பின் தொடர்வோர்

Sunday 27 June 2021

455கயல்விழி

 

455


திருவருணை

  

            தனதனத் தானனத் தனதனத் தானனத்

            தனதனத் தானனத்         தனதான

 

 

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்

  கணவகெட்டேனெனப்              பெறுமாது

கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்

  கதறிடப்பாடையிற்               றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்

  பறைகள்கொட்டாவரச்             சமனாரும்

பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்

  பரிகரித் ம்தாவியைத்            தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

  றருணையிற் கோபுரத்          துறைவோனே

அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்

  தரியசொற் பாவலர்க்           கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரிலிற்

  புனமறப் பாவையைப்          புணர்வோனே

பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்

  பொருமுழுச்சேவகப்             பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என

கணவ கெட்டேன் என பெறு மாது

கணவ - கணவனே கயல் விழித்தேன் - கயல் மீன் போன்ற கண்களை விழித்து (உங்களுக்குப் பணிவிடைகள் செய்தேன்) எனைச் செயல் அழித்தாய் என - என்னை செயலற்றுப் போகும்படி செய்து விட்டீர்களே என்றும் கெட்டேன் எனப் - இனி நான் அழிந்து போனேன் என்றும் கூறி பெறு மாது - பெற்ற தாய்

கருது புத்ரா என புதல்வர் அப்பா என

கதறிட பாடையில் தலை மீதே

கருது புத்ரா என - என் எண்ணத்திலேயே உள்ள மகனே என்று புலம்பவும் புதல்வர் அப்பா என கதறிட - பிள்ளைகள் அப்பா என்று கதறவும் பாடையில் தலை மீதே - பாடையில் தலைமாட்டுப் பக்கத்தில் நின்று

பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ

பறைகள் கொட்டா வர சமனாரும்

பயில் குலத்தார் அழ – நெருங்கிய உறவினர் அழ பழைய நட்பார் அழ - பழைய நண்பர்கள் அழ பறைகள் கொட்டா வர - பறைகள் கொட்டி வர சமனாரும் – யமனும்

 பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை

பரிகரித்து ஆவியை தர வேணும்

பரிய - பருத்த கைப் பாசம் விட்டு எறியும் அப்போது - கையிலுள்ள பாசக் கயிற்றை எறியும் போது எனை - என்னை பரிகரித்து - காப்பாற்றி ஆவியைத் தர வேணும் -  என் உயிரைத் தந்து அருளுக

 அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள்

அருணையில் கோபுரத்து உறைவோனே

அயில் - வேல் அறச் சேவல் - தரும நிலைக் கோழி கைக்கு இனிது உர - இவை இரண்டும் திருக் கரத்தில் இனிது விளங்க தோகையுள் - மயில் மீது அருணையில் கோபுரத்து - திருவண்ணாமலையில் உள்ள கோபுரத்தில் உறைவோனே - வீற்றிருப்பவனே

அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து

அரிய சொல் பாவலர்க்கு எளியோனே 

அமரர் அத்தா - தேவர்கள் தலைவனே சிறுக் குமரி முத்தா - சிறிய குமரி வள்ளிக்கு பிரியம் தருபவனே சிவத்து அரிய சொல் - சிவ பெருமானை அருமையான சொற்களால் (பாடும்) பாவலர்க்கு எளியோனே -  பாவலர்களுக்கு எளிமையானவனே

 புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில்

புன மற பாவையை புணர்வோனே

புயல் இளைப்பாறு - மேகங்கள் தங்கிப் படிகின்ற பொன் - அழகிய சயிலம் - வள்ளி மலையின் மொய்ச் சாரலில் - நெருங்கிய சாரலிலே புன மறப் பாவையை - தினைப்புனம் காத்திருந்த வேடப் பெண்ணாகிய வள்ளியை புணர்வோனே - கூடியவனே

 பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை

பொரு முழு சேவக பெருமாளே

பூதரத்தொடு - சூரனைக் காத்திருந்த ஏழு மலைகள் பொடிபட - பொடிபட கடல் சூரனை - கடலில் மாமரமாகக் கிடந்த சூரனை பொரு - சண்டை செய்த முழுச் சேவக - பரி பூரணமான வலிமை உள்ள பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

 

என்னைச் செயலற்றுப் போகும்படி செய்து விட்டீர்களே என்று மனைவியும், என் எண்ணத்திலேயே உள்ள மகனே என்று தாயும், அப்பா என்று மக்களும், கதறி அழஉறவினர்களும், நண்பர்களும் சுற்றி நின்று அழ, பறைகள் கொட்டி முழங்க, யமன் என்னைக் கவர வரும்போது  காப்பாற்ற வேண்டும். 

வேல், சேவல் ஆகிய இரண்டும் ஏந்திய கரத்துடன் மயில் மீது அருணையில் கோபுரத்தில் உறைபவனே! அமரர் தலைவனே! வள்ளிக்குப் பிரியமானவனே! சிவபெருமானை அருமையாகப் பாடும் பாவலர்க்கு எளியவனே! தினைப் புனத்தில் வேடுவர் பெண்ணாகிய வள்ளியைக் கூடியவனே! அசுரர்களையும் அவர்களுடைய ஏழு மலைகளையும், கடலில் மாமரமாக இருந்த சூரனையும் பொடி செய்தவனே! என் ஆவியைக் காத்தருளுக 

 

விளக்கக் குறிப்புகள்

 அருணையிற் கோபுரத்து

திருவண்ணாமலை கோபுரத் திளையனார் என்னும் முருக வேளைப் பின் வரும் ஆறு திருப்புகழ்ப் பாடல்கள் குறிப்பனவாகும்

   கயல்விழி, கறுவுமி, பரியகை, , தருணமணி, முழுகிவட,  வடவையன

   என்று தொடங்கும் பாடல்கள்

 

அயிலறச் சேவல்கைக் கினிதர

   இந்த அடியில் வேல், சேவல், மயில் மூன்றும் ஓதப்பட்டன

 

ஒப்புக  

    அடலரு ணைத்திரு கோபுரத் தேயந்த வாயிலுக்கு

    வடவரு கிழ் சென்று கண்டுகொண்டேன்--------கந்தர் அலங்காரம் 

 

   கடற் சூரனைப் பொரு

    தற்கா ழிச்சூர் செற்றாய் ---------------------- திருப்புகழ், துப்பாரப்பா

No comments:

Post a Comment