பின் தொடர்வோர்

Sunday 21 May 2017

உருவம் ஒன்று இலாத பருவம்

‘உருவம் ஒன்றிலாத பருவம் வந்து சேர
இந்த உடல் ஐந்து பூதங்களால் ஆனது என்பதை அறிந்தும், இறுதியில் அதே பஞ்ச பூதங்கள் அந்த உடலை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் நிலைமை வரும் என்பதை அறிந்தும் மனிதன் உலகின் இன்ப-துன்பமெனும் சுழற்சியிலேயே உழல்கிறான். வெளி விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன் உடலினுடைய அநித்யத்தை உணராது மனித வாழ்வு நிரந்தரம் என்று நினைக்கிறான்.
மருவும் அஞ்சு பூத உரிமை 
வந்திடாது மலமிதென்று அறியாது 
மயல் கொளிந்த வாழ்வு அமையுமெந்த 
நாளும் வகையில் வந்திராத அடியேனும்
இப்படி ஆகி விட்ட ஒவ்வொருவனும்  கடைத் தேற அடுத்த இரண்டு வரிகளில் தீர்வு அளிக்கிறார் குருநாதர். இரண்டு வரிகள் என்றாலும் வழி ஒன்றுதான். அந்த வழி என்னவென்று பார்ப்போமா? அவர் கூறுகிறார்,
உருகி அன்பினோடு உனை நினைந்து 
நாளும் உலகமென்று பேசஅறியாத
உருவமொன்றிலாத பருவம் வந்து சேர 
உபய துங்க பாதம் அருள்வாயே
“முருகா, அன்புடன் உன்னையே நினைந்து உருகி நீயே கதி என்று கிடக்க வேண்டும். உன் ஒளி பொருந்திய பாத மலர்களைத் தர வேண்டும்”,எங்கிறார்.
அவன் எதற்காகத் தர வேண்டும்?
 “நற்கதி அடைய”
“அது தான் நீயே கதி என்று உருகிய பிற்பாடு தானே அவன் பாத மலரைத் தந்தான்? இதற்கு மேலே என்ன இருக்கிறது?”
“கதி” என்பதற்கு இரு பொருட்கள் கொள்ளலாம் இல்லையா? ஒன்று, வழி அல்லது பாதை. மற்றொன்று இலக்கு.  அவன் பாத மலர்களைத் தருவது நம்மை சரியான பாதையில் அழைத்துச் செல்லத்தான்”  “அப்படியானால் அவன் நம்மை எங்கே அழைத்துச் செல்வான்?”
“அது தான் மோக்ஷம் என்ற நிலை”
“ஓ, அது தான் இரண்டாவதாக பொருள் கொண்ட “கதி”யா?”
“ஆமாம், இப்பொழுது புரிகிறதா?”
“இல்லை, மேலும் விளக்கம் வேண்டும். மோக்ஷம் என்ற நிலை என்றால் என்ன?”
“அதைத் தான் அருணகிரிநாதர் ‘உருவம் ஒன்றில்லாத பருவம்’ என்று விளக்குகிறார்.
“விளக்குகிறாரா!! மேலும் ஏதாவது மறைக்கிறாரா? புரியவில்லையே?”
மறை என்னும் வேதத்தின் முடிவில் தான் இந்நிலைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. வீடு அல்லது மோக்ஷம் என்பது நம் உணர்வின் நிலை. (உணர்வு என்பது கூட சற்றே தவறான வார்த்தை தான்.) பக்தியின் கடை நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு ஞானம் எனும் உணர்வு சித்திக்கும் போது அவன் அடையக் கூடிய நிலை அது.
அந்த நிலை எப்படி இருக்கும்?
அது ஓர் அனுபூதி நிலை. வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆகவே தான், உருவம் ஒன்றிலாத பருவம் வந்து சேர” எங்கிறார். உருவம் என்று வந்து விட்டால் நாமமும்  அதன் பின் பேதமும் வந்து சேர்ந்து விடும் அல்லவா?
இங்கு பருவம் என்பது ஓரு நிலைப்பாடு. அந்த நிலையில் கடவுளின் உருவம் தாண்டி கண்களாலும் சரி, மனதினாலும் சரி அறிய முடியாததை அறியும் நிலை.
மேலும் விவரிக்க முடியுமா?
வேதாந்ததை இப்படி எளிதாகக் கூற முடியுமா என்ன? எனினும் நாம் சிறிது முயற்சிக்கலாம்.
அதாவது உபநிஷத்துக்கள் கூறிய வழியில் சென்று முமுக்ஷுத்வம் அடைந்த ஒரு சாதகன் (அதற்கே கடவுள் அருள் வேண்டும்) சமாதி நிலையை அடைகிறான். அதில் இரண்டு வகை. ‘ஸவிகல்பம்’ என்றும் ‘நிர்விகல்பம் என்றும் கூறுவர். ஸவிகல்பத்தில் ஜபத்யானம் மூலமாக இஷ்ட தேவதையின் அருளால் சமாதி நிலை அடைய முடிகிறது. இது வரை த்வைதம் தான். அதன் பிறகே நிர்விகல்ப சமாதி ஸித்தமாகிறது. (யோக சாஸ்திரங்களில் ஸம்ப்ரஞதா அஸம்ப்ரஞதா சமாதி என்று கூறுவதும் உண்டு) அப்பொழுது காண்பவனும், காணப்படு பொருளும் ஒன்றாகின்றன.  காண்பவனே காணப்படுபொருளுடன்  ஐக்யமான பிறகு அத்வைதம் ஸித்தமாகிறது. முடிந்த முடிவாக அது ஸித்தமான பின், அதாவது ஆத்மாவே பரமாத்மாவான பின் அங்கு உருவம் ஏது, அல்லது வடிவம் தான் ஏது? எல்லாம் ஒரே சைதன்யமும்-ஸத்தும் அது அளிக்கும் ஆனந்தமும் தான் மிஞ்சுகிறது. இதை அகண்டாகார வ்ருத்தி என்றும் சொல்வார்கள். அல்லது நம் குருநாதர் கூறுவது போல் உருவம் ஒன்றிலாத பருவம் என்றும் சொல்லலாம்.
“எதோ புரிந்த மாதிரி இருக்கிறது. உபய துங்க பாதம் என்றால் இரு ஒளி மிகுந்த பாதங்கள் என்று தானே பொருள்?”
“ஆமாம். ஆனால் இந்த திருப்புகழில் இரு பொருள் படும் படி எடுத்துக் கொள்ளலாம். கதி என்று சொன்னோம் அல்லவா? ஒன்று, வேதாந்த விசாரத்தின் வழியில் என்னைக் கைப் பிடித்து அழைத்துச் செல்வாயாக. அதற்கு பாதை காண்பிக்க நீ தான் என் முன்னால் நடக்க வேண்டும்.
இரண்டாவதாக உன் பாதங்கள் தான் என்னுடைய இலக்கு அல்லது என் லக்ஷியம். ஏனெனில் அது தானே ஸச்சிதானந்தத்தை அளிக்கக் கூடியது!”
உபய என்றால் இரண்டு என்று பொருள். இரண்டு மலர் பாதங்களும் இரண்டு விதமாக அதாவது மார்க்கமாகவும்  மோக்ஷமாகவும் இருக்கின்றன.
இந்த திருப்புகழின் மறு பாதியும் மிகுந்த அழகுடைய சொற்களாலும் பொருளாலும் அமையப் பெற்றுள்ளது. ஹரியும் அயனும் தேடினாலும் கிடைக்க முடியாத அடியையும் முடியையும் உடைய அரன் தன் செல்வனின் அடி பணிந்து நிற்கிறார். எதற்கு?
விஷயம் தெரிந்தாலும் ஒரு தந்தை தன் செல்லக் குழந்தையின் வாயிலாக அறிந்து கொண்டு மகிழ்வது இயற்கையான செயல். பரமசிவன் ப்ரணவத்திற்குப் பொருள் கூறு என்று அடி பணிந்து நிற்கிறார். செல்வன் செங்கனிவாயால் அதைக் கூறுகிறான்.  தென்முகக் கடவுளான தக்ஷிணாமூர்த்தி குருவானவர். அவருக்கு உபதேசித்ததால் அவன் ஆதி குருநாதன் ஆகிறான். “அரி விரிஞ்சை தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே அருளுகின்ற போது பொருளிதென்று காண அருளுமைந்த ஆதி குருநாதா.
தேவலோகத்தையும் மற்ற உலகங்களையும் ஆட்டிப் படைத்த சூரபத்மனின் மமதையை வேலால் அழித்தவனே
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செருவடங்க வேலை எறிவோனே
“செயலமைந்த வேத தொனி முழங்கு வீதி திருவிரிஞ்சை மேவு பெருமாளே”  
விரிஞ்சிபுரத்தின் வீதியில் வேதத்தின் தொனி அல்லது த்வனி அல்லது ஒலி அனவரதமும் ஒலித்துக் கொண்டிருக்குமாம். அதுவும் எப்பேற்பட்ட  வேதம்? செயல் அமைந்த வேதம்.  வேதம் என்பது ஒலிகளால் ஆனது தானே. செயல் எங்கிருந்து வந்தது? இங்கு தான் ஒரு புது அர்த்தத்தைக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.
இப்பாடலின் நாங்காவது வரியில் வேதாந்தத்தின் அவசியத்தை குருநாதர் உணர்த்தினார். அது உத்தர மீமாம்சை என்றும் சொல்வதுண்டு.  ஒரு சாதகன் வேதாந்தத்தை நாடிச் செல்வது உடல் மற்றும் இதர விஷயங்களின் நிலையாமையை உணர்ந்த பின்னர் தான். விவேக வைராக்கியத்தினால் முமுக்ஷுத்வத்திற்கு அதிகாரி ஆகிறான்.
அதற்கு முன்னால் வேதம் சொல்படி தர்ம வழியில் நின்று ஹொமங்கள் பல செய்து இம்மைக்கும் மறுமைக்கும் பொருளும் புண்ணியமும் முறையே சேர்க்கிறான். அப்படிச் செய்வதனால் அவனுள் சித்த சுத்தி ஓரளவுக்கு ஏற்படுகிறது.
அது மட்டுமல்ல உலக நன்மைக்காகவும் தர்மம் செழிப்பதற்காகவும் அந்தண ஸ்ரேஷ்டர்களும் முனிவர்களும் வேதம் விதித்த வழியில் பல யாகங்களயும் ஹோமாதிகளையும் செய்கிறார்கள். இதனால் பல காரியங்க்களும் செயல்களும் நிறைவேறுகின்றன. அதுவும் மிகவும் புண்ணியத் தலமாகிய விரிஞ்சிபுரத்தில் ஓயாது இவ்வகையான செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  வேதத்தின் இப்பகுதிக்குப் பூர்வ மீமாம்சை என்று பெயர்.  இதைத்தான்
செயலமைந்த வேத தொனி முழங்கு வீதி திருவிரிஞ்சை மேவு பெருமாளே”  என்று கூறுகிறாரோ!
ஆக, நான்காவது வரியில் வேதாந்தத்தயும் எட்டாவது வரியில் வேததின் முன் பாகத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறுகிறார்.



திருப்புகழ் பாடல் - மருவும் அஞ்சு பூதம் 

No comments:

Post a Comment