விலை மாதர்களை தோய் சேருதலால் வரும்

 

துக்க துக்கத்தில் சிக்கு பட்டிட்டு

துக்கித்து எய்த்து சுழலாதே

 

துக்க துக்கத்துக்கு - பெருந் துக்கத்தில் சிக்குப் பட்டிட்டு - மாட்டிக் கொண்டு துக்கித்து - வேதனை உற்று எய்த்து -

இளைத்து சுழலாதே - சஞ்சலப் படாமல்

 

சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து

சற்று அர்ச்சிக்க  பெறுவேனோ

 

சுத்த - பரிசுத்தமான சித்தத்து - மனதுடன் பத்தி பக்தி பூண்ட பத்தர்க்கு - பக்தர்களுக்கு ஒத்து - இணையாக (நான் ஒழுகி) சற்று அர்ச்சிக்கப் பெறுவேனோ உன்னைச் சிறிதள்வேனும் பூசிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

 

திக்கு திக்கு அற்று பை தத்து அத்திக்கு

செல் பத்திர(ம்) கொக்கை பொரும் வேலா

 

திக்கு - எந்தத் திக்கிலும் திக்கு அற்று - உதவி இல்லாமல் போய் பை - பசிய. தத்து அத்திக்கு செல் - அலை மோதுகின்ற கடலுள் போய்ச் சேர்ந்த பத்ரம் கொக்கை -  இலையோடு கூடிய மாமரமாகிய சூரனோடு பொரும் வேலா - சண்டை செய்த

வேலனே.

 

செப்ப அ சொர்க்கத்து செம் பொன் தத்தைக்கு

செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே

 

செப்பச் சொர்க்கத்து - செவ்விய விண்ணுலகில் செம் பொன் - செம் பொன் போன்ற. தத்தைக்கு - கிளி போன்ற தேவசேனைக்கு.

செச்சைக் கொத்து - வெட்சி மலர்க் கொத்தால் ஒப்பித்து - அலங்கரித்து அணிவோனே - மாலை சூட்டுபவனே.

 

கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி

கண் கத்த அத்தர் பெரியோனே

 

கக்கு - (பிரமன் முதலியோர்  சரீரத்தினின்றும்) கழன்ற அக்கை - எலும்பை. தக்க - தகுந்த அக்க்கட்கு - (தமது) அங்கங்களுக்கு. அக்கு - (ஆபரணம்) ஆக்கிய. அக்கி - அக்கினி கண் கத்த அத்தர் - கண்ணை உடைய கர்த்தராகிய

தந்தையாகிய (சிவபெருமானுக்கு) பெரியோனே - (குரு நாதராக வந்த) பெரியோனே.

[அத்தர் – பெரியவர், உயர்ந்தவர்]

 

கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப

கச்சிக்குள் சொக்க பெருமாளே.

 

கற்றை - திரளான போற்று ஏத்தப் பெற்ற - துதிப் பாடல்களால் போற்றிப் பாடப்பட்ட பொன் சிற்ப - சிற்ப வேலைப்பாடுகள்

உள்ள கச்சிக்குள் - காஞ்சீபுரத்துக்குள் சொக்கப் பெருமாளே எழுந்தருளிய அழகிய பெருமாளே.

 

சுருக்க உரை

 

குற்றம் நிறைந்த மலங்களோடு கூடி, பொய்யும், வஞ்சனையும் கலந்த இந்தக் குடிசையாகிய உடலை விரும்பி, அற்பமானச் சொற்களைப் பயின்ற, மலை போன்ற கொங்கைகளை உடைய விலைமாதர்களுடன் சேர்வதால் வரும் வேதனைகளில் மாட்டிக் கொண்டு, மனம் சஞ்சலப்  படாமல், பரிசுத்தமான நெஞ்சம் கொண்ட பக்தர்களுக்கு இணையாக நான்  ஒழுகி, உன்னைப் பூசிக்கும் பாக்கியத்தைச் சிறிதளவேனும்

பெறுவேனோ?

 

எல்லா திக்குகளிலும் ஒரு உதவியும் கிட்டாத சூரன் கடலினுள் புகுந்து, மாமரமாக நிற்க, அவனையும் அவனுடைய ஏழு கிரிகளையும் அழித்த வேலாயுதனே!

செவ்விய் விண்ணுலகில் உள்ள கிளி போன்ற தேவ சேனையை மலர்களால் அலங்கரித்து சூட்டுபவனே ! பிரமன் முதலியோர் எலும்பை ஆபரணமாக ஆக்கி,

அக்கினிக் கண்ணை உடைய சிவபெருமானுக்குக் குருநாதனே ! துதி பாடல்கள் பலவற்றால் போற்றப் படும் கச்சியில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே ! உன்னைப் போற்றிப் பாடும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?

 

ஒப்புக

 

சுத்தர் சித்தத்துப் பத்திப் பத்தர்....

அவசமாகி உருகு தொண்டருடன தாகி விளையு மன்பு

னடிமை யாகு முறைமை யொன்றை அருள்வாயே.

                                                                           ..திருப்புகழ் முறுகுகாள.

 

கற்றைப் பொற் றெத்தப் பெற்ற....

துதிப் பாடல்கள் நிரம்பப் பெற்ற காஞ்சீபுரம். சைவ சமயக் குரவர் நால்வர், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், பரண தேவர்,  பட்டினத்தார் முதலியோர் கச்சியைப் போற்றிப் பாடியதைக் குறிக்கும்.

No comments:

Post a Comment