பின் தொடர்வோர்

Friday, 19 May 2017

306.ஈயெறும்புநரி

306
வாலிகொண்டபுரம்


          தான தந்ததன தான தந்ததன 
                 தான தந்ததன தான தந்ததன
                 தான தந்ததன தான தந்ததன      தந்ததான

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
   காக முண்பவுட லேசு மந்துஇது
   ஏல்வதென்றுமத மேமொ ழிந்துமத       வும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
   மேவி நம்பியிது போது மென்கசில
   ரேய்த னங்கள் தனி வாகுசிந்தைவச    னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
   வீச மங்கையர்க ளாட வெண்கவரி
   சீற கொம்புகுழ லு\த தண்டிகையி           லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
   மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
   சேவை கண்டுனது பாத தொண்டனென அன்புதாராய்
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
   சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
   சூரி யன்புரவி தேர்ந டந்துநடு            பங்கினோடச்  
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
   மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
   சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத            லன்புகூர 
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
   லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
   மாதர் சிந்தைகளி கூர நின்றுநட     னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
   காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
   வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர்       தம்பிரானே

பதம் பிரித்து உரை

ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு
காகம் உண்ப உடலே சுமந்து இது
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே

ஈயெறும்பு நாய் - எறும்புநாய் கணம் - பேய்கழுகுகாகம் கழுகுகாகம் ஆகியவைகள் உண்ப -உண்ணும் உடலே சுமந்து - (நான் இந்த) உடலைச் சுமந்து இது ஏல்வது என்று இது தக்கது என்று நினைத்து மதமே மொழிந்து ஆணவ மொழிகளையே பேசி மத உம்பல் மத யானை போல

ஏதும் என்றனிட கோல் எ(ன்)னும் பரிவு
மேவி நம்பி இது போதும் என்க சிலர்
ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி

ஏதும் எல்லாம் என்றனிட என்னுடைய கோல்  எனும் ஆட்சியில் அடங்கியது என்ற பரிவு மேவி -சுக நிலையை அடைந்து நம்பி இந்த நிலை நிலைத்து நிற்கும் என நம்பி இது போதும் என்க இந்த ஆடம்பரங்கள் இவருக்குப் போதுமோ என்று சிலர் -சிலர் (கூறும்படி) ஏய் தனங்கள் பொருந்திய பொருட்செல்வம் தனி ஒப்பற்ற வாகு - அழகிய சிந்தை வசனங்கள் பேசி எண்ணங்களைக் கொண்டு பேச்சுகள் பேசி

சீத தொங்கல் அழகா அணிந்து மணம்
வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி
சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக

சீத குளிர்ந்த தொங்கல் மாலைகளை அழகா(க)அணிந்து - அழகாக அணிந்து மணம் வீச நறு மணம்வீச மங்கையர்கள் ஆட பெண்கள் நடமாட  வெண் கவரி வெண்மையான சாமரங்கள் சீற மேலெழுந்து வீச கொம்பு ஊது கொம்பு குழல் புல்லாங்குழல் ஊதஊத தண்டிகையில் பல்லக்கில் அந்தமாக அழகாக

சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும்
ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய்

சேர் வீற்றிருக்கும் கனம் பெருமை கூடிய பெரிய வாழ்வு கொண்டு - பெரிய வாழ்வை மேற்கொண்டுஉழலும் திரியும் ஆசை வெந்திடவும் - ஆசையானது வெந்து ஒழியவும் ஆசை - (உன் மீது) ஆசை  மிஞ்சி -மிகுந்து சிவ சேவை கண்டு மங்களகரமான உமது தரிசனத்தைப் பார்த்து உனது பாதத் தொணடன் என -உன்னுடைய திருவடித் தொண்டன் என்னும்படியானஅன்பு தாராய் அன்பைத் தருவாயாக

சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி
சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட

சூது இருந்த வஞ்சனைச் செயல்களுக்கு இருப்பிடமாயிருந்த விடர் மேய் மலைப் பிளவுகளைக் கொண்ட இருண்ட கிரி - இருண்ட மலையாகிய கிரௌஞ்சமும் சூரர் அசுரர்களும் வெந்து பொடியாகி -வெந்து பொடியாகி மங்கி விழ அழிந்து விழ சூரியன்சூரியனுடைய புரவி தேர் குதிரைகள் கூட்டிய ரதம்நடந்து சென்று நடு பங்கின் ஓட முன்பு போல் நேர் வழியில் நடு பாகத்தில் ஓட

சோதி அந்த பிரமா புரந்தரனும்
ஆதி அந்த முதல் தேவரும் தொழுது
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்பு கூர

சோதி ஒளி பொருந்திய அந்தப் பிரமாபுரந்திரனும் -அந்தப் பிரமனும் இந்திரனும் ஆதி அந்தம் முதல் தேவரும் - முதல் தேவர் முதல் கடைசி தேவர் வரை உள்ள எல்லா தேவர்களும் தொழுது சூழ வணங்கிச் சூழ்ந்து நிற்க மன்றில் நடமாடும் - (கனக) சபையில் நடனமிடும் எந்தை முதல் அன்பு கூற என் தந்தையாகிய சிவபெருமான் முதலாக யாவரும் அன்பு மிக்கு நிற்க

வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில்
ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள்
மாதர் சிந்தை களி  கூர நின்று நடனம் கொள்வோனே

வாது கொண்ட அவுணர் - போருக்கு என்று வாது செய்த அசுரர்கள் மாள மாண்டு அழிய செம் கை அயில் ஏவி - சிவந்த கையில் இருந்த கூரிய வேலாயுதத்தைச் செலுத்தி அண்டர் குடியேற - தேவர்கள் தங்கள் பொன்னுலகத்துக் குடி போகவிஞ்சையர்கள் மாதர் கந்தருவர்களின் மாதர்கள்சிந்தை களி  கூர மனம் மிக மகிழ நின்று நின்றுநடனம் கொள்வோனே நடனம் புரிபவனே

வாச கும்ப தன மானை வந்து தினை
காவல் கொண்ட முருகா எ(ண்)ணும் பெரிய
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே

வாச நறு மணம் உடையதும் கும்ப -  குடம் போன்றதுமான தன மானை வந்து கொங்கைகளை உடைய மான் போன்ற வள்ளியிடம் வந்து தினை காவல் கொண்ட தினைப் புனத்தைக் காவல் புரிந்தமுருகா - முருகனே எ(ண்)ணும் மதிக்கத்தக்க பெரிய -பெரிய வாலி கொண்ட புரம் ஏய் வாலி கொண்ட புரத்தில் பொருந்தி அமர்ந்து வளர் தம்பிரானே -வீற்றிருந்து இலகும் தம்பிரானே

சுருக்க உரை

றும்புநாய்,  கழுகுபேய்காகம் இவைகள் உண்ணும் இந்த உடலை நான் சுமந்துஇது தக்கது என்று எண்ணிஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துஆணவமான மொழிகளைப் பேசிப் பெரிய வாழ்வைக் கொண்டு திரியும் ஆசை வெந்து அழியவும்உன் மீதுள்ள ஆசை மிகவும்உனது தரிசனத்தைப் பார்த்து உன் திருவடித் தொண்டன் என்னும் அன்பைத் தருவாய்

அசுரர்களை அழித்துசூரியன் மீண்டும் நேர்வழியில் செல்லச் செய்துசிவனும் தேவர்களும் சூழ்ந்து நிற்க நடனம் ஆடியவனே, மான் போன்ற வள்ளியிடம் வந்து தினைப் புனத்தைக் காவல் செய்த முருகனே, உனது பாதத் தொண்டன் என்று அன்பு தருவாய்


விளக்கக் குறிப்புகள்

சூரியன் புரவி தேர் 
சூரசம்மாரம் ஆன பிறகு தான்பாதை தவறிய சூரியன் தேர்மீண்டும் நடு நேராகப் போக முடிந்தது என்பது  பொருள் 

நடனம் கொள்வோனே 
இந்த நடனம் அசுரர்களைச் அழித்த பின் முருக வேள் போர்க்களத்தில் குடையைத் தாழ்த்தி ஆடும் கூத்தைக் குறிக்கும் (குடைக்கூத்து)
படைவீழ்த் தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த் தவர்மு னாடியக் குடையும்                --- சிலப்பதிகாரம்

தினை காவல் கொண்ட முருகோனே
 மயில்பயில் குயில்கிளி  வம்பி லேகடி தொண்டினோனே

                                                 --  திருப்புகழ், அலைகடல்சிலை 

No comments:

Post a Comment