பின் தொடர்வோர்

Friday, 19 May 2017

301. அரிமருகோனே

வயலூர்

உபதேசம் பெற வேணும்
    
            
தனதன தானான தானந் தனதன தானான தானந்
              தனதன தானான தானந்           தனதான
 
அரிமரு கோனேந மோவென் றறுதியி லானேந மோவென்
    றறுமுக வேளேந மோவென்                   றுனபாதம்
அரகர சேயேந மோவென் றிமையவர் வாழ்வேந மோவென்
    றருணசொ ரூபாந மோவென்                  றுளதாசை
பரிபுர பாதாசு ரேசன் றருமக ணாதாவ ராவின்
    பகைமயில் வேலாயு தாடம்                     பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
    பதிபசு பாசோப தேசம்                      பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
    கடினசு ராபான சாமுண்                         டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென்
    களமிசை தானேறி யேயஞ்                       சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
    குடல்கொள வேபூச லாடும்                    பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
    குளிர்வய லூராழி மேவும்                     பெருமாளே

பதம் பிரித்தல்

அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று
அறு முக வேளே நமோ என்று உன பாதம்

அரி - திருமாலின் மருகோனே - மருகனே நமோ -வணங்குகிறேன் என்றும் அறுதி இலானே - முடிவு(அந்தம்) இல்லாதவனே நமோ என்று - உன்னை வணங்குகிறேன் என்றும் அறு முக வேளே நமோ என்று - ஆறு முக வேளே உன்னை வணங்குகிறேன் என்றும் உன பாதம் - உன் திருவடியை

அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று
அருண சொரூபா நமோ என்று உளது ஆசை

அரகர சேயே நமோ என்று - அரகரசேயே வணங்குகிறேன் என்றும் இமையவர் வாழ்வே நமோ என்று - தேவர்களின் செல்வமே உன்னை வணங்குகிறேன் என்றும் அருணம் சொரூபா - செந்நிறச் சொரூபனே நமோ என்று - உன்னை வணங்குகிறேன் என்று உளது ஆசை - துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது

பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின்
பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும்

பரிபுர - சிலம்புகள் அணிந்த பாதா - திருவடியை உடையவனே சுரேசன் தேவேந்திரன் தரு - தரும் மகள்மகளாகிய தேவ சேனையின் நாதா - கணவனேஅராவின் பகை பாம்பின் விரோதியான மயில் -மயில் வாகனத்தையும் வேலாயுத ஆடம்பர -வேலாயுதத்தைக் கொண்ட கோலாகலனே நாளும் - ஒரு நாளேனும்

பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன்
பதி பசு பாச உபதேசம் பெற வேணும்

பகர்தல் இலா தாளை நான் நினைத்துச் சொல்லாத உன் திருவடியை ஏதும் - சற்றேனும் சிலது -சிறிதளவேனும் அறியா ஏழை நான் அறியாத ஏழையாகிய நான் உன் - உன்னுடைய திருவாயால் பதி பசு பாச உபதேசம் பதிபசுபாசம் எனப்படும் முப்பொருள் இலக்கணங்களைப் பற்றிய உபதேச மொழிகளை பெற வேணும் பெற வேண்டும்

கர தல(ம்) சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம்
கடின சுரா பான சாமுண்டியும் ஆட

கர தலம் - கையில் சூலாயுதா - சூலாயுதத்தைக் கொண்டவனே சலபதி போல் - கடலைப் போல்ஆரவாரம் - பேரொலியும் கடின - கொடிய சுராபான -கள் குடித்தலும் உடைய சாமுண்டியும் ஆட - துர்க்கை பயிரவி ஆடவும்

கரி பரி மேல் ஏறுவானும் செய செய சேனாபதீ என்
களமிசை தான் ஏறியே அஞ்சிய சூரன்

கரி பரி ஏறுவானும் - யானையாகிய வாகனத்தில் ஏறும் இந்திரனும் ( கரி  யானை, பரி  குதிரை இரண்டையும் வாகனமாக உள்ளவன் சாஸ்த்தா என்று அழைக்கப்படும் அய்யனார் என்பார் நடராஜன்)  செய செய சேனாபதீ என - செய செய சேனாபதியே என்று ஆரவாரிக்க களம் மிசைதான் ஏறியே -போர்க்களத்தில்  நீ புகுந்த பின் அஞ்சிய சூரன் -பயந்திருந்த சூரன்

குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம்
குடல் கொளவே பூசலாடும் பல தோளா

குரல் இட - அழுகைக் கூக்குரலிடவும் நாய் பேய்கள் பூதம் கழுகுகள் - நாய்களும்பேய்களும்பூதங்களும்,கழுகுகளும் கோமாயு - நரிகளும் காகம் - காகங்களும்குடல் கொளவே - குடலைக் கீறித்தின்னவும் பூசல்ஆடும் பல தோளா - சண்டை செய்த பல தோள்களை உடையவனே

குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும்
குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே

குட திசை - மேற்குத் திசையிலிருந்தும் வார் ஆழி போலும் - பெரிய கடலைப் போல படர் நதி காவேரி சூழும் - பரவி வருகின்ற காவிரியாறு சூழ்ந்துள்ள குளிர்வயலூரா - குளிர்ந்த வயலூரில் ஆர மேவும் பெருமாளே - உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

திருமாலின் மருகனேமுடிவில்லாதவனேஆறுமுக வேலனேஉன்னை வணங்குகிறேன் என்று துதித்து உன்னை வணங்க எனக்கு ஆசை இருக்கிறது சிலம்பு அணிந்த பாதனே, தேவசேனையின் கணவனேபாம்புக்குப் பகையான மயில் வாகனனேவேலாயதத்தை ஏந்தும் கோலாகலனே என்று ஒரு நாளும் சிறிதளவாகிலும் சொல்லாத அறியாத ஏழையாகிய நான்உன் திருவாயால் பதிபசுபாச ஞானத்தைப் பற்றிய உபதேச மொழியைப் பெற வேண்டும்

கையில் சூலாயுதத்தைக் கொண்டவனே, கடல் போல் ஆரவாரம் செய்துகள்ளுண்டு துர்க்கை பயிரவி ஆட,போர்க்களத்தில் நீ புகுந்தவுடன்சூரன் அஞ்சி கூச்சலிட,நாயும்பேயும்கழுகும் பிணங்களின் குடலைக் கீறித் தின்னசண்டை செய்த பல தோள்களை உடையவனே, கடல் போல் பரவி வரும் காவிரி ஆறு சூழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருக்கும் பெருமாளே நான் உபதேசம் பெற வேண்டுகிறேன்

விளக்கக் குறிப்புகள்

அருண சொரூபா நமோ
முருகவேள் செந்நிறத்தவன்
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் ---      திருமுருகாற்றுப்படை
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே  ----     திருப்புகழ், எத்தனைலாதி

பதிபசு பாசோப தேசம் பெறவேணும்
பதி - கடவுள் பசு - சீவாத்மா பாசம் - மும்மலம் பதி ஞானம் - இறைவனைப்பற்றிய அறிவு
பசு ஞானம் - ஆன்ம சொரூப ஞானம் - பாச ஞானம் - வாக்குகளாலும் கலை ஞானத்தாலும் அறியும் அறிவு
பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும்
பார்ப்ரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே
நேச மொடும் உள்ளத்தே நாடி                            --- சிவஞான சித்தி
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணுகிற்பசு பாசம் நிலாவே                              ----திருமந்திரம்

கரதல சூலாயுதா
முருகவேளுக்குச் சூலாயுதமும் உண்டு
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் திருமார்பும்                 --- திருப்புகழ்காலனார்வெங்


படர் நதி காவேரி சூழுங்
காவிரி கடல்க்லுக்கு ஒப்பிடப்பட்டது
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி --- சம்பந்தர் தேவாரம்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி            ---திருப்புகழ், நிரைத்தநித்தல

வயலூர்
அருணகிரியார் திருப்புகழ் நித்தம் பாடும் அன்பை வயலுரில் அநுக்கிரகிக்கப் பெற்றனர்
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே  --- திருப்புகழ், கோலகுங்கும

நமோ நமோ உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன் நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போத்கந்தரு, சீதளவாரிஜ, போத நிர்க்குண, ஓது முத்தமிழ்  சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும்  பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன

No comments:

Post a Comment