பின் தொடர்வோர்

Friday 13 November 2020

430.சீசிமுப்புர

 

430

காஞ்சீபுரம்

 

              தான தத்தனத் தான தானனத்

              தான தத்தனத் தான தானனத்

              தான தத்தனத் தான தானனத்     தனதான

 

சீசி முப்புரக் காடு நீரெழச்

  சாடி நித்திரைக் கோசம் வேரறச்

  சீவன் முத்தியிற் கூட வேகளித்                 தநுபூதி

சேர அற்புதக் கோல மாமெனச்

  சூரி யப்புவிக் கேறி யாடுகச்

  சீலம் வைத்தருட் டேறி யேயிருக்           கறியாமற்

பாசம் விட்டுவிட் டோடி போனதுப்

  போது மிப்படிக் காகி லேனினிப்

  பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித்      தடியேனைப்

பார டைக்கலக் கோல மாமெனத்

    தாப ரித்துநித் தார மீதெனப்

  பாத பத்மநற் போதை யேதரித்          தருள்வாயே

தேசில் துட்டநிட் டூர கோதுடைச்

  சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்

  தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த்     தருள்வோனே

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்

    பாணி வித்துருப் பாத னோர்புறச்

  சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்       குருநாதா

காசி முத்தமிழ்க் கூடலேழ்மலைக்

  கோவ லத்தியிற் கான நான்மறைக்

  காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்   புலிவேளூர்

காள அத்தியப் பால்சி ராமலைத்

  தேச முற்றுமுப் பூசை மேவிநற்

  காம கச்சியிற் சால மேவுபொற்          பெருமாளே 

 

பதம் பிரித்த்து உரை

 

சீ சி முப்புர காடு நீறு எழ

சாடி நித்திரை கோசம் வேர் அற

சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி

 

சீசி = சீசி என இகழ்ந்து ஒதுக்க வேண்டிய முப்புர = முப்புரங்கள் (போல ஊறு செய்யும்) காடு = மும்மலங்கள் என்னும் காடு நீறு எழ = (வெந்து) சாம்பலாகும்படி சாடி = துகைத்து ஒழித்து எறிந்து நித்திரைக் கோசம் = (ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கும்) உறைகள் வேர் அற = அடியோடு ஒழிய சீவன் முத்தியில் = (ஆன்மா இம்மையிலேயே) முத்தி அடையும் நிலையை கூடவே = நான் கூடுதற்கு களித்து = மகிழ்ச்சி உற்று அநுபூதி = அனுபவ ஞான நிலையை

 

சேர அற்புத கோலமாம் என

சூரிய புவிக்கு ஏறி ஆடுக

சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல்

 

சேர = சேருதற்கு அற்புதக் கோலமாம் என = அற்புதத் தோற்றம் இது என்று சொல்லும்படி சூரியப் புவிக்கு ஏறி = சூரிய மண்டலம் போன்ற பெருஞ் சோதியைக் கண்டு ஆடுக = களிப்பதற்கு உரிய சீலம் = ஒழுக்க நிலையை வைத்து = அடைந்து அருள் தேறியிருக்க = (உனது) திருவருளை உணர்ந்திருக்க அறியாமல் = அறியாமல்

 

பாசம் விட்டு விட்டு ஓடி போனது

போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி

பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனை

 

பாசம் விட்டு விட்டு ஓடி = பாசங்கள் (ஒரு வழியாய் அடியோடு ஒழியாமல்) இடையூடு விட்டு போனதுப் போதும் = ஓடிப் போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் = இவ்வாறு இடை விட்டுப் பாசம் விலகும் நிலை எனக்கு வேண்டாம் இனி = இனி மேல் பாழ் வழிக்கு = பாழ்படும் நெறியில் ஆகாமலே = புகுந்து அடைக்காமல் பிடித்து அடியேனை = (என்னைப்) பிடித்து அடியேனை

 

பார் அடைக்கல கோலமாம் என

தாபரித்து நித்தாரம் ஈது என

பாத பத்ம நல் போதையே தரித்து  அருள்வாயே

 

பார் அடைக்கலம் = இப்பூமியில் (உனக்கு) அடைக்கலமாக வைக்கப்பட்ட கோலமாம் என = ஒரு உருவமாம் எனக் கொண்டு தாபரித்து = (என்னை) ஆதரித்து நித்தாரம் = நித்தியமாகிய ஆபரணம் ஈது என = இதுவாம் என பாத பத்ம = திருவடித் தாமரையாகிய நல் போதையே = நல்ல மலரில்  தரித்து அருள்வாயே = (எப்போது) தரித்து அருள் செய்வாய்? [பாத தாமரை ஆகிய நல்ல மலரை என் மீது தரிக்கச் செய்து திருவருள் புரிவீராக]

 

தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை

சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி

தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து  அருள்வோனே

 

தேசு இல் = ஞானம் இல்லாத துட்ட = துட்டனும் நிட்டூர = கொடுமை வாய்ந்தவனும் கோது உடைச் சூரை = குற்றம் உள்ளவனுமாகிய சூரனை வெட்டி = வெட்டி எட்டு ஆசை = எட்டு திசைகளிலும் ஏழ் புவி = ஏழு உலகங்களிலும் உள்ள தேவர் = தேவர்களுக்கும் முத்தர்கட்கு = முத்தி நிலை கண்ட பெரியோர்களுக்கும் ஏதமே = (இருந்த) துன்பத்தை தவிர்த்து அருள்வோனே = ஒழித்து அருளியவனே

 

சீர் படைத்த அழல் சூலம் மான் மழு

பாணி வித்துரு பாதன் ஓர் புற

சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன்   குருநாதா

 

சீர் படைத்த = சிறப்பு பொருந்திய அழல் = நெருப்பு சூலம் = சூலம் மான் மழு = மான், மழு இவைகளை பாணி = கரத்தில் கொண்ட வித்துருப் பாதன் = பவள நிறத் திருவடியை உடைய சிவபெருமானுக்கு ஓர் புற = ஒரு பாகத்தில் சீர் திகழ் = சிறந்து விளங்கும் புகழ்ப் பாவை = புகழ் நிறைந்த பார்வதி தேவி ஈன பொன் குரு நாதா = ஈன்ற அழகிய குரு நாதனே

 

காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை

கோவல் அத்தியின் கானம் நான் மறைக்காடு

பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர்

 

காசி = காசி முத்தமிழ்க் கூடல் = முத்தமிழ் விளங்கிய மதுரை ஏழ் மலை = திருவேங்கடம் கோவல் = திருக் கோவலூர் அத்தியின் =திருவானைக்கா கானம் நான் மறைக் காடு = வேதாரணியம் பொன் கிரி = கனககிரி காழி = சீகாழி ஆரூர் = திருவாரூர் பொன் புலி = அழகிய புலியூர் (சிதம்பரம்) வேளூர் = புள்ளிருக்கும் வேளூர் (வைதீஸ்வரன் கோயில்)

 

காள அத்தி அப்பால் சிரா மலை

தேசம் முற்றும் முப்பூசை மேவி நல்

காம கச்சியில் சால மேவும் பொன் பெருமாளே

 

காள அத்தி = காளத்தி அப்பால் = அதன் பின் சிரா மலை = திரிசிராமலை தேசம் முற்றும் = ஆக நாடு முழுமையும் முப்பூசை மேவி = மூன்று காலங்களிலும் பூசை நடத்தப் பெற்று நல் = விரும்பத் தக்க காம கச்சியில் = காஞ்சீபுரத்தில் சால மேவும் = மிகவும் வீற்றிருக்கும் பொன் பெருமாளே = அழகிய பெருமாளே

 

பாசங்கள் என்னைவிட்டு ஓடிப்போவதும் திரும்பவந்து சேர்வதுமான இந்நிலை எனக்குப் போதும் போதும்

 

சுருக்க உரை

 

இகழ்ந்து ஒதுக்க வேண்டிய முப்புரங்களை ஒத்த மும் மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகவும், அந்தக் காட்டைத் துகைத்து ஒழித்து, ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கும் போர்வைகள் அடியோடு ஒழியவும், சீவன் முத்தியை கூடுதற்கு ஏற்ற அனுபவ ஞான நிலையைச் சேர்ந்து பெருஞ் சோதியைக் கண்டு உணர அறியாமல், பாசங்கள் முற்றும் என்னை விட்டு அகல, என்னைப் பிடித்து, இப்பூமியில் நான் ஒரு அணிகலன் என்று எண்ணி, நல்ல தாமரையாகத் தரித்து அருள் புரிக

 

ஞானம் இல்லாத துட்டனும், கொடியவனுமாகிய சூரனை வெட்டி, எல்லாருடைய துன்பங்களையும் ஒழித்தவனே! நெருப்பு, சூலம், மான், மழு இவைகளைக் கரத்தில் கொண்ட சிவபெருமானது ஒரு பாகத்தில் உறையும் பார்வதி ஈன்ற குருநாதனே! காசி, மதுரை, திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, வேதாரணியம், கயிலை, சீகாழி, திருவாரூர், சிதம்பரம், வேளூர், சீகாளத்தி, திரிசிராமலை முதலிய எல்லா இடங்களிலும் முக்காலமும் பூசை நடத்தப் பெற்று, கச்சியில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே!  என்னைத் தாமரை மலராகத் தரித்து  அருள்வாயே

 

விளக்கக் குறிப்புகள்

 

முப்புரக் காடு நீறெழச் சாடி

ஞானாக்கினியால் சுட்டு நீறாக்க வேண்டும்

 

சுட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு

  தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் - திருப்புகழ், கட்டிமுண்ட

 

நித்திரைக் கோசம் வேர் அற

கோசம் ஐந்து அவையாவன

1 அன்ன கோசம் (உணவால் ஆன உடல்)

2 பிராணமய கோசம் ( கன்மேந்திரியமும், பிராணனும் கூடியது)

3 மனோமய கோசம் (மனம்)

4 விஞ்ஞானமய கோசம் ( ஞானேந்திரியமும் புத்தியும் கூடியது)

5 ஆனந்தமய கோசம்  (ஆன்மாவுக்குள்ளே உள்ள உறை)

 

நான்மறைக் காடு

வேதாரணியம் மறை பூசத்த தலம்  நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம் என்னும் திருமறைக்காடு

 

பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி

பலரால் வழிபாடு செய் மா மறைக்காடாசம்பந்தர் தேவாரம்

 

அத்தியில் கானம் ---

அத்தி - யானை அத்தம் - கை  கையை உடையது அத்தி  சினையாகு பெயர் யானை வழிபட்ட திருத்தலம் திருவானைக்கா

 

சீர் படைத்த அழல் சூல மான் மழுப் பாணி ---

 தாருக வனத்து மகரிஷிகள் சிவபெருமான் மீது சினந்து, அபிசார ஹோமம் செய்து, அவரைக் கொல்லும்பொருட்டு, மான், மழு, நெருப்பு, புலி, முயலகன், பாம்பு முதலியவைகளை அனுப்பினார்கள்  இறைவன் அவைகளை ஆபரணமாகத் தரித்து அருளினார்

 

அற்புதக் கோலமாம் என ---

 

நிஷ்டாநுபூதியில் இவ்வுடம்பே ஒளியுடம்பாக மாறி, பார்த்தோர் வியக்குமாறு விளங்கும்

No comments:

Post a Comment