பின் தொடர்வோர்

Wednesday 10 July 2019

376. தலைவலயபோகமும்


376
பொது

அறிவால் விளையும் அநுபூதி மட்டுமே மூலப் பொருளை உணர வல்லது என உணர்த்தப்படுகிறது 


          தனதனன தானனந் தனதனன தானனந்
          தனதனன தானனந்                          தனதான

தலைவலய போகமும் சலனமிகு மோகமுந் 
    தவறுதரு காமமுங்                           கனல்போலுந்
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்
    சமயவெகு ரூபமும்                                பிறிதேதும்
அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்
   டறியுமொரு காரணந்                          தனைநாடா
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
   றபரிமித மாய்விளம்                          புவதோதான்
கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங்
   களபமொழி யாதகொங்                     கையுமாகித்
கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங்
   கருதியிது வேளையென்                            றுகிராத
குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்
   குலிசகர வாசவன்                                     திருநாடு
குடிபுகநி சாசரன் பொடிபட மகீதரன்
   குலையநெடு வேல்விடும்                   பெருமாளே.

பதம் பிரித்து உரை

தலை அலய போகமும் சலன(ம்) மிகு மோகமும்
தவறு தரு காமமும் கனல் போலும்

தலை  அலய போகமும் - சிறப்புற்ற எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும். சலன மிகு மோகமும் - கலக்கம் மிக்க ஆசைகளும். தவறு தரு - பிழையுள்ள நெறியில் போகும்படி செய்யும். காமமும் - காம இச்சையும். கனல் போலும் - நெருப்பைப் போல.

தணி அரிய கோபமும் துணி(வு) அரிய லோபமும்
சமய வெகு ரூபமும் பிறிது ஏதும்

தணிய அரிய - அடக்குதற்கு முடியாத. கோபமும் - சினமும். துணிவு அரிய - துணிந்து ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட விடாத . லோபமும் - ஈயாமைக் குணமும் சமய வெகு ரூபமும் - சமயக் கோட்பாடுகளால் விளையும் வேடங்களும். பிறிது ஏதும் - பிற எதுவும்.

அலம் அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு
அறியும் ஒரு காரணம் தனை நாடாது

அலம் அலம் - போதும் போதும் எனா எழுந்தவர்கள் - என்று எழுந்தவர்கள் அனுபூதி கொண்டு அறியுமாறு - தங்களுடைய ஞான அறிவைக் கொண்டு அறியும் - அறிகின்ற ஒரு காரணன் தனை நாடாது - ஒரு மூலப் பொருளை நாடாமல்.

அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று
அபரி மிதமாய் விளம்புவதோ தான்

அதி மத புராணமும் - மதக் கொள்கைகளையே அதிகமாகச் சொல்லும் புராண வகைகளும் சுருதிகளும் ஆகி நின்று - வேத மொழிகளும் ஆய்ந்து எடுத்து அபரிமிதமாய் - அளவில்லாத வகையில் விளம்புவதோ தான் - பேசுவது வெறும் பேச்சாகும்.

கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும்
களபம் ஒழியாத கொங்கையுமாகி

கலக இரு பாணமும் - காமப் போரை விளைக்கும் இரண்டு பாணங்களாகிய (கண்களும்) திலக ஒரு சாபமும் - பொட்டு இட்டுள்ள ஒப்பற்ற வில்லைப் போன்ற நெற்றியும் களபம் ஒழியாத கொங்கையுமாகி - சந்தனக் கலவைச் சாந்து நீங்காத தனங்களுமாகி.

கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும்
கருதி இது வேளை என்று கிராத

கவரும் அவதாரமும் - உள்ளத்தைக் கவரும் தோற்றமும் கொடிய பரிதாபமும் - வேடரிடத்தே வளர்ந்து தினைப்புனம் காக்கும் பரிதாபமான தொழிலும் கருதி - கருத்தில் வைத்து இது வேளை என்று - (ஆட்கொள்ள)  இதுதான் தக்க சமயம் என்று. கிராத - வேடர்களின்.

குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும்
குலிசகர வாசவன் திருநாடு

குல திலக மானுடன் - குலத்தில் உதித்த மானாகிய வள்ளியுடன் கலவி புரிவாய் - புணர்ச்சி நாடிப் புரிவாய் பொரும் - சண்டை செய்ய வல்ல குலிச கர - குலிசாயுதத்தை ஏந்திய வாசவன் - இந்திரன் திரு நாடு குடி புக - பொன்னுலகத்தில் குடி ஏற.

குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன்
குலைய நெடு வேல் விடும் பெருமாளே.

நிசாசுரன் - அசுரனாகிய சூரன்  பொடிபட - பொடிபட்டு விழ  மகீதரன் - ஆதி சேஷன்  குலைய - நடுநடுங்க நெடு வேல் விடும் பெருமாளே - வேலைச் செலுத்திய பெருமாளே.

சுருக்க உரை

எல்லையற்ற இன்பமும், சஞ்சலம் மிக்க ஆசைகளும், தீய வழியில் போகும்படி செய்யும் காம இச்சையும், அடங்காத கோபமும், உலோபமும், சமயக் கோட்பாடுகளால் ஏற்படும் வேடங்களும், பிற பிழைகளும் போதும், போதும். ஞானிகள் அறிவாலும், அனுபூதியைக் கொண்டும் அறிகின்ற ஒரு மூலப் பொருளை நாடி உணராது, மதக் கொள்கைகளையே எடுத்துரைக்கும் புராணங்களும், வேத மொழிகளும் வெறும் பேச்சே தவிர பயன் அளிக்காதவையாகும்.

காமப் போரை விளைவிக்கும் பாணங்களாகிய கண்களும், வில்லைப்போன்ற நெற்றியும், அழகிய கொங்கைகளும், உள்ளத்தைக் கவரும் உருவமும் கொண்டு, வேடர்களிடையே வளர்ந்துத் தினைப் புனங் காக்கும் தொழிலில் ஈடுபட்ட வள்ளியின் பரிதாபமான நிலையையும் கருத்தில் வைத்து, அவளை ஆட்கொள்ள, இது தான் தக்க சமயம் என்று அவளுடன் புணர்ச்சி செய்தவனே, இந்திரன் பொன்னுலகுக்குக் குடி ஏறவும், சூரன் பொடிபடவும், ஆதிசேஷன் நடுங்கவும், வேலைச் செலுத்திய பெருமாளே, அறிவால் விளையும் அநுபூதி மட்டுமே மூலப் பொருளை உணர வல்லது.

ஒப்புக
பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணுமின்
 வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே…………………………..சம்பந்தர் தேவாரம்.




No comments:

Post a Comment