பின் தொடர்வோர்

Tuesday 29 June 2021

457. கருணை சிறிது

 

457


திருவருணை

 

தனன தனதன தனதன தனதன

தனன தனதன தனதன தனதன

தனன தனதன தனதன தனதன      தனதான

 

கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்

  பிசித அசனம றவரிவர் முதலிய

  கலக விபரித வெகுபர சமயிகள்           பலர்கூடிக்  

கலக லெனநெறி கெடமுறை முறைமுறை

 கதறி வதறிய குதறிய கலைகொடு

 கருத அரியதை விழிபுனல் வரமொழி      குழறாவன்   

புருகி யுனதருள் பரவுவகை வரில்விர

 கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய

 லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள   றதுபோக

உதறி லெனதெனு மலமறி லறிவினி

 லெளிது பெறலென மறைபறை யறைவதொ

 ருதய மரணமில் பொருளினை யருளுவ    தொருநாளே

தருண சததள பரிமள பரிபுர

 சரணி தமனிய தநுதரி திரிபுர

 தகனி கவுரிப வதிபக வதிபயி                  ரவிசூலி

சடில தரியநு பவையுமை திரிபுரை

 சகல புவனமு முதலிய பதிவ்ருதை

 சமய முதல்வித னயபகி ரதிசுத                சதகோடி

அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு

 கருணை வருணித தனுபர குருபர

 அருணை நகருறை சரவண குரவணி         புயவேளே

அடவி சரர்குல மரகத வனிதையு

 மமரர் குமரியு மனவர தமுமரு

 கழகு பெறநிலை பெறவர மருளிய        பெருமாளே

 

 பதம் பிரித்து உரை

 கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர்

பிசித அசன மறவர் இவர் முதலிய

கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி

கருணை சிறிதும் இல் - கருணை என்பதே சிறிதும் இல்லாத பறி தலை - தலை மயிர் பறிப்பவரும் நிசிசரர் - அரக்கர்களுக்கு ஒப்பானவரும் பிசித அசன - புலால் உண்ணும் மறவர் இவர் முதலிய -வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய கலக - கலகங்கள் செய்தும் விபரித - விபரீத உணர்ச்சியால் மாறுபட்டும் வெகு பர சமயிகள் - பல திறத்த பர சமய வாதிகள் பலர் கூடி - பலரும் ஒன்று சேர்ந்து

 

கல கல என நெறி கெட முறை முறை முறை

கதறி வதறிய குதறிய கலை கொடு

கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா

கல கல என நெறி கெட - ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு முறை முறை முறை கதறி - அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி வதறிய - வாயாடித் திட்டி குதறிய - நெறி தவறிப் பேசும் கலை கொடு - கலை நூல்களால் கருத அரியதை - எண்ணுதற்கு அரிதான மெய்ப் பொருளை விழி புனல் வர - கண்களில் நீர் வர மொழி குழறா - பேச்சுக் குழறி

அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் விரகு


ஒழியில் உலக இயல் பிணை விடில் உரை செயல்

உணர்வு கெடில் உயிர் புணர் இரு வினை அளறு அது போக

அன்புருகி - அன்புடன் மனம் உருகி உனது அருள் பரவு - உன் திருவருளைப் போற்றும் வகை வரில் - மன நிலை வந்தால் விரகு ஒழியில் - தந்திர புத்தி ஒழிந்தால் உலகு இயல்பு - உலக சம்பந்தமான பிணை விடில் - கட்டுக்கள் விட்டால் உரை செயல் உணர்வு கெடில் - மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால் உயிர் புணர் - உயிரைச் சார்கின்ற இரு வினை அளறு அது போக உயிர் உடம்பொடு கூடுதற்கு உரிய ஆன இருவினை என்னும் சேறு  போகும்படி

 


உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில்

எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு

உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே

உதறில் - உதறி விலக்கினால் எனது எனும் மலம் அறில் - எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால் அறிவினில் எளிது பெறல் என - அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று மறை பறை அறைவது - வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான ஒரு - ஒப்பற்ற உதயம் மரணம் இல் பொருளினை - தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அருளுவது ஒரு நாளே - அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா?

 

தருண சத தள பரிமள பரிபுர

சரணி தமனிய தநு தரி திரி புர

தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி

தருண - என்றும் இளமையோடு கூடியதாய் சத தள - தாமரை போன்றதாய் பரிமள - நறு மணம் வீசுவதாய் பரி புர - சிலம்பு அணிந்ததாயுள்ள சரணி - திருவடிகளை உடையவள் தமனிய தநு தரி - பொன் மயமான மேருவை வில்லாக ஏந்தியவள் திரி புர தகனி - திரி புரத்தை எரித்தவள் கவுரி - கௌரி [பொன் நிறத்தினவள்] பவதி - பார்வதி [பிறப்பை அறுப்பவள்] பகவதி - பகவதி [ஆறு அருட்குணங்களை உடையவள்], பயிரவி - பைரவி சூலி - சூலத்தை ஏந்தியவள்

[தகனி – எரித்தல், தமனியம் - பொன்]



சடில தரி அநுபவை உமை திரி புரை

சகல புவனமும் உதவிய பதிவ்ருதை

சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி

சடில தரி - சடை தரித்தவள் அநுபவை - போகங்களை நுகர்பவள் உமை - உமா தேவி திரி புரை - திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை - எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை சமய முதல்வி - எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் தனய - மகனே பகிரதி சுத - கங்கையின் மகனே சத கோடி - நூறு கோடி

 


அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு

கருணை வருணித தனுபர குருபர

அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே

அருண ரவியினும் - சிவந்த சூரியர்களை விட அழகிய - அழகான ப்ரபை விடு கருணை - ஒளி வீசும் கருணையே வருணித - அலங்கார உருவதான தநுபர - உடலை உடையவனே குருபர - குருபரனே அருணை நகர் உறை - திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் சரவண - சரவணனே குரவு அணி - குரா மலரை அணிந்த புய வேளே - புயங்களை உடைய வேளே

அடவி சரர் குல மரகத வனிதையும்


அமரர் குமரியும் அனவரதமும் மருகு

அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே

அடவி சரர் குல - காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து மரகத வனிதையும் - பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும் அமரர் குமரியும் - தேவர் குமரியான தேவ சேனையும் அனவரதமும் மருவு அழகு பெற - எப்போதும் பக்கத்தில் அழகு விளங்க நிலை பெற - நிலை பெற்றிருக்க வரம் அருளிய பெருமாளே - அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே

  


சுருக்க உரை

 பல திறத்த பர சமயவாதிகள் பலரும் கூடி ஆரவாரம் செய்து, கூச்சலிட்டு, வாய்விட்டுக் கதறி, நெறி தவறிப் பேசும் கலை நூல்களால் எண்ணுதற்கும் அரிய மெய்ப் பொருளை, கண்ணீர் மல்க, மொழி குழற, உருகி உனது திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால், தந்திர புத்தி ஒழிந்தால், கட்டுக்கள் விலகினால், மனம், வாக்கு, செய்கை, உணர்வு ஆகியவற்றின் தொழில் அழிந்தால், இரு வினைகளும் போகும்படி விலக்கினால், எனது என்னும் ஆசை முற்றும் அற்றுப் போனால், வேதங்கள் கூறும் ஆதி அந்தம் இல்லாத பேரின்பப் பொருளை அடியேனுக்கு நீ அருளும் நாள் கிட்டுமா?

கௌரி, பார்வதி, பகவதி, பைரவி என்னும் பெயர் படைத்தவளும்திரிபுரங்களை எரித்தவளும் ஆகிய உமா தேவியின் மகனே! கங்கையின் பிள்ளையே! அருணையில் வீற்றிருப்பவனே வள்ளியும் தேவசேனையும் பக்கத்தில் அமர, அவர்களுக்கு வரம் அளித்தவனே! அரிய பொருளினை எனக்கு அருளுவதும் ஒரு நாளே?

 

விளக்கக் குறிப்புகள்

 எளிது பெறல் என …..... ஒருநாளே ---

உதய மரணம் இல் பொருள் -நினைப்பு மறப்பு அற்ற இடத்தில் வெளிப்படும் செம்பொருள். அச் செம்பொருள் கலையறிவினால் கிடைக்காது. மேலே சொன்ன ஆறு வழிகளால் பெறலாம்.

1.    விழி புனல் வர மொழிகுழறா அன்புருகி முருகனது அருள் பரவுதல்.

2.    விரகு ஒழிதல். [வஞ்சனை ஒழுக்கத்தை அறவே அகற்றறுதல்].

3.    உலகியல் பிணை விடுதல்.{பற்றை விடுதல்]

4.    உரை செயல் உணர்வு கெடல்.[மனவாக்குக்காயம் என்ற மூன்று காரணங்களின் தொழில் நீங்குதல்]

5.    உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறுதல். [ உயிர் உடம்பொடு கூடுதற்கு உரியதான இருவினைகளை போக்குதல்]

6.    எனது எனும் மலம் அறுதல். [எனது என்பது மமகாரம்]

இந்த ஆறு படிகள் மீது ஏறுவோர்க்கு அறிவினில் எளிது பெறலாம் என்று வேதங்கள் பறைபோல முழங்கிக் கூறுகின்றன.  ஆதலால், அப் பொருளினை அடியேனுக்கு விளக்கி அருள்வீர் என்று சுவாமிகள் முறையிடுகின்றனர்.- வாரியார் விளக்கம்

 அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும்

திருமாலினுடைய புதல்வியார்களாகிய அமுத வல்லியும், சிந்தர வ்ல்லியும் முருகனை மணந்து கொள்வதன் பொருட்டு தவம் செய்து வரம் பெற்ரு இபமாகவும், மான் மகளாவும் பிறந்தனர்

ஒப்புக

 வினை அளறு அது போக உதறில் ---

அளறு - சேறு.  வினையாகிய சேற்றை உதறித் தள்ளுதல் வேண்டும்.  

பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா கந்தர் அலங்காரம்

 மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருவு 

  தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்

   தத்தை தழுவியப னிருதோளா             ---        திருப்புகழ், அத்துகிரி

    ஆரமுத மான தந்தி மணவாளா         -- திருப்புகழ், காரணமதாகவந்து

  எனது எனும் மலம் அறில்

   எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாகும் இதய பாவ னானீத        அருள்வாயே  -                                  திருப்புகழ் - அமலவாயு

 


No comments:

Post a Comment