பின் தொடர்வோர்

Sunday 27 June 2021

454.கடல்பரவு

 


454

திருவருணை

 

                தனதனன தனந்த தானன      தந்ததான

              

கடல்பரவு தரங்க மீதெழு          திங்களாலே

   கருதிமிக மடந்தை வார்சொல்வ தந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய      தென்றலாலே  

வயலருணையில் வஞ்சி போதநலங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி     றைஞ்சும்வீரா

`   எழுகிரிகள் பிளந்து வீழஎ       றிந்தவேலா

அடலசுரர் கலங்கி யோடமு       னிந்தகோவே

   அரிபிரம புரந்த ராதியர்        தம்பிரானே

 

பதம் பிரித்து உரை

 

கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே

கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே

கடல் பரவும் - கடலில் பரந்து வரும்

தரங்கம் மீது எழு - அலைகளின் மேல் தோன்றி வரும் திங்களாலே – சந்திரனாலும் கருதி மிக - நினைத்து நினைத்து மடந்தைமார் - தமக்குள் பேசிக் கொள்ளும் பெண்கள்

சொல் வதந்தியாலே - சொல்லும் ஊர்ப் பேச்சாலும்

 

வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே

வயல் அருணையில் வஞ்சி போத(ம்) நலங்கலாமோ

வட அனலை - வடவாக்கினியை முனிந்து -  கோபித்து வீசிய தென்றலாலே - வீசுகின்ற தென்றலாலும் வயல் அருணையில் - வயல்கள் நிறைந்துள்ள திருவண்ணாமலையில் இருக்கும் வஞ்சி - இந்தப் பெண் போத(ம்) நலங்கலாமோ - அறிவு கலங்கலாமோ

 


இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா

எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா

இடம் உமையை - இடப்பாகத்தில் உமாதேவியை மணந்த - சேர்த்துக் கொண்ட நாதர் - சிவபெருமான் இறைஞ்சும் வீரா - வணங்குகின்ற வீரனே எழு கிரிகள் - ஏழு மலைகளும் பிளந்து வீழ - பிளந்து விழும்படி எறிந்த வேலா - எறிந்த வேலாயுதனே

 

அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே

அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

 அடல் அசுரர் - வலிமை கொண்ட அசுரர்கள் கலங்கி ஓட - கலங்கி ஓடவும் முனிந்த கோவே - கோபித்த அரசே அரி - திருமால் பிரம  புரந்தராதியர் - பிரமன், இந்திரன் முதலியோர்களின் தம்பிரானே – தம்பிரானே. 

தம்பிரான் என்றால் தலைவன். தனகென்று தலைவன் இல்லாதவன் தம்பிரான்

 


சுருக்க உரை

 கடல் அலைகளின் மேல் தோன்றும் சந்திரனாலும், பெண்கள் தமுக்குள் பேசிக் கொள்ளும் வதந்தியாலும், வடவாக்கினியைக் கோபித்து வீசும் தென்றலாலும், அருணையில் உள்ள இந்தப் பெண் வருந்தலாமோ 

இடது பக்கத்தில் உமையை சேர்த்துக் கொண்ட சிவன் வணங்கும் வீரனே! ஏழு மலைகள் பிளந்து வீழ, வேல் எய்திய வேலா! வலிய அசுரர்கள் கலங்கி ஓட கோபித்தத் தலைவனே! திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் தம்பிரானே! இந்தப் பெண் காமத்தால் வருந்தலாமோ

 

விளக்கக் குறிப்புகள்

 கடல் பரவும் தரங்கம்

மதி, மகளிர் பேச்சு, தென்றல் ஆகியவை காமத்தை வளர்ப்பன

 

ஒப்புக

எழு கிரிகள் பிளந்து வீழ 

குன்றொ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ

ரும்போய் மங்கப் பொருகோபா) ---------- திருப்புகழ்,  வெங்காளம்பாண

சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்

சளப்பட மாவுந் தனிவீழத்)---------------     திருப்புகழ், பெருக்கவு பாயங்

No comments:

Post a Comment