பின் தொடர்வோர்

Friday 23 August 2019

386.நாளும் மிகுத்த

386
பொது

                                                தான தனத்த     தனதான

நாளு மிகுத்த        கசிவாகி
  ஞான நிருத்த    மதைநாடும்    
ஏழை தனக்கு        மனுபூதி
   ராசி தழைக்க அருள்வாயே
பூளை யெருக்கு      மதிநாக
   பூண ரளித்த  சிறியோனே
வேளை தனக்கு      சிதமாக
   வேழ மழைத்த  பெருமாளே.

பதம் பிரித்து உரை

நாளும் மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தம் அதை நாடும்

நாளும் - தினந்தோறும் மிகுத்த - மிக்க. கசிவாகி - மனம் நெகிழ்ந்தவனாய் ஞான நிருத்தம் அதை - உனது ஞான நடனக் கோலத்தை நாடும் - காண விரும்பும்.

ஏழை தனக்கும் அனுபூதி
ராசி தழைக்க அருள்வாயே

ஏழை தனக்கும் - ஏழையான எனக்கும் அனுபூதி - அனுபவ ஞானம் என்னும் ராசி - யோகம் செய்யும் பாக்கியம் தழைக்க - பெருகி விளங்க அருள வேண்டும்.

பூளை எருக்கு மதி நாக(ம்)
பூணர் அளித்த சிறியோனே

பூளை எருக்கு மதி நாகம் - பூளைப் பூ, எருக்கு, நிலவு பாம்பு. பூணர் - (இவைகளைப்) ஜடாமுடியில் தரித்துள்ள (சிவபெருமான்) அளித்த - ஈன்றருளிய சிறியோனே - குழந்தேயே.

வேளை தனக்கு உசிதமாக
வேழம் அழைத்த பெருமாளே.


வேளை தனக்கு - உனக்கு வேண்டியிருந்த சமயத்தில் உசிதமாக - தக்க சமயத்தில் வேழம் அழைத்த பெருமாளே - யானையாகிய விநாயகரை வரவழைத்த பெருமாளே.

சுருக்க உரை

தினந்தோறும் மனம் கசிவுற்று, உனது ஞான நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும், யோகம் செய்யும் பாக்கியத்தை அருள் புரிய வேண்டும். பூளைப்பூ, எருக்கு, மதி, பாம்பு ஆகியவற்றைப் பூண்ட சிவபெருமான் ஈன்ற குழந்தையே, உனக்கு வேண்டும் சமயத்தில் யானை முக கணபதியை வரவழைத்த பெருமாளே, எனக்கு அனுபவ ராசி தழைக்க அருள் புரிவாயாக.

ஒப்புக
வேளை தனக்கு உசிதமாக...
உம்பலைக் கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா                                                             ... திருப்புகழ், பருவம்பணை
அக்கைப் புனை கொச்சைக் குறமகள்
    அச்சத்தை ஒழித்துக் கரி வரும்
     அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் அணைவோனே
                                          ..   .திருப்புகழ்,  தொக்கைக்கழு.

வேழம் அழைத்த பெருமாளே -   தினைப்புனத்தில் வள்ளியை பயமுறுத்த விநாயகரை வரவழைத்தது




No comments:

Post a Comment