பின் தொடர்வோர்

Wednesday 24 March 2021

434. படிறொழுக்கமும்

 

434


காஞ்சீபுரம்

                  தனன தத்தன தனன தத்தன 

           தனன தத்தன     தனதான 

                           இருவினைகள் அகல,

உனது திருவடியைத் தந்து அருள்

 

படிறொ ழுக்கமு மடம னத்துள 

  படிப ரித்துட                 னொடிபேசும் 

பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் 

  பலகொ டுத்தற                உயிர்வாடா 

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட 

  விதன முற்றிட                 மிகவாழும் 

விரகு கெட்டரு நரகு விட்டிரு 

  வினைய றப்பத              மருள்வாயே 

கொடியி டைக்குற வடிவி யைப்புணர் 

  குமர கச்சியி                 லமர்மார்பா 

குரவு செச்சைவெண் முளரி புத்தலர் 

  குவளை முற்றணி              திருமார்பா 

பொடின டப்பட நெடிய விற்கொடு 

  புரமெ ரித்தவர்                  குருநாதா 

பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை 

  பொருது ழக்கிய               பெருமாளே. 

 

பதம் பிரித்து உரை

 

படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ள  

படி பரித்து உடனொடி பேசும் 

 

படிறு ஒழுக்கம் - வஞ்சனை கூடிய நடவடிக்கையை மட மனத்து - அறியாமை கொண்ட மனத்தில் உள்ளபடி - உள்ளபடியே பரித்து - மேற்கொண்டு உடனொடி பேசும் - அப்போதைக்கப் போதே பேசும்

 

பகடிகட்கு உ(ள்)ளம் மகிழ மெய் பொருள் 

பல கொடுத்து அற உயிர் வாடா 

 

பகடிகட்கு - வெளி வேடக்காரர்களான விலை மாதர்களுக்கு உள்ளம் மகிழ - அவர்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு மெய் - உடலையும்  பொருள் - பொருளையும் பல கொடுத்து - பல முறையும் கொடுத்து அற உயிர் வாடா - பின்னர் மிகவும் உயிர் வாட்டமுற

 

மிடி என பெரு வடவை சுட்டிட 

விதனம் உற்றிட மிக வாழும்

 

மிடி என - வறுமை என்னும் பெரு வடவை - பெரிய வடவாமுகாக்கினி  சுட்டிட - என்னைச் சுடுவதால் விதனம் முற்றிட - துன்பம் அதிகரிக்க மிக வாழும் - நிகவும் அத்துன்பத்துடன் வாழும்

விரகு கெட்டு அரு நரகு விட்டு இரு 

வினை அற பதம் அருள்வாயே  

 

விரகு கெட்டு - அழிவு நிலை அடைந்து அரு நரகு விட்டு - அரு நரகில் விழுவது விலக  இரு வினை அற - என் இரு வினைகளும் ஒழிய பதம் அருள்வாயே - உன் திருவடியைத் தந்தருளுக

கொடி இடை குற வடிவியை புணர் 

குமர கச்சியில் அமர்வோனே 

 

கொடி இடைக் குற வடிவியை - கொடி போலும் இடையை உள்ள குறக்குலத்து அழகியை புணர் - கலந்த குமர - குமரனே கச்சியில் அமர்வோனே - கச்சியில் வீற்றிருப்பவனே

குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் 

குவளை முற்று அணி திருமார்பா 

 

குரவு செச்சை வெண் முளரி - குரா, வெட்சி, வெண் தாமரை புத்தலர் - புதிதாக மலர்ந்த குவளை - குவளை மலர் முற்று அணி திரு மார்பா - இவற்றை நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பனே.

பொடி படப்பட நெடிய வில் கொடு 

புரம் எரித்தவர் குருநாதா 

 

பொடிப்படப்பட - நன்றாகப் பொடியாகும்படி நெடிய வில் கொண்டு - பெரிய மேரு மலையாகிய வில்லால் புரம் எரித்தவர் - திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய குரு நாதா - குரு  மூர்த்தியே

பொரு திரை கடல் நிருதரை படை 

பொருது உழக்கிய பெருமாளே. 

 

பொரு திரைக்கடல் - மாறுபட்டு எழும் அலை கொண்ட கடலில் இருந்த நிருதரைப் படை - அசுரர் னையையும் பொருது உழக்கிய பெருமாளே - சண்டையிட்டுக் கலக்கியப் பெருமாளே

 

சுருக்க உரை 

 

வஞ்சகமும் அறியாமையும் தந்திரமும் மிக்க வெளி வேடதாரிகளான விலை மாதர்கள் உறவில் மகிழ்ந்து, உடல், பொருள் அனைத்தையும் அவர்கள் இன்பத்துக்கு  ஈடாகத் தந்து, உயிர் வாடி, வறுமை என்னும் மிடியில் சிக்கி, அத்துன்பத்துடன் வாழும் அழிவை நீக்கி, நரகத்திலிருந்து விலகி, என் இரு வினைகளும் ஒழிய உனது திருவடியைத் தந்து அருளுக. 

 

குறவர் குலத்து அழகியான வள்ளியைக் கலந்த குமரனே ! கச்சியில் உறைபவனே ! குரா, வெட்சி, வெண் தாமரை, குவளைப் பூ  இவற்றை அணிந்த மார்பனே ! வில்லாக ஏந்தித் திரிபுரம் அழித்த மேரு மலையை சிவபெருமானின் குருநாதரே ! கடல் போல் எழுந்து வந்த அசுரர்களை வேலால் கலக்கிய பெருமாளே ! என் இரு வினைகளும் ஒழிய உன் திருவடிகளை அருள்வாய். 

 

விளக்கக் குறிப்புகள் 

 பகடி - வெளி வேடதாரிகள். உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசி நடிப்பவர்கள்.

 விதனம் - துன்பம்.  வறுமையால் வருந்தி அத்துன்ப வாழ்விலேயே நெடுங்காலம் வாழ்வது.  அப்படி வாழ்கின்ற நிலைமை அழிய வேண்டும்.

 

 

ஒப்புக

 

மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட ..... 

 மிடியாற் படியில் விதனப் படார் வெற்றி வேற் பெருமான்

                                                              ...கந்தர் அலங்காரம் . 

மிடியென்று ஒரு பாவி வெளிப்படடினே  ....கந்தர் அனுபூதி. 

வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து 

நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி அருள்வாயே

                                            ....திருப்புகழ், அறிவிலாதவ). 

 

 இருவினை அற ---

 நல்வினை, தீவினை என்ற இரண்டும் நீங்க வேண்டும்.

 

இருவினைய மும்மலமும் அற

இறவியொடு பிறவி அற..  ---  திருப்புகழ்,  அறுகுநுனி.

No comments:

Post a Comment