பின் தொடர்வோர்

Sunday 6 June 2021

450. இரவுபகற்

 

450


திருவருணை

 

                தனதனனத் தனதான தனதனனத் தனதான

                                                 

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித்

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத்தருவாயே         

பரகருணைப் பெருவாழ்வே பரசிவத் துவஞானா         

அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே

 பதம் பிரித்து உரை

 இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி

திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே

பரம கருணை பெரு வாழ்வே பர சிவ தத்துவ ஞானா

அரன் அருள் சற் புதல்வோனே அருண கிரி பெருமாளே

 

இரவு பகல் - இரவும் பகலும்

பல காலும் - பல முறையும் இயல் இசை முத்தமிழ் கூறி - இயல், இசை நாடகம் என்ற மூவகைப்பட்ட தமிழால் (உன்னைப்) புகழ்ந்து பாடி


திரம் - நிலைத்தது எதுவோ அதை

தெளிவு ஆக - எனக்குத் தெளிவுடனே விளங்க

அருளைத் தருவாயே - உனது திருவருளைத் தந்தருள்க

பர கருணை - மேலான கருணையுடன்

பெரு வாழ்வே - விளங்கும் பெரு வாழ்வே

பர சிவ தத்துவ - மேலான சிவமயமான உண்மையான

ஞானா - ஞானப் பொருளே

அரன் அருள் - சிவபெருமான் அருளிய

சற் புதல்வோனே - நல்ல பிள்ளையே அருணகரிப் பெருமாளே - திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 

  நாள்தோறும் பல முறையும் முத்தமிழால் உன்னைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் எதுவோ அதனை எனக்கு விளங்கும் படியான  திருவருளைத் தந்து அருளுக.  கருணைப் பெருங்கடலே! சிவமயமான உண்மையான ஞானப் பொருளே! சிவபெருமான் மகனே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! உன் திருவருளைத் தருவாயாக

No comments:

Post a Comment