பின் தொடர்வோர்

Saturday 5 October 2019

389.நிருதரார்க்கு


389
பொது

இந்தத் தமியன் முன் நீ தோன்றுவதும் ஒரு நாள் ஆகுமோ?

               தனன தாத்தன தானா தானன
              தனன தாத்தன தானா தானன
              தனன தாத்தன தானா தானன          தனதான

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
   சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
   நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய              விறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
   எனஇ ராப்பகல் தானே நான்மிக
   நினது தாட்டொழு மாறே தானினி           யுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
   பிறவி மாக்கட லு\டே நானுறு
   சவலை தீர்த்துன தாளே சூடியு             னடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
   மருளி யாட்கொளு மாறே தானது
   தமிய னேற்குமு னேநீ மேவுவ              தொருநாளே
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
   னுருவ மாய்ப்பல நாளே தானுறு
   தவசி னாற்சிவ னீபோய் வானவர்           சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறு
   மசுர பார்த்திப னோடே சேயவர்
   தமரை வேற்கொடு நீறா யேபட          விழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவ
   ருறையு மாக்கிரி யோடே தானையு
   மழிய வீழ்தெதிர் சூரோ டேயம                ரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
   சிAறாய மீட்டர னார்பால் மேவிய
   அதிப ராக்ரம வீரா வானவர்                பெருமாளே

பதம் பிரித்தல்

நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய
சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒர பாலா ஜேஜெய விறலான

நிருதரார்க்கு ஒரு காலா - அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக. சுரர்கள் ஏத்திடு வேலா - தேவர்கள் போற்றிடும் வேலனே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக. நிமலனார்க்கு ஒரு பாலா பரிசுத்த மூர்த்தியாகிய (சிவபெருமானுக்கு) ஒரு குழந்தையே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக விறலான – வீரம் வாய்ந்த.

நெடிய வேல் படையானே ஜேஜெய
என இரா பகல் தானே நான் மிக
நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான்

நெடிய வேல் படையானே - பெரிய வேலாயுதத்தைப் படையாகக் கொண்டவனே ஜேஜெய - உனக்கு வெற்றி உண்டாகுக. என - என்றெல்லாம் இராப் பகல் - இரவு பகல் எந்த நேரத்திலும்.
தானே மிக - நான் நிரம்ப நினது தாள் தொழுமாறே -  உனது திருவடியைத் தொழும்படி தான் இனி உடனே தான் நான் இனித் தாமதிக்காமலே தான்

தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு
பிறவி மா கடல் ஊடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் அடியார் வாழ்

தரையில் - இப்பூமியில். ஆழ் - ஆழமுள்ள திரை ஏழே போல்  ஏழு கடலைப் போல். எழு பிறவி - எழுகின்ற பிறவி என்னும்
மாக் கடலூடே - பெரிய கடலுள் நான் உறு - நான்
அனுபவிக்கும் சவலை - மனக் குழப்பத்தை. தீர்த்து – நீக்கி உனது தாளே சூடி - உனது திருவடியை என் தலையில் வைத்து
உன் அடியார் வாழ் - உனது அடியார்கள் வாழ்கின்ற

சபையின் ஏற்றி இன் ஞானா போதமும்
அருளி ஆட் கொளுமாறே தான் அது
தமியனேற்கு மு(ன்)னே நீ மேவுவது ஒரு நாளே

சபையின் ஏற்றி - கூட்டத்தில் என்னையும் கூட்டி வைத்து இன் - இனிய ஞானா போதமும் - ஞான உபதேசத்தையும் அருளி ஆட்கொளு மாறே தான் - அருள் செய்து என்னை ஆட்
கொள்ளுமாறு அது - அதன் பொருட்டு. தமியனேற்கு - தனியேனாகிய எனக்கு. முன்னே - முன்னே நீ மேவுவது ஒரு நாளே - வந்து தோன்றுவது ஒரு நாள் உண்டோ?

தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின்
உருவமாய் பல நாளே தான் உறு
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர
தருவின் நாட்டு அரசு ஆள்வான்  - கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகை அரசாளும் (இந்திரன்) வேணுவின் உருவமாய் -
மூங்கிலின் உருவெடுத்த .பல நாளே - பல நாட்கள் தான் உறு - தான் செய்த. தவசினால் - தவப் பயனால். சிவன் – சிவ பெருமான் (உன்னை) நீ போய் வானவர் சிறை தீர - தேவர்களின் சிறையை நீக்கும் பொருட்டு.

சகல லோக்கியமே தான் ஆள் உறும் 
அசுர பார்த்திபனோடே சேய் அவர்
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று

சகல லோக்கியமே தான் ஆள் உறும் - எல்லா உலக
இன்பங்களையும் ஆண்டு அனுபவிக்கும் அசுர பார்த்திபனோடே - அசுர அரசனாகிய சூரனையும். சேயவர் - அவனுடைய
மக்களையும் தமரை - சுற்றத்தினரையும். வேல் கொடு - வேலாயுதத்தால். நீறாயே பட விழ - பொடியாய் அழிந்து
விழும்படி. மோது என்று - தாக்குவாயாக என்று.

அருள ஏற்று அமரோடே போய் அவர்
உறையு மா கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி

அருள - திருவாய் மலர்ந்து சொல்ல. ஏற்று - (அவர் சொல்லுக்கு) இணங்கி. அமரோடே போய் - போருக்கு எழுந்து சென்று. அவர் - அந்த அசுரர்கள் உறையும் – வசிக்கும் மாக்கிரியோடே- பெரிய கிரௌஞ்சம், ஏழு மலைகள் ஆகியவற்றையும். தானையும் - (அவர்களுடைய) சேனைகளையும். அழிய - அழிந்து போகும்படி. வீழ்த்தி -விழும்படிச் செய்து. எதிர் சூரோடே - எதிர்த்து வந்த சூரனுடன் அமர் அடலாகி - பொருந்திய பகைமை பூண்டு.

அமரில் வீட்டியும் வானோர் தான் உறு
சிறையை மீட்டு அரனார் பால் மேவிய
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே.


அமரில் - போரில். வீட்டியும் - அவனை அழித்தும். வானோர் தான் உறு சிறையை - விண்ணவர்களை அவர்கள் அடைபட்டிருந்த சிறையிலிருந்தும் மீட்டு - நீக்கி. அரனார் பால்
மேவிய - (தந்தையாகிய) சிவபெருமானிடத்து வந்து சேர்ந்த அதி பராக்ரம வீரா - பெரிய வலிமைசாலியே. வானவர்
பெருமாளே - தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

அசுரர்களுக்கு ஒரு காலனாக வந்தவனே, தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, பெரிய வேலாயுதப் படையை உடையவனே. உனக்கு வெற்றி உண்டாகுக. நான் இரவும் பகலும் உன் திருவடியைப் பணிந்து போற்றும்படி அருள்புரிவாயாக. இப்பூமியில் உள்ள ஏழு கடல்களைப் போல எழுகின்ற என் பிறவிகளை நீக்கி, என் மனக் குழப்பத்தை ஒழித்து, உனது திருவடியை என் தலையில் வைத்து, உன் அடியாருடன் என்னைக் கூட்டி வைத்து, ஞான உபதேசத்தையும் அருளுமாறு என்னை ஆட்கொள்ளும் நாள் இந்தத் தமியனுக்கு என்று கிட்டுமோ?

கற்பக மரங்கள் நிறைந்த பொன்னுலகை ஆளும் இந்திரன் மூங்கில் உருவத்துடன் தான் செய்த தவப் பயனால், சிவபெருமான் இரங்கி, உன்னைத் தேவர்கள் சிறையை நீக்கும்படி பணி செய்ய, அங்ஙனமே சூரனுடன் போர் செய்து, அவனுடைய கிரௌஞ்சம், எழு மலைகள் ஆகியவற்றைப் பொடி செய்து, சூரனையும் அழித்த வீரனே, தேவர்கள் பெருமாளே, இந்தத் தமியன் முன் நீ தோன்றுவதும் ஒரு நாள் ஆகுமோ?

விளக்கக் குறிப்புகள்

1 வேணுவின் உருவமாய்ப் பல நாளே தான் உறு...
சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கில் உருவத்துடன் சீகாழியில் தவம் செய்தான். அதற்கிணங்கிச் சிவபெருமான் சூரனை  அழிக்கக் கந்தனுக்கு ஆணை இட்டார்.

2. அடியாற் வாழ் சபையின் ஏற்று இன் ஞானா போதமும்....
    இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
    கெடுதல் இலாத் தொண்டரில் கூட்டியவா...கந்தர் அலங்காரம்



No comments:

Post a Comment