பின் தொடர்வோர்

Friday 13 November 2020

431.செறிதரும்

 431

காஞ்சீபுரம்

 


            தனதனந் தத்தத் தத்தன தத்தந்

            தனதனந் தத்தத் தத்தன தத்தந்

            தனதனந் தத்தத் தத்தன தத்தந்       தனதான

 

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்

   பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் 

   சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்             சுடர்வேலும்

திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்

  தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்

  திகழ்ப்பரஞ் சத்தைப் புற்பத மொக்கும்            படிநாடும்

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்

  கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்

  பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்   பெருமானென்

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்

  செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்

  றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்    றருள்வாயே

குறியவன் செப்பப் பட்டஎ வரக்கும்

    பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்

  குலைகுலைந் துட்கச் சத்யமி ழற்றுஞ்           சிறுபாலன்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்

    கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்

  குடர்பிடுங் கத்திக் குற்றமு கச்சிங்               கமுராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்

  துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்

  புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்     ஜகதாதை

புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்

  பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்

  புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்          பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும்

பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்

சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும்

 

செறி தரும் = நிறைந்து நெருங்கி மலரும். செப்பத்து = செம்மை வாய்ந்த. உற்பல வெற்பும் = செங்கழு நீர் மலையாகிய திருத்தணிகையும். பிறிதும் = பின்னும். அங்கு அத்தைக்கு உற்ற = அங்கு அதனைப் போன்ற. இருப்பும் = பிற தலங்களும். சிகரி = (கிரௌஞ்ச) மலையும். துண்டிக்கக் கற்ற = துண்டுபடச் செய்ய வல்லதான. தனி = ஒப்பற்ற. செம் சுடர் வேலும் = செவ்விய ஒளி வேலும்.

 

திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும்

தெளிய நெஞ்சம் துப்பு உற்று மயக்கம்

திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும்


திரள்
= திரண்ட. புயம் கொத்துப் பட்ட அனைத்தும் = புயங்கள் கொத்தாக உள்ள யாவும் (பன்னிரண்டும்). தெளிய = தெளிதர. நெஞ்சம் = மனதில். துப்பு உற்று = அறிவு அடைந்து. மயக்கம் திகழ் = மயக்கம் விளங்குகின்ற ப்ரபஞ்சத்தை = இவ்வுலகு. புற்புதம் ஒக்கும் படி நாடும்= நீர்க் குமிழை ஒத்தது என்னும் தன்மையை ஆய்ந்து உணரும்.

 

அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும்

கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு

அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று

 

அறிவு அறிந்து = அறிவை அறிந்து. அத்தற்கு = தந்தையாகிய சிவபெருமானுக்கு. அற்றது = (ஒரு பற்றும் அற்றுத் தத்துவம் கடந்து நிற்கும் பொருளை). செப்பும் = உபதேசித்த. கடவுளன் = இறைவன் என்றும். பத்தர்க்கு = அடியவர்களுக்கு. அச்சம் அறுத்து = பயத்தை நீக்கி. அன்பு அருள்பவன் = அன்பைக் கொடுத்து அருள்பவன் என்றும். பொற்புக் கச்சியுள் = அழகிய காஞ்சியில். நிற்கும் = நின்றருளும். பெருமான் என்று = பெருமான் என்றும் கூறி.

 

அவிழும் அன்பு உற்று கற்று மனத்தின்

செயல் ஒழிந்து எட்ட பட்டதனை சென்று

அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே

 

அவிழும் = நெகிழ்ந்து உருகும். அன்பு உற்று = அன்பு பூண்டு. கற்று = (திருவருளைக் கற்று). மனத்தின் செயல் ஒழிந்து = மனத்தின் தொழில் ஒழிந்து. எட்டப்பட்டதனை = கிட்டப்படுவதான பொருளை. சென்று அடைதரும் = போய் அடையும். பக்வத்தை = ஆன்ம பக்குவத்தை. தமியெற்கு = அடியேனுக்கு. என்று அருள்வாயே = எப்போது அருள்வாய்?

 

குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும்

பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்

குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன்

 

குறியவன் = குறள் உருவம் (வாமனாவதாரம்) எடுத்தவன் செப்பப்பட்ட = புகழந்து சொல்லப்படும் எவர்க்கும் = எவரினும். பெரியவன் = பெரியவன் கற்பிக்கப்படு = கல்வி கற்றுக் கொடுக்க வந்து சுக்ரன் = சுக்ராச்சாரியார் குலைகுலைந்து = உள்ளம் நடுநடுங்கி உட்க = அஞ்ச. சத்யம் மிழற்றும் = உண்மையைச் சாதித்து மேலாகச் சொன்ன சிறு பாலன் = சிறு குழந்தையாகிய பிரகலாதனின்.

 

குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும்

கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம்

குடர் பிடுங்கி திக்கு உற்ற முகம் சிங்க முராரி

 

குதலையின் சொற்கு = மழலைச் சொல்லுக்கு. தர்க்கம் உரைக்கும் = தருக்கம் பேசிய. கனகன் = இரணியனுடைய. அங்கத்தில் குத்தி = உடலைக் குத்தி. நிணம் செம் குடர் பிடுங்கி = மாமிசம் நிறைந்த செவ்விய குடலைப் பிடுங்கி. திக்கு உற்ற = திசைகளை எட்டிய. சிங்க முக முராரி = நரசிங்க முகத்தைக் கொண்ட திருமால்.

 

பொறி விடும் துத்தி கண் செவியின் கண்

துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம்

புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை

 

பொறி விடும் துத்தி = ஒளி வீசும் படப் பொறிகளை உடைய. கண் செவியின் கண் = (ஆதி சேடனாகிய) பாம்பின் மேல். துயில் கொளும் = தூங்கும். சக்ரக் கை = சக்கரத்தை ஏந்திய கையை உடைய. கிரி = மலை போன்றவன். சுத்தம் = பரிசுத்தம் வாய்ந்த. புயல் எனும் = மேகம் எனத் தக்க. பொற்பு = அழகு வாய்ந்த. நிறத்தன் = நிறம் உடையவன். ஜக தாதை = உலகுக்குத் தந்தை.

 

புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன்

பழைய சந்தத்தை பெற்ற மட பெண்

புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே.

 

புனித சங்கத்துக் கைத்தலம் = பரிசுத்தமான பாஞ்ஜ ஜன்னியம் என்னும் சங்கைத் திருக்கையில் கொண்ட. நிர்த்தன் = கூத்தன். பழைய சந்தத்தை = பழைய வடிவைக் கொண்ட. மடப் பெண் = அழகிய பெண். புகலும் = புகழப்படும். கொண்டற்கு = (மேக நிறத்) திருமாலுக்கு. சித்தி அளிக்கும் பெருமாளே = வீடு பேறளித்த பெருமாளே.

 

சுருக்க உரை

 

செங்கழுநீர் மலர் நிறைந்த திருத்தணிகையையும், அதைப் போன்ற மற்ற தலங்களையும், கிரௌஞ்ச மலையும் பொடியாக்க வல்லதான ஒளி வேலும், பன்னிரண்டு திருப்புயங்களும்,

தெளிiவாக என் மனத்தில் ஊன்றி, மயக்கமே விளங்கும் இவ்வுலகு நீர்க்குமிழி போன்றது என்னும் தன்மையை ஆய்ந்து உணரும் அறிவை அடைந்து, சிவபெருமானுக்கு, பற்றுக்களுக்கு அப்பால் உள்ள உண்மைப் பொருளை உபதேசித்த இறைவன் என்றும், அழகிய கச்சியில் நின்ற பெருமான் என்றும் கூறி, நெகிழ்ந்து மனம் உருகி, உன் திருவருயைக் கற்று, மன ஒடுக்கம் உற்று, அந்த நிலையில் அடையும் ஆன்ம பக்குவத்தை அடியேனுக்கு எப்போது அருள்வாய்?

 

குறள் வடிவம் எடுத்து, கல்வி கொடுக்க வந்த சுக்ராச்சாரியார் நடுங்க, மழலைப் பேசும்

பிரகலாதனின்மழலைச் சொல்லுக்குத் தருக்கம் பேசிய இரணியனின் உடலைக் குத்திக்

கிழித்து, குடலைப் பிடுங்கிய நரசிங்க முகத் திருமால் ஆதிசேடன் மீது துயில்பவன்,

சக்கரத்தைக் கையில் ஏந்தியவன், மேக நிறம் உடையவன், பாஞ்ச சன்னியம் என்ற

சங்கைக் கையில் கொண்டவன்.  அவருக்கு வீடு பேறளித்த பெருமாளே.

 

 

விளக்கக் குறிப்புகள்

 எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்......

 கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த

கோபவரி நார சிங்கன்   மருகோனே...திருப்புகழ், நீலமயில் சேரு

 புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்.....

 பாஞ்ஜ ஜன்னியம் = இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம் புரி. இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது  வலம்புரி. வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம். சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்ஜ ஜன்னியம்

 பழைய சந்தத்தைப் பெற்ற மடப் பெண்....

 அரனுடைய சத்தியே அரி ஆதலால் அந்தப் பூர்வ நிலையைக் குறித்தது.  இதை (அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே) என்னும்  நாவரசர் தேவாரத்தால் உணரலாம்  

சிவ சக்தி அபரை, பாரபரை, பரை என முத்திறப்படும். அபரை = பிராமி.  சிருட்டித்தல் காரணமாக இருப்பவள். வைஷ்ணவி = ரட்சித்தல் காரணமாக  இருப்பவள். ரௌத்திரி = சங்கரித்தல் காரணமாக இருப்பவள்.

 கொண்டற்குச் சித்தி யளிக்கும் பெருமாளே.

முருகவேள் சம்பந்தராக அவதரித்த காலத்தில் சிவ சாரூபம் வேண்டிக்  கச்சியில் திருமேற்றளியில் தவம் செய்த திருமாலுக்கு சிவ சாரூபம்  அளித்த வரலாற்றைக் குறிக்கின்றது.

சோதி காட்ட வராச்சுத நாத னார்க்கருள் போற்றிய

தூரி தாப்பர மார்த்தம   தருள்வாயே...திருப்புகழ், ஏகமாய்ப்பல.

ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற

நார ணற்க ருட்சு ரந்த   மருகோனே... திருப்புகழ், ஓலமிட்டிரை

 

 


 

No comments:

Post a Comment