பின் தொடர்வோர்

Sunday 21 November 2021

476.இருளுமோர் கதிர்

 

 சிதம்பரம்

476

 சிதம்பரம்

             தனன தானன தனன தானன

               தனன தானன                      தனதான

 இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ

    னிடம தேறியெ              னிருநோயும்

எரிய வேமல மொழிய வேசுட

    ரிலகு மூலக               வொளிமேவி

அருவி பாயஇ னமுத மூறவுன்

    அருளெ லாமென                தளவாக

அருளி யேசிவ மகிழ வேபெற

    அருளி யேயிணை             யடிதாராய்

 பரம தேசிகர் குருவி லாதவர்

    பரவை வான்மதி           தவழ்வேணிப்

பவள மேனியர் எனது தாதையர்

     பரம ராசியர்               அருள்பாலா

மருவி நாயெனை யடிமை யாமென

     மகிழ்மெய் ஞானமு       மருள்வோனே

மறைகு லாவிய புலியுர் வாழ்குற

    மகள்மெ லாசைகொள்        பெருமாளே

 

 

 பதம் பிரித்து உரை 

 

இருளும் ஓர் கதிர் அணுக ஒ(ண்)ணாத பொன்

இடமது ஏறியே என் இரு நோயும்

இருளும்  ஓர் கதிர் = இரவு பகல் (சூரிய சந்திர ஒளி) எதுவும் அணுக ஒ(ண்)ணாத பொன் இடம் அது = அணுக முடியாத பொன்னிடத்தை ஏறி = அடைந்து என் இரு நோயும் = என்னுடைய நல் வினை, தீ வினை என்ற இரண்டு நோயும்

 

எரியவே மலம் ஒழியவே சுடர்

இலகு மூலக ஒளி மேவி

எரியவே = எரிபட்டு அழிய. மலம் ஒழிய = மும்மலங்களும்  ஒழிய சுடர் இலகு = ஒளி விளங்கும் மூலக ஒளி மேவி = மூலாதார அக்கினி பொருந்தி

 

அருவி பாய இன் அமுதம் ஊற உன்

அருள் எலாம் எனது அளவாக

அருவி பாய = அருவி பாய்வது போல இன் அமுதம் ஊற = இனிய தேவாமிர்தம் ஊற உன் அருள் எல்லாம் எனது உளவாக =  உனது திருவருள் எல்லாம் எனக்குஉரியதாக

அருளியே சிவ(ம்) மகிழவே பெற

அருளியே இணை அடி தாராய்

அருளியே = உதவி அருளி. சிவம் = சிவ ஞானத்தை மகிழவே பெற = நான் மகிழ்ந்து பெறும்படி. அருளியே = திருவருள் புரிந்து இணை அடி தாராய் = உன் இரண்டு திருவடிகளை எனக்குத் தாராய்.

பரம தேசிகர் குரு இலாதவர்

பரமவை வான் மதி தவழ் வேணி 

பரம தேசிகர் = மேலான தேசிக மூர்த்தி குரு இலாதவர் = தமக்கு ஒரு குருவே இல்லாதவர் பரவை வான் மதி = பரந்த வானில் உள்ள சந்திரன் தவழ் வேணி = தவழ்கின்ற சடையை உடைய

பவள மேனியர் எனது தாதையர்

பரம ராசியர் அருள் பாலா

பவள மேனியர் = பவள மேனிப் பெருமான் எனது தாதையர் = என்னுடைய தந்தை பரம ராசியர் = பரம ரகசியத்தினர் (ஆகிய சிவபெருமான்) அருள் பாலா = அருளிய பாலகனே  

மருவி நாயெனை அடிமையாம் என

மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே

மருவி = அடியேனிடம் வந்து கூடி நாயெனை = என்னை அடிமையாம் என = ஒரு அடிமையாகக்   கருதி மகிழ் = மகிழ்ந்து மெய் ஞானமும் = மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே = அருளியவனே

மறை குலாவிய புலியுர் வாழ் குற

மகள் மேல் ஆசை கொள் பெருமாளே.

 மறை குலாவிய = வேதங்கள் விளங்கும் புலியூர் வாழ் = புலியூரில் வாழும் குற மகள் = குற மகளாகிய வள்ளியின் மேல் ஆசை கொள் பெருமாளே = மேல் ஆசை கொள்ளும் பெருமாளே.

சுருக்க உரை 

இரவு பகல் அற்ற இடத்தை அடைந்து என் இரு வினைகளாகிய நோய்களும், மும்மலங்களும் அழிய, மூலாதாரத்தில் பொருந்தி உன் திருவருள் எனக்கு உரியதாகுக. சிவ ஞானத்தை நான் மகிழ்ந்து பெறும்படி உன் திருவடிகளைத் தந்தருளுக.   

பரம தேசிகரும், மதி தவழும் சடையை உடையவரும் ஆகிய சிவபெருமான் அருளிய பாலனே! என்னை அடிமையாகக் கொண்டு மெய்ஞ்ஞானத்தை எனக்கு அருளியவனே! வேதம் விளங்கும் புலியூரில் வாழ்பவனே! வள்ளியின் மேல் ஆசை கொள்ளும் பெருமாளே! உன் திருவடிகளைத் தர வேண்டும்.

ஒப்புக:

சிவம் பெறுதல்... 

சிவமான சிந்தையிற் சீவன் சிதைய

பவமான மும்மலம் பாறிப்பறிய                   -- --திருமந்திரம்.

 சிவமான ஞானந் தெளிய ஒண் சித்தி

சிவமான ஞானத் தெளிய ஒண் முத்தி

சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்

சிவமான ஞானஞ்  சிவானந்தம் நல்குமே           --- திருமந்திரம்

 

மறை குலாவிய புலியுர்.. 

தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே

                                                                   திருநாவுக்கரசர் தேவாரம்.

 மூலக ஒளி.... 

நாலுசது ரத்த பஞ்சறை மூலகமலத்தில் அங்கியை 

நாடியி டத்தி மந்திர  பந்தியாலே

                                  -- திருப்புகழ், நாலுசதுரத்த


No comments:

Post a Comment