பின் தொடர்வோர்

Thursday 24 February 2022

484. கைத்தருணசோதி

 484

சிதம்பரம்

 


                   தத்த தனதான தத்த தனதான

                       தத்த தனதான              தனதான

 

கைத்த ருணசோதி யத்தி முகவேத

     கற்ப கசகோத்ரப்                       பெருமாள்காண்

கற்பு சிவகாமி நித்ய கலியாணி

     கத்தர் குருநாதப்                       பெருமாள்காண்

வித்து ருபராம ருக்கு மருகான

     வெற்றி யயில்பாணிப்                பெருமாள்காண்

வெற்பு ளகடாக முட்கு திரவீசு

     வெற்றி மயில்வாகப்                  பெருமாள்காண்

சித்ர முகமாறு முத்து மணிபார்பு

      திக்கி னினிலாதப்                    பெருமாள்காண்

தித்தி மிதிதீதெ னொத்தி விளையாடு

     சித்ர ரகுராமப்                           பெருமாள்காண்

சுத்த விரசூரர் பட்டு விழவேலை

      தொட்ட கவிராஜப்                     பெருமாள்காண்

துப்பு வளியோடு மப்பு லியுர்மேவு

     சுத்த சிவஞானப்                            பெருமாளே.

 

பதம் பிரித்து உரை

 

கை தருண சோதி அத்தி முக வேத

கற்பக சகோத்ர பெருமாள்காண்

கை = துதிக்கை உடையவரும். தருண = இளமை வாய்ந்தவரும். சோதி = சோதி வடிவானவரும். அத்தி முக = யானை முகத்தை உடையவரும். வேத = வேதப் பொருளானவரும். கற்பக = கற்பக விநாயகர் என்னும் நாமம் உடையவரும் (ஆகிய கணபதியின்). சகோத்ரப் பொருமாள் காண் = தம்பி நீ தான் 

கற்பு சிவகாமி நித்ய கலியாணி

கத்தர் குரு நாத பெருமாள் காண்

கற்பு சிவகாமி = கற்பு நிறைந்த சிவகாம சுந்தரியும். நித்ய கலியாணி = நித்திய கல்யாணியுமாகிய பார்வதியின். கத்தர் = தலைவனாகிய சிவபெருமானின். குரு நாதப் பெருமாள்காண் = குரு நாதப் பெருமான் நீ தான் 

வித்து ரூப ராமருக்கு மருகான

வெற்றி அயில் பாணி பெருமாள் காண்

விந்து ரூப ராமருக்கு = மழைத் துளி பெய்யும் மேக நிறம் கொண்ட ராமனுக்கு. மருகான = மருகனான. வெற்றி அயில் பாணிப் பெருமாள் காண் = வெற்ற வேலைக் கையில் ஏந்திய பெருமான் நீ தான் 

வெற்பு உள கடாகம் உட்கும் திர வீசு

வெற்றி மயில் வாக பெருமாள் காண்

வெற்பு உள கடாகம் = மலைகள் உள்ள அண்ட கோளகைகள். உட்கும் = அஞ்சுகின்ற. தீர = வலிமையுடன். வீசு = தோகையை வீசும். வெற்றி மயில் வாகப் பெருமாள் காண் = வெற்றி மயிலை வாகனமாகக் கொண்டவன் நீ தான் 

சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு(ம்)

திக்கினின் இ(ல்)லாத பெருமாள் காண்

சித்ர முகம் ஆறும் = அழகிய ஆறுமுகங்களும். முத்து மனி மார்பும் = மாலைகள் அணிந்துள்ள திரு மார்பும். திக்கினின் = எந்தத் திசையிலும். இ(ல்)லாதப் பெருமாள்காண் = இல்லாத (அழகைக் கொண்ட) பெருமான் நீ தான் 

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு

சித்ர குமார பெருமாள் காண்

தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு = தித்திமி திதே என்று தாளம் இட்டு விளையாடும். சித்திர = அழகிய. குமாரப் பெருமாள் காண் = குமாரப் பெருமான் நீ தான் 

சுத்த வீர சூரர் பட்டு விழ வேலை

தொட்ட கவி ராஜ பெருமாள் காண்

சுத்த வீர = சுத்த வீரனே. சூரர் பட்டு விழ = அசுரர்கள் அழிந்து விழும்படி. வேலை தொட்ட = வேலாயுதத்தைச் செலுத்திய. கவி ராஜப் பெருமாள் காண் = கவிராஜப் பெருமான் நீ தான்

துப்பு வ(ள்)ளி ஓடும் அப்புலியூர் மேவு

சுத்த சிவ ஞான பெருமாளே.

துப்பு = தூய்மையான. வ(ள்)ளி ஓடும் = வள்ளி நாயகியுடன். அப் புலியுர் மேவும் = அந்தப் புலியூர் என்னும் தலத்தில் மேவும். சுத்த ஞானப் பெருமாளே = சுத்த சிவ ஞானப் பெருமாளே.

 

சுருக்க உரை 

துதிக்கையை உடையவரும், இளமை வாய்ந்தவரும், சோதி வடிவானவரும், யானை முகத்தை  உடையவரும், வேதப் பொருளானவரும் ஆகிய கணபதியின் தம்பி நீ தான். கற்புள்ள சிவகாம சுந்தரியின் தலைவனான சிவபெருமானுடைய குரு நாதர் நீ தான். மேக வண்ண

இராமனுக்கு மருகன் நீ தான். தோகையை வலிமையுடன் விரித்தாடும் மயில் வாகனன் நீ தான். அழகிய ஆறு முகங்களும் எத்திக்கிலும் இல்லாத அழகுடையவன் நீ தான்தாளத்துடன் விளையாடும் குமாரப் பெருமாள் நீ தான். வீரம் பொருந்திய அசுரர்கள் அழியும்படி வேலை விட்ட கவி ராஜன் நீ தான். தூய்மையான வள்ளியோடு சிதம்பரத்தில் மேவிய பெருமாளே. என்னைக் காத்தருள் வேண்டும்.

 

  விளக்கக் குறிப்புகள்

 

சகோத்ரப் பெருமாள் காண்...

ஒரே கோத்திரத்தைக் கொண்டவர்கள்.

ஒப்புக:  என் தாதை சதாசிவ கோத்திரன்அருள் பாலா...

                           -       திருப்புகழ்,  அந்தோமனமே.

 

வீசு வெற்றி மயில் வாக....

ஒப்புக: வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்

தசைபடு கால்பட் டசைந்தது மேரு..கந்தர் அலங்காரம் 11. 

Rev 30-8-2022

No comments:

Post a Comment