பின் தொடர்வோர்

Saturday 5 October 2019

388.நிமிர்ந்த முதுகு


388
பொது

உன் திருவடியை நான் பணிந்து மகிழ மாட்டேனோ
          
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
           தனந்த தனனந் தனந்த                        தனதான

நிமிர்ந்த முதுகுந் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
   நிறைந்த வயிறுஞ் சரிந்து                                         தடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு
   நினைந்த மதியும் கலங்கி                               மனையாள்கண்
டுமிழ்ந்து பலருங்  கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
   உறைந்த உயிரும் கழன்று                                 விடுநாள்முன்
உகந்த மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
   ஒடுங்கி நினையும் பணிந்து                              மகிழ்வேனோ
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
   திரண்ட சதியும் புரிந்து                                           முதுசூரன்
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து
   சினங்க ழுகொடும் பெருங்கு                                   ருதிமூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண் டுமண்ட
   அடர்ந்த அயில்முன் துரந்து                               பொருவேளே
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
   அணங்கை மணமுன் புணர்ந்த                            பெருமாளே.

பதம் பிரித்து உரை

நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி
நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி

நிமிர்ந்த முதுகும் - நிமிர்ந்துள்ள முதுகும். குனிந்து - வளைந்து சிறந்த - திகழ்ந்து இருந்த முகமும் திரங்கி - முகமும் சுருக்கம் அடைந்து நிறைந்த - ஒழுங்காயிருந்த. வயிறும் சரிந்து - வயிறும் சரிந்து தடி ஊணி - கோலை ஊன்றி.


நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு
நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு

நெகிழ்ந்து - நெகிழ்வுற்று சடலம் தளர்ந்து - உடலும் தளர்ச்சி அடைந்து விளங்கு விழி - ஒளியுடன் இருந்து கண் அங்கு இருண்டு - அங்கு இருளடைந்து நினைந்த மதியும் -  நினைவுடன் இருந்த அறிவும் கலங்கி - கலக்கம் அடைந்து மனையாள் கண்டு - மனைவி இதைப் பார்த்து.

உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து 
உறைந்த உயிரும் கழன்று விடு நாள் முன்

உமிழ்ந்து - (சீ என) உமிழ்ந்து பலரும் கடிந்து - பிறர் பலரும் வெடு வெடு என்று பேசியும் சிறந்த இயலும் பெயர்ந்து - சிறப்பாக இருந்த குணத் தன்மையும் நீங்கலாகி உறைந்த உயிரும் - (உடலில் குடி கொண்டிருந்த) உயிரும் கழன்று விடு - பிரிந்து விடும் நாள் முன் - நாள் வருவதற்கு முன்பாக.

உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ

மனமும் உகந்து - மனம் மகிழ்ச்சியுடன் குளிர்ந்து – நல்ல பயன்கொள் - பயனைத் தரக் கூடிய தருமம் புரிந்து - தருமங்களைச் செய்து  ஒடுங்கி - மனம் ஒடுங்கி நினையும் பணிந்து - உன்னையும் வணங்கி. மகிழ்வேனோ - மகிழ மாட்டேனோ?

திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து முது சூரன்

திமிந்தி என - திமிந்தி என்னும் ஒலியுடன். வெம் – கொடிய கணங்கள் குணங்கர் - பிசாசுக் கூட்டங்கள் பலவும் குழும்பி - பல வகையானவையும் ஒன்று கூடி. திரண்ட - கூட்டமாக நின்று சதியும் புரிந்து - தாள ஒத்து இட்டு. முது சூரன் - பழைய சூரன்.

சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து
சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி

சிரம் கை முழுதும் - தலை, கை இவை யாவற்றையும் குடைந்து - நோவு படச் செய்து. நிணம் கொள் குடலும் - மாமிசம் கொண்ட குடலை தொளைந்து - தொளை செய்து சினம் - கோபம் கொண்ட. கழுகொடும் - கழுகுடன். பெரும் குருதி மூழ்கி - மிக்குப் பெருகும் இரத்தத்தில் முழுகி.

அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட
அடர்ந்த அயில்முன் துரந்து பொருவேளே

அமிழ்ந்தி - அமிழ்ந்தும். மிகவும் பிணங்கள் - நிரம்பப்
பிணங்களை. அயின்று - உண்டு. மகிழ் கொண்டு – மகிழ்ச்சி பூண்டு. மண்ட - நெருங்க அடர்ந்த - தாக்கும் அயில் முன் துரந்து - வேலாயுதத்தைச் செலுத்தி பொருவேளே - சண்டை செய்த வேளே.

அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும்
அணங்கை மண முன் புணர்ந்த பெருமாளே.

அலங்கல் என - மாலையாகக் கொண்ட வெண் கடம்பு புனைந்து - கடம்ப மாலையை அணிந்து. புணரும் - (உன்னுடன்) கூடிய குறிஞ்சி அணங்கை - மலை நிலத்துப் பெண்ணாகிய வள்ளியை முன் மணம் புணர்ந்த பெருமாளே - முன்பு மணம் செய்து கூடிய பெருமாளே.

சுருக்க உரை

முதுகு வளைந்து, முகம் சுருங்கி, வயிறு சரிந்து, தடியை ஊன்றி, உடலும் தளர்ந்து, கண் இருண்டு, நினைவு இழந்து, அறிவு கலங்கி நின்று அதனால் மனைவி கோபித்து, நற் குணம் நீங்கி, உயிரும் பிரிந்து விடும்நாள் வருவதற்கு முன்பாக, மனம் மகிழ்வுடன், நல்ல உள்ளத்துடன், நல்ல பயன் தரக் கூடிய தருமங்களைச் செய்து, உன்னைப் பணிய மாட்டேனோ?

திமிந்தி என்னும் ஒலியுடன் பிசாசுக் கூட்டங்கள், ஒன்று கூடி நின்று, தாள ஒத்து இட்டு, சூரனுடைய உறுப்புக்களை உண்டு, கழுகுகளுடன் பெருகும் இரத்தத்தில் முழுகி, பிணங்களை உண்ணும்படி வேலாயுதத்தைச் செலுத்திய வேளே, மலை நாட்டுப் பெண்ணாகிய வள்ளியை முன்பு திருமணம் செய்து கூடிய பெருமாளே, உன் திருவடியை நான் பணிந்து மகிழ மாட்டேனோ?





No comments:

Post a Comment