பின் தொடர்வோர்

Wednesday, 1 November 2017

327. அமலவாயு

327
பொது

கருணை மேகமே தூய கருணைவாரியே யீறில்
கருணைமேருவே தேவர் பெருமாளே
எனது யான் என்பவைகளை நீக்கி எல்லாரும் எல்லாமும் யானாகும் பெருநிலையை அருள்வாயே எனது பிரார்த்தனை


          தனன தான தானான தனன தான தானான
            தனன தான தானான                 தனதான


அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
     அமுத பான மேமூல                   அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
     அரிச தான சோபான                  மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
     மௌiது சால மேலாக          வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
     இதய பாவ னாதீத             மருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
     விபுத மேக மேபோல                வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
     வெகுதி தாமு காகாய                பதமோடிக்
கமல யோகி வீடான ககன கோள மீதோடு
     கலப நீல மாயூர                  இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
     கருணை மேரு வேதேவர்      பெருமாளே.


பதம் பிரித்து உரை

அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல
அமுத பானமே மூல அனல் மூள

அமல வாயு - பிராண வாயு ( அமலம் – மாசு அற்றது-  தூய்மையான) ஓடாத - மேற் கொண்டு செல்லாதபடி கமல நாபி மேல் - மூலாதார கமலத்தின் மீது  மூல(ம்) - அங்ஙனம் செய்ததின் மூலம் அமுத பானமே - அமுத பானம் பருகும்படி  மூல அனல் மூள  - மூலாக்கினி சுடர் விட்டு எழ.

அசை உறாது பேராத விதம் மேவி ஓவாது
அரி சதான சோபானம் அதனாலே

அசை உறாது பேராத விதமும் மேவி - மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து ஓவாது - அந்த நிலையில் இருந்து மாறாமல் அரிச(ம்) அதான - மகிழ்ச்சி தருவதான சோபானம் அதனாலே - படிப்படியாக மேலேறும் யோக முறையாலே.

எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம்
எளிது சால மேலாக உரையாடும்

எமனை மோதி - நமனையும் தாக்குவது போல் ஆகாச ககனமாம் - ஆகாயம் வரை பறந்து போகும் மனோபாவம் - மனத்தின் தன்மை எளிது சால - மிகவும் எளிதான வகையில். மேலாக உரையாடும் - மேலெழுந்து அகங்காரத்துடன் பேசுகின்ற.

எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும்
இதய பாவனா தீதம் அருள்வாயே

எனது - எனது என்ற மமகாரமும். யானும் - நான் என்ற அகங்காரமும். வேறு ஆகி - நீங்கி எவரும் - பிறர் யாவரும் யாதும் - பிற பொருள்கள் யாவும் யான் ஆகும் - நானே என்றும் இதய பாவனா தீதம் - மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையை. அருள்வாயே - தந்து அருள்வாயாக.

விமலை தோடி மீதொடு யமுனை போல ஓர் ஏழு
விபுத மேகமே போல உலகு ஏழும்


விமலை - பரிசுத்தமான தேவியின் தோடி மீதோடு - தொடி என்னும் கை வளையினின்றும். யமுனை போல - (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும். ஓர் - ஒப்பற்ற. ஏழு விபுத - எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த (விபு வியாபகம்) மேகமே போல - மேகங்களைப் போலவும் உலகு ஏழின் - ஏழு உலகங்களின்

தொடி (வளையல்) சந்ததிற்காக தோடி என்று விரிந்தது

விரிவு காணும் மாமாயன் முடிய நீளு மாறு போல
வெகு வித முக ஆகாய பதம் ஓடி

விரிவு காணும் மாமாயன்விருந்திருக்கும் பரப்பை காணவல்ல பெரிய மாயனாகிய திருமால் முடிய நீளும் மா போல - (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி பல்வேறு திசையிலும் பரந்து  விசுவ ரூபம் எடுத்தது போலவும்  (திருவிக்ரம அவதாரம் போல) வெகு வித முக ஆகாய பதம் ஓடி - பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று.

கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி
கலப நீல மாயூர இளையோனே

கமல யோனி - (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் வீடான - இருப்பிடமான ககன கோளம் மீது ஓடு - விண்ணில் உள்ள மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற
கலப நீல மாயூர - நீல தோகை விளங்கும் மயில் வாகனனே இளையோனே - என்றும் இளையவனே.
மயில், பிரமனுடைய வீடான அண்ட கோளத்துக்கு மேலே எழுந்து பறப்பதாக சொல்லப்படுகிறது.

கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல்
கருணை மேருவே தேவர் பெருமாளே.

கருணை மேகமே - கருணை மேகமே. தூய கருணை வாரியே - பரிசுத்தமான கருணைக் கடலே. ஈறு இல் - முடிவில்லாத கருணை மேருவே - கருணைப் பெரு மலையே. தேவர் பெருமாளே - தேவர்கள் போற்றும் பெருமாளே.

சுருக்க உரை

பிராண வாயுவை மேற் கொண்டு செல்லாதபடி அதை மூலாதார கமலத்தின் மீது ஒடுங்க வைத்து, மூலாக்கினி சுடர் விட்டு எழ, மனம், வாக்கு, காயம் ஆகியவை ஒரு நிலையில் நிலைத்து நின்று, படிப்படியாக மேலேறும் சிவ யோக முறையால், அகங்காரத்துடன் பேசுகின்ற நான், எனது என்னும் இருமைகள் நீங்க, எவரையும், யாவற்றையும் நானே
என்று பாவிக்கும் உயர் நிலையை எனக்குத் தந்து அருள்வாயாக.

விமலையாகிய பார்வதி தேவியின் கை வளையினின்றும் ஓடி வந்த யமுனை நதி போலவும், மேகங்களைப் போலவும், திருமால் விசுவ ரூபம் எடுத்தது போலவும், பிரமனின் வீடான விண்ணில் உள்ள மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற நீல மயில் வாகனனே. கருணை மலையே. எனது யானும் வேறாகி, எவரும் யாதும் யானாகும் மனோபாவத்தை எனக்குத்தந்து அருள வேண்டும்.

கருணை மேக மேதூய கருணை வாரி
கருணைமேகம், கருணவாரி, கருணைமேரு’


கருணை பொழிவதால் ‘மேகம்’ என்றார். கடல் இல்லையானால் மேகம் பொழிய இயலாது. ஆகவே, மேகத்திற்குக் கடல் ஆதாரம். ஆதலினால் ‘கருணைவாரி’ என்றார். கடல் உப்புக்கடல். ஆதலால், ‘தூய கருணை வாரி’ என்றார். கடலுக்கும் உலகுக்கும் ஆதாரமாக இருப்பது மேருமலை யாதலினால் ‘கருணை மேரு’ என்றார். மேகம், வாரி, மேரு என்ற மூன்றாக முருகவேளை உருவகம் செய்தனர். கைமாறு கருதமால் உதவுவது மேகம். கரையில்லாமல் நின்று விலையுயர்ந்த மணி முத்துக்களுக்கு உறைவிடமாயது கடல். என்றும் சலியாமல் உயர்ந்து நிற்பது மேரு. இதுமோல் கடவுள் தன்மைகள் விளங்கிகின்றன. – கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் 

விளக்கக் குறிப்புகள்

1 எமனை மோதி ஆகாச கமன மா.......
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யென துபடை தீர நீயும் அருள்வாயே
                                 --- திருப்புகழ்: ஒருவழியடாது
2 எனதி யானும் வேறாகி....
எனது – புறப்பற்று: யான்- அகப்பற்று

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்                     --- திருக்குறள்

3 யமுனை போல ஓர்..
    சிவபெருமான் ஒருமுறை உமையம்மையின் திருக் கரங்களிலே தன் முகத்தைப் பதிக்க, தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை பெருக்கெடுத்து, அதுவே கங்கை, யமுனை முதலிய நதிகளாயின என்பது புராண வரலாறு. இந்தப் புராணச் செய்தி குறிப்பிடப்படுகிறது.

வள்ளிமலை ஸ்வாமிகளுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள தொடர்பு 


No comments:

Post a Comment