432
காஞ்சீபுரம்
இத் திருப்புகழ் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மை திருக்கோயிலில் உள்ள முருகன் மீது பாடியது.
தனதன தத்தத் தனந்த தந்தன
                   தனதன தத்தத் தனந்த தந்தன  
                   தனதன தத்தத் தனந்த தந்தன   தந்ததான
   புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி 
   தருமயில் செச்சைப் புயங்க யங்குற           வஞ்சியோடு 
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
   தழுவிய செக்கச் சிவந்த பங்கய 
   சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி        ளம்புகாளப்
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
   தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண 
   புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன       னம்பெறாதோ
பொறையனெ னப்பொய்ப் ப்ரமஞ்ச மஞ்சிய
   துறவனெ னத்திக் கியம்பு கின்றது 
   புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை           தந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
   யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி 
   குறைவற முப்பத் திரண்ட றம்புரி              கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி   
   கணபண ரத்நப் புயங்க கங்கணி 
   குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின                  வஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
   கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி 
   கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி               யெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
   சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி  
   கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர்            தம்பிரானே.
பதம்
பிரித்து உரை
தலை வலையத்து தரம் பெறும்
பல 
புலவர் மதிக்க சிகண்டி
குன்று எறி 
தரும் அயில் செச்சை புயம்
கய(வஞ்சி) குற வஞ்சியோடு
தலை வலையத்து = முதல் தரமான. தரம் பெறும்
= தக்கத் தகுதிகளைப் பெற்றுள்ள. புலவர் மதிக்க
= புலவர்கள் போற்றித் துதிக்க. சிகண்டி = (உனது) மயிலையும் குன்று எறி தரும் = (கிரௌஞ்ச) மலையைப் பிளந்து எறிந்த அயில் = வேலையும் செச்சைப் புயம் = வெட்சி மாலை அணிந்த புயங்களையும் கயவஞ்சி  = யானை வளர்த்த தேவசேனையையும்  குற வஞ்சியோடு = வள்ளி நாயகியையும்.
தமனிய முத்து சதங்கை கிண்கிணி
தழுவிய செக்க சிவந்த பங்கய
சரணமும் வைத்து பெரும்
ப்ரபந்தம் விளம்பு(ம்) காள
தமனிய = பொன்னாலாகிய. முத்து தசங்கை
= முத்துச் சதங்கை கிண்கிணி = கிண்கிணி (இவைகளை) தழுவிய = தழுவி. செக்கச் சிவந்த
= மிகச் சிவந்த பங்கய = தாமரை போன்ற. சரணமும் வைத்து = திருவடியையும் வைத்து. பெரும் = பெரிய ப்ரபந்தம் விளம்பும் = பாமாலைகளைப்
பாடவல்ல.
புலவன் என தத்துவம் தரம்
தெரி 
தலைவன் என தக்க அறம் செய்யும்
குண 
புருஷன் என பொன் பதம்
தரும் சனனம் பெறாதோ
காளப் புலகன் = காளமேகம் போன்ற புலவன் இவன்.  என = என்று சொல்லும்படியும் தத்துவம் தரம்
தெரிந்த தலைவன் = உண்மையான ஞானமும் தகுதியும்
கொண்ட தலைவன் இவன் என்று கூறும்படியும் தக்க அறம் செய்யும் குண புருஷன்
என = சரியான தருமங்களைச் செய்யும்
நல்ல குணம் படைத்தவன் இவன் என்று கூறும்படியும். பொன் பதம்  = மேலான பதவியை தரும் சனனம்
பெறாதோ = தருகின்ற பிறப்பை நான் பெற
மாட்டேனோ?
பொறையன் என பொய் ப்ரபஞ்சம்
அஞ்சிய  
துறவன் என திக்கு இயம்புகின்ற
அது  
புதுமை அ(ல்)ல சிற்பரம்
பொருந்துகை தந்திடாதோ
பொறையன் என = பொறுமை உடையவன் இவன் என்றும். பொய்ப் ப்ரபஞ்சம்
அஞ்சிய = பொய் உலகத்தைக் கண்டு பயந்த. துறவன் என = துறவி எவன் என்றும். திக்கு இயம்புகின்றது = திக்குகளில்
உள்ளோர் சொல்லுவது. புதுமை அல்ல = ஓர் அதிசயம் அன்று. சிற்பரம் = அறிவுக்கு. பொருந்துகை தந்திடாதோ = மேம்பட்ட
பெரு நிலையைச் சேர்ந்து பொருந்தும் பேற்றை எனக்குத் தந்து அருளாதோ?
குல சயிலத்து பிறந்த பெண்
கொடி 
உலகு அடைய பெற்ற உந்தி
அந்தணி   
குறைவு அற முப்பத்திரண்டு
அறம் புரிகின்ற பேதை
குல சயிலத்து = சிறந்த மலையாகிய (இமயத்தில்). பிறந்த பெண்
கொடி = பிறந்த கொடி போன்ற பெண். உலகு அடைய பெற்ற
உந்தி = உலகம் முழுவதையும் ஈன்ற திருவயிற்றை
உடையவள். அந்தணி = அழகிய தட்பம் உடையவள். குறைவு அற = குறைவு இல்லாத வகையில். முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை
= முப்பதிரண்டு அறங்களையும்
செய்து வந்த தேவி.
குண தரி சக்ர ப்ரசண்ட
சங்கரி 
கண பண ரத்ந புயங்க கங்கணி
குவடு குனித்து புரம்
சுடும் சின வஞ்சி நீலி
குண தரி = நற் குணம் உடையவள். சக்ரப் ப்ரசண்ட
= மந்திர யந்திரத்தில் வீரத்துடன்
விளங்கும். சங்கரி = சங்கரி. கண பண = கூட்டமான படங்களை உடையதும். ரத்ந = இரத்தின மணிகளைக் கொண்டதுமான.  புயங்க = பாம்பை. கங்கணி = கைவளையாக அணிந்தவள். குவடு குனித்து = மேரு மலையை வளைத்து. திரிபுரம் = முப்புரங்களையும். சுடும் சின வஞ்சி = சுட்டெரித்த
கோபம் கொண்ட வஞ்சிக் கொடி போன்றவள். நீலி = நீல நிறம் உடையவள்.
கலப விசித்ர சிகண்டி சுந்தரி
கடிய விடத்தை பொதிந்த
கந்தரி 
கருணை விழி கற்பகம் திகம்பரி
எங்கள் ஆயி
கலப விசித்ரச் சிகண்டி = விசித்திமான
தோகையைக் கொண்ட மயில் போன்றவள். சுந்தரி = அழகி. கடிய விடத்தை = பொல்லாத ஆலகால விடத்தை. பொதிந்த கந்தரி
= அடக்கிய கண்டத்தை உடையவள்  கருணை விழிக் கற்பகம் = வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பகம் போன்றவள். திகம்பரி = திசைகளையே ஆடையாகக்கொண்டவள்.  எங்கள் ஆயி = எங்கள் தாய்.
கருதிய பத்தர்க்கு இரங்கும்
அம்பிகை
சுருதி துதிக்கப்படும்
த்ரி அம்பகி
கவுரி திரு கோட்டு அமர்ந்த
இந்திரர் தம்பிரானே.
கருதிய பத்தர்க்கு இரங்கி = தன்னைத் தியானிக்கும் அடியவர்களுக்கு இரக்கம் கொள்ளும்.  அம்பிகை = அம்பிகை. சுருதி துதிக்கப்படும்
= வேதம் துதிக்கும். த்ரி அம்பகி = முக்கண்ணி. கவுரி = (ஆகிய) கவுரியின். திருக் கோட்டம்
அமர்ந்த = (காமாட்சி அம்மன்) கோயிலில் வீற்றிருக்கும்  இந்திரர் = தேவேந்திரர்களுடைய. தம்பிரானே = தம்பிரானே.
சுருக்க
உரை
தகுதியுள்ள
புலவர்கள் போற்றித் துதிக்க, உனது மயிலையும், கிரௌஞ்ச மலையைப்பிளந்த வேலையும், வெட்சி
மாலை அணிந்த புயங்களையும், தேவசேனை, வள்ளி ஆகிய இரு பெண்களும் கூட வர, பொன் சதங்கை,
கிண்கிணி அணிந்த உனது திருவடியையும் வைத்துப் பெரிய பாக்களைப் பாட வல்ல காளமேகம் போன்ற
புலவன் இவன் என்றும், உண்மையான ஞானம் படைத்தவன் என்றும், நற் குணம் கொண்டவன் என்றும்,
தருமங்களைச் செவ்வனே செய்பவன் என்றும் உலகோர் கூறும்படியான மேலான பதத்தைத் தருகின்ற
பிறப்பை நான் பெற மாட்டேனோ?
இமவான்
மடந்தையும், உலகம் முழுமையும் ஈன்றவளும், முப்பத்திரண்டு அறங்களைச் செய்தவளும், பாம்பைக்
கைவளையாக அணிந்தவளும், மேரு வளைத்துத், திரிபுரங்களையும் எரித்தவளும் ஆகிய பார்வதி
எங்கள் தாயாவாள். விடத்தைக் கழுத்தில் அடக்கியவள். தன்னைத் தியானிக்கும் அடியார்களுக்கு
வேண்டியதை அருள் செய்பவள். முக்கண்ணி, இந்தக் கவுரி அம்மை உறையும் காமாட்சி அம்மன்
கோயிலில்
வீற்றிருக்கும் தேவர்கள் தம்பிரானே.
விளக்கக்
குறிப்புகள்
அந்தணி = அந்தணன் என்பதின்
பெண்பால்.
அந்தணி = அழகிய
தட்பத்தை உடையவள் – வாரியார் ஸ்வாமிகள்
கய வஞ்சி = கயம் - யானை.
இங்கே இந்திரனின் யானையான ஐராவதத்தைக் குறித்தது. கயவஞ்சி - தெய்வயானை.  குறவஞ்சி - வள்ளியம்மை.
குவடு குனித்து =  மேருமலையை வில்லாக வளைத்தது.  வில்லை எடுத்தது சிவபெருமானுடைய இடக்கரம்.  இடக்கரம் அம்பிகைக்கு உரியது.
குல சயிலத்துப் பிறந்த
பெண்கொடி =
தவம் செய்த குலமலை அரசராம் இமவானிடம் அம்பிகை தாமரை மலரில் தோன்றி, அம் மலையரசனிடம்
வளர்ந்தருளினாள்.
உலகு அடைய பெற்ற உந்தி
அந்தணி =
எல்லாவுலங்களையும் ஈன்ற அன்னை. 
ஒப்புக
 அபயவ ரம்புரி
உபயக ரந்திகழ் அந்தணி
                                                                   ...வேல் வாங்கு வகுப்பு
அகிலதலம்பெறும் பூவை  =       திருப்புகழ், தமரகுரங்களும்
கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி...
தேவியை
மயில் என்பது மயிலையிலும், மயிலாடு துறையிலும் பார்வதி மயில்   வடிவம் கொண்டு சிவபெருமானைப் பூசித்ததைக் குறிக்கும்.
இமயமயில்
தழுவுமொரு  திருமார்பிலாடுவதும்
                                              ...சீர் பாத வகுப்பு 
இரணகிரண
மட மயிலின்ம்ருக மத                     
                                           ..தேவேந்திர வகுப்பு
சக்ர ப்ரசண்ட சங்கரி
-  மந்திரம் பொறித்த யந்த்ர பீடத்தில் வீரத்துடன்
விளங்குபவள்.
சக்ரதலத்தி த்ரியட்சி சடக்ஷரி  --  பூதவேதாள வகுப்பு.
குவடு குனித்து  
அதிகை வருபுரம் நொடியினில் எரிசெய்த
அபிராமி
                               ... 
திருப்புகழ், முகிலுமிரவியும்  
கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி    
                               ... 
திருப்புகழ், 
பரிமள மிகவுள
'கவுரி திருக்கொட்
டமர்ந்த இந்திரர் தம்பிரானே' என்று இரண்டு திருப்புகழ் பாடலில் வருகிறது.  இது ஒன்று. இன்னொன்று ‘சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்’ இங்கு மயில் என்பது மயிலான இந்திரனைக்
குறிக்கும். இந்த மயிலில் ஏறி சூரனுடன் முருக வேள் சண்டை செய்தார். சூரன் மயில் வாகனமாவதற்கு
முன்பு போர்க்களத்தில் இந்திரன் மயிலாக முருகவேளைத் தாங்கினான் என்பர்.

No comments:
Post a Comment