பின் தொடர்வோர்

Monday 2 March 2020

405.பொதுவதாய்


405
பொது

                தனன தாத்தன தனன தாத்தன
                தனன தாத்தன              தந்ததான

பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
   இரவு போய்ப்புகல்                         கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ய்பெரு
   வெளிய தாய்ப்புதை                       வின்றயீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
   கமுத மாய்ப்புல                           னைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
   கருணை வார்த்தையி                    ருந்தவாறென்    
உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
   உலகு போற்றிட                             வெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டிய
   வுரவு கோக்கிரி                          நண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
   முலைகள் தேக்கிட                     வுண்டவாழ்வே
முளரி பாற்கடல் சயில மேற்பயில்
   முதிய மூர்த்திகள்                            தம்பிரானே.

பதம் பிரித்தல்
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல்
இரவு போய் புகல்கின்ற வேத

பொதுவதாய் - (எவ்வுயிர்க்கும்) பொதுவானதாகி தனி முதலாய் - தனிப்பட்ட மூல முதற் பொருளாகி பகல் இரவு போய் - பகல், இரவு இவைகளைக் கடந்து. புகல்கின்ற வேதப் பொருள் அதாய் - சொல்லப்படுகின்ற வேதப் பொருளாய்

பொருள் அதாய் பொருள் முடிவு அதாய் பெரு 
வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல்

பொருள் முடிவதாய் - அப்பொருளின் முடிவானதாகி பெரு வெளி அதாய் - பெரிய வெட்ட வெளியாய் ஆகி புதைவின்றி - மறைவு யாதொன்றுமன்றி ஈறு இல் - முடிவு இல்லாததான

கதி அதாய் கருது அரியதாய் பருக
அமுதமாய் புலன் ஐந்தும் மாய

கதி அதாய் - புகலிடமாகி. கருத அரியதாய் - எண்ணுவதற்கும் முடியாததாகி பருக அமுதமாய் - உண்ணும் அமுதம் போல் இனிமையானதாகி (விளங்கி). புலன் ஐந்தும் மாய - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தும் ஒடுங்கி அழிய.

கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய
கருணை வார்த்தையில் இருந்த ஆறு என்

கரணம் - (மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும்) ஐம்பொறிகளின் சேட்டைகளை மாய்த்து - அழித்து. என்னை மரணம் மாற்றிய - மரண பயத்தை நீக்கிய கருணை வார்த்தையில் - (உனது) அருள் மொழி உபதேசம். இருந்தவாறு என் - என்ன உயர்ந்த நிலையான அற்புதம் இது.

உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ
உலகு போற்றிட வெம் கலாப

உததி - கடல் கூப்பிட - ஓலமிடவும் நிருதர் ஆர்ப்பு எழ - அசுரர்கள் போரொலி செய்யவும் உலகு போற்றிட - உலகத்தோர் போற்றி செய்யவும் வெம் - விருப்பத்தைத் தரும். கலாப - தோகை மயிலாகிய.

ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய
உரவ கோ கிரி நண்ப வானோர்

ஒரு - ஒப்பற்ற பராக்ரம - வீரம் உள்ள துரகம் - குதிரையை ஓட்டிய - ஓட்டிச் செலுத்திய உரவ - வலிமை வாய்ந்தவனே கோக் கிரி - பூமியிலுள்ள மலைகளிடத்தே நண்ப - விருப்பம் உள்ளவனே வானோர் - தேவர்களுக்கெல்லாம்.
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே

முதல்வ - தலைவனே பார்ப்பதி புதல்வ - பார்வதியின் மகனே கார்த்திகை - கார்த்திகைப் பெண்களின் முலைகள் - கொங்கைகளில் தேக்கிட - (பால்) நிரம்பி வர உண்ட வாழ்வே - அதைப் பருகிய செல்வனே.

முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில்
முதிய மூர்த்திகள் தம்பிரானே.

முளரி - தாமரை மீதும் பாற்கடல் - திருப்பாற் கடலிலும் சயிலம் - (கயிலை) மலையின் மீதும்பயில் - (முறையே) வீற்றிருக்கும் முதிய மூர்த்திகள் - பழையவர்களாகிய அயன், அரன், அரன் எனப்படும் கடவுளர்களுக்கு தம்பிரானே - தம்பிரானே.

சுருக்க உரை

எல்லா உயிர்களுக்கும் பொதுவாய், தனிப் பொருளாய், முதற் பொருளாய், இரவு பகல் ஆகியவைகளைக் கடந்து நிற்கும் வேதப் பொருளாய், பெரிய வெட்ட வெளியாய், மறைவு, முடிவு இல்லாததாய், புகலிடமாய், எண்ணுவதற்கும் அரியதாய் விளங்கி, ஐந்து புலன்களும், நாலு கரணங்களும் அழிய, எனக்கு மரண பயம் நீங்க உனது கருணையான உபதேசம் இருந்தவாற்றை என்ன என்று சொல்லுவேன்?

கடல் ஓலமிட, அசுரர்கள் பேரொலி செய்ய, உலகோர் போற்ற, மயிலை ஓட்டிச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, மலைகளில் விருப்பம் உள்ளவனே, தேவர்கள் தலைவனே, கார்த்திகை மாதர்களின் கொங்கைகளில் பாலை உண்டவனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தம்பிரானே, எனக்கு உபதேசித்த உனது கருணையை
என்ன என்று சொல்லுவது?

விளக்கக் குறிப்புகள்

இப்பாடலில் மெய்ப் பொருள் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.
இதே கருத்து கூறப்பட்ட மற்ற திருப்புகழ்ப் பாடல்கள்   ---

தொடர் வுணர அரிதாய தூரிய பொருளை.                    . ….    சுருதிவெகு
 கதறிய் கலைகொடு சுட்டாத் தீர்பொருள்                        ….கதறியகலை
 அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை  எப்பொருளுமாய்..                                                                                                          அகரமுதலென
குருடர் தெரிவரிய தொரு பொருள் தெரிய நிகழ்மனது       …குதறுமுனை
சுருதியாய் சுருதிகளின் மேற்சுடராய்                                  …..பருதியாய்
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது.                        ......சுருதியூடு
அறிவுமறி யாமையுங் கடந்த அறிவு திருமேனி யென்று…       ..குகையில்

 ஒப்புக
 முதிய மூர்த்திகள் தம்பிரானே...
     முடிவி லாத்திரு வடிவை நோக்கிய
     முதிய மூர்த்திகள்   தம்பிரானே              ...திருப்புகழ், குடருநீர்.

கரண மாய்த்து எனை மரண மாற்றிய....
  கரணமு மொழியத் தந்த ஞானமி ருந்தவாறென்....திருப்புகழ்
   அலகிலவு.
  மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்துணை...கந்தர் அலங்காரம்.
 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete