பின் தொடர்வோர்

Sunday 4 August 2019

381.தோரணகனக


381
பொது

                  தானன தனன தானன தனன
                  தானன தனன          தனதான

தோரண கனக வாசலில் முழவு
     தோல்முர சதிர                                        முதிராத
தோகையர் கவரி வீசவ யிரியர்
     தோள்வலி புகழ                                     மதகோப
வாரண ரதப தாகினி துரக
     மாதிர நிறைய                                         அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
     வார்கழ லொழிய                           மொழியேனே
பூரண புவன காரண சவரி
     பூதர புளக                                               தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
     பூபதி நகரி                                             குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி 
   ஆரியன் வெருவ                                     மயிலேறு
மாரிய பரம ஞானமு மழகு
   மாண்மையு முடைய                           பெருமாளே.

பதம் பிரித்து உரை

தோரண(ம்) கனக வாசலில் முழவு
தோல் முரச(ம்) அதிர முதிராத

தோரண - தோரணம் கட்டியுள்ள. கனக - பொன் மயமான. வாசலில் - (அரண்மனையின்) வாயலில். முழவு தோல் முரசம் அதிர - முழவு, தோல் முரச வாத்தியம் ஆகியவை  பேரொலி செய்ய. முதிராத - இளம் பருவத்தினரான.

தோகையர் கவரி வீச வயிரியர்
தோள் வலி புகழ் மத கோப

தேகையர் - பெண்கள். கவரி வீச - சாமரம் வீச. வயிரியர் - பாணர். தோள் வலி புகழ - எனது புய வலிமையைச் சிறப்பித்துப் புகழ. மத கோப - மதமும் கோபமும் கொண்டதுமான.

வாரணம் ரத பதாகினி துரக
மாதிர(ம்) நிறைய அரசாகி

வாரணம் - யானை. ரத - தேர். பதாகினி - காலாட் படைகள். துரக - குதிரைப் படைகள். மாதிர(ம்) நிறைய - திசைகளில் நிரம்பி விளங்க. அரசாகி - ஒரு அரசனாகி.

வாழினும் வறுமை கூரினும் நினது
வார் கழல் ஒழிய மொழியேனே

வாழினும் - வாழ்ந்திருந்தாலும். வறுமை கூரினும் - தரித்திர நிலையை அடைந்தாலும். நினது - உன்னுடைய. வார் கழல் ஒழிய - நேர்மை பொருந்திய திருவடிகளைத் தவிர மொழியேனே - வேறு எதையும் நான் புகழ மாட்டேன்.

பூரண புவன காரண சவரி
பூதர புளக தன பார

பூரண புவன - எல்லா உலகங்களுக்கும். காரணா - மூலப் பொருளே. சவரி - குறத்தியின். பூதர - மலை போன்றதும். புளக - புளகம் கொண்டதுமான. தன பார - கொங்கைப் பாரங்களை.

பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி குடியேற

பூஷண - (மார்பில்) அணியாகக் கொண்டுள்ளவனே. நிருதர் - அசுரர்களை. தூஷண - கண்டனம் செய்தவனே.  விபுதர் - தேவர்களின். பூபதி - அரசனாகிய இந்திரனின். நகரி குடியேற - பொன்னுலகில் குடியேறும்படி.

ஆரண வனச ஈரிறு குடுமி
ஆரியன் வெருவ மயில் ஏறும்

ஆரணம் - வேதம் ஓதுபவனும். வனச - தாமரையில் இருப்பவனும். ஈரிரு - நான்கு. குடுமி - குடுமிகளை உடையவனுமாகிய. ஆரியன் - மேலோனாகிய பிரமன். வெருவ - அச்சம் கொள்ளும்படி. மயில் ஏறும் ஆரிய - மயிலில் மேல் ஏறி வரும் பெரியோய்.

ஆரிய பரம ஞானமும் அழகும்
ஆண்மையும் உடைய பெருமாளே.

பரம - மேலான. ஞானமும் - அறிவும். அழகும் அழகும் ஆண்மையும் - வீரமும். உடைய பெருமாளே - கொண்ட பெருமாளே.

சுருக்க உரை
தோரணங்கள் கட்டிய அரண்மனை வாயிலில் முரசுகள் போரொலி செய்யவும், இளம் பெண்கள் கவரி வீசவும், பாணர்கள் தம் வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடவும், யானை, தேர், குதிரை, காலாட் படைகள் நிரம்பி விளங்கவும் நான் அரசான இருந்தாலும், வறுமை மிகுந்து கீழ் நிலையை அடைந்தாலும், நான் உன் திருவடிகளைத் தவிர வேறு எதையும் பற்றியும், யாரைப் பற்றியும் பேச மாட்டேன்.
முழு முதற் பொருளே, எல்லா உலகங்களுக்கும் காரணனேம், குறத்தியாகிய வள்ளியின் புளகம் கொண்ட கொங்கைகளை மார்பில் அணியாகக் கொண்டவனே, அசுரர்களைக் கண்டித்தவனே.
தேவர்கள் அரசனான இந்திரன் தன் பொன்னுலகுக்குக் குடி போகும் பொருட்டும், பிரமன் அச்சம் கொள்ளும்படியும் மயிலின் மீது ஏறி வரும் மேலோனே, மேலான ஞானத்தையும், அழகையும், ஆண்மையையும் உடைய பெருமாளே,
 உனது திருவடிகளைத் தவிர வேறு எதையும் பற்றிப் பேச மாட்டேன்.

ஒப்புக
1. வயிரியர் தோள்வலி புகழ...
  செழுமணி சேர்ந்த பீடிகையிலிசை வாய்ந்த பாடல்
  வயிரியர் சேர்ந்து பாட   இருபாலும்...              திருப்புகழ், தினமணிசார்.
  நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோயே
.                                                                                              .புற    நானூறு
2. ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ...
  நான் மறைவிதியை நடங்கு சிறைவைத்துப்
  படைப்பு முதல் மாயவான் முதற் கூடித்                                 ...கல்லாடம்.




No comments:

Post a Comment