பின் தொடர்வோர்

Saturday 5 October 2019

391.நீலம் கொள்


391
பொது





                         தானந்த தானத்தந்        தனதானா

நீலங்கொள் மேகத்தின்                   மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண்                 டதனாலே 
மால்கொண்ட பேதைக்குன்           மணநாறும் 
   மார்தங்கு தாரைத்தந்                 தருள்வாயே  
வேல்கொண்டு வேலைப்பண்    டெறிவோனே 
   வீரங்கொள் சூரர்க்குங்                  குலகாலா 
நாலந்த வேதத்தின்                  பொருளோனே 
   நானென்று மார்தட்டும்              பெருமாளே


பதம் பிரித்து உரை
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே
நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே 
நீலம் கொள் - நீல நிறத்தைக் கொண்ட மேகத்தின்  - மேகம் போன்ற மயில் மீதே - மயில் மேல் ஏறி
நீ வந்த வாழ்வை - நீ எழுந்தருளி வந்த திருச்சபா மண்டபத்து காட்சியை  கண்டு அதனாலே - தரிசித்த காரணத்தினால்

மால் கொண்ட பேதைக்கு உன் மண(ம்) நாறும்
மார் தங்கு(ம்) தாரை தந்து அருள்வாயே
மால் கொண்ட பேதைக்கு - உன் மீது காதல் கொண்ட இந்தப் பெண்ணுக்கு உன் – உன்னுடைய  மணம் நாறும் - நறு மணம் வீசும் மார் தங்கும் - மார்பில் விளங்கும் தாரை - மாலையை தந்து அருள்வாயே - கொடுத்தருள்க.

வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே 
வீரம் கொள் சூரர்க்கும் குலகாலா
வேல் கொண்டு - வேலாயுதத்தைக் கொண்டு வேலை – கடலை பண்டு - முன்பு  எறிவோனே - வற்றும்படிச் செலுத்தியவனே வீரம் கொள் சூரர்க்கும் குலகாலா - வீரம் படைத்த சூரர் குலத்துக்கே யமனாக விளங்குபவனே

நால் அந்த  வேதத்தின் பொருளோனே 
நான் என்று மார் தட்டும் பெருமாளே.
நால் அந்த வேதத்தின் - (ருக்க, யஜுர், சாம, அதர்வண என்று சொல்லப்படும்) அந்த நான்கு வேதங்களின் பொருளோனே - பொருளாய் விளங்குபவனே நான் என்று மார் தட்டும் பெருமாளே - (உயிருக்கு உயிராய் நிற்பவன்) நான் என்றும் உயிருக்குள்ளே ஒளித்து நிற்பவன் என்றும் பெருமை பாராட்டும் பெருமாளே.

சுருக்க உரை

நீல நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி நீ தந்தருளிய காட்சியைக் கண்டதினால், உன் மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு உனது நறு மணம் வீசும் உன் மார்பில் விளங்கும் மாலையைத் தருவாயாக. வேலைக் கொண்டு முன்பு கடல் வற்றும்படி செலுத்தியவனே, வீரம் கொண்ட சூரர்கள் குலத்துக்கு யமனாக விளங்குபவனே, நான்கு வேதங்களின் பொருளாய் அமைந்தவனே, உயிர்களுக்குள் உயிராய் இருக்கிறேன் என்று மார் தட்டும் பெருமாளே, எனக்கு உன் மாலையைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது.
ஒப்புக:
1 வேல் கொண்டு வேலைப் பண்டு எறிவோனே...
  வேலை உறை நீட்டி வேலை தனில் ஓட்டு 
  வேலை விளையாட்டு  வயலூரா ...திருப்புகழ்,  ஆரமுலைகாட்டி.

2 நானென்று மார்தட்டும் பெருமாளே....
    நான் என்னும் சொல் கடவுளையே குறிக்கும். 
    உள்ளத் தொடுக்கும் புறத்துளும் நானெனுங் 
   கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்....திருமந்திரம்  
    பிறிது இன்றி நான் அமரும் பொருள் ஆகி நின்றான்...சம்பந்தர் தேவாரதம். 
முருகன் சகல கலா வல்லவன் நான்தான் என்று மார் தட்டிய வரலாறு:
வித்வத் தாம்பூலம் யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஒளவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்த உடன், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறி னார். பின்னர் முருகவேள் தாம்பூலத்தைப் பெற்றார் என்பது புராணம்.

  

No comments:

Post a Comment