பின் தொடர்வோர்

Sunday 3 June 2018

330.ஆர வாரமாயிருந்து

330
பொது
 
       தான தான தான தந்த தான தான தான தந்த
        தான தான தான தந்த                  தனதான
 
 ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
       ஆழி வேலை போன்மு ழங்கி               யடர்வார்கள்
ஆக மீதி லேசி வந்து ஊசி தானுமே நுழைந்து
       ஆலைமீதி லேக ரும்பு                           எனவேதான்
வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
       வீசு வார்கள் கூகு வென்று                      அழுபோது
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து
        மேலை வீழ்வ ரீது கண்டு                        வருவாயே
 நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த
       நாதர் பாலி லேயி ருந்த                                 மகமாயி
நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து
       நாளு நாளு மேபு கன்ற                             வரைமாது
நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
       நீப மாலை யேபு னைந்த                             குமரேசா
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
       நீத னான தோர்கு ழந்தை                      பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து
ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள்

ஆரவாரமாய் இருந்து - ஆடம்பரமாய் காலம் கழித்து வரு நாளில். ஏம தூதர் - எம தூதர்கள். ஆழி வேலை போல் - வட்ட வடிவமான கடலைப் போல். அடர்வார்கள் - நெருங்குவார்கள்.

ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து
ஆலை மீதிலே கரும்பு எனவே தான்

ஆகம் - என் உடலில். சிவந்து - கோபத்துடன். ஊசி தானுமே நுழைந்து - ஊசியைக் குத்தி நுழைப்பார்கள். ஆலை மீதிலே கரும்பு எனவே தான் - ஆலையில வைத்த கரும்பு என்று சொல்லும்படி .

வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து
வீசுவார்கள் கூகு என்று அழு(ம்)போது

வீரமான - வீரம் பொருந்திய. சூரி கொண்டு - சூரிக் கத்தியைக் கொண்டு. நேரை நேரையே பிளந்து - செவ்வையாக பாதி பாதியாகப் பிளந்து. வீசுவார்கள - எறிவார்கள். கூகு என்று அழும்போது - (இங்ஙனம் நான் மரண வேதனைப் படுகையில் வீட்டில் உள்ளோர்) கூகு என்று அழுகின்ற பொழுது.

வீடு வாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து
மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே

வீடு வாசலான பெண்டிர் - வீடு வாசலில் உள்ள மாதர்களும். ஆசையான மாதர் வந்து - என் மீது அன்பு கொண்டுள்ள மாதர்களும் வந்து. மேலை வீழ்வர் - என் உடல் மீது விழுவார்கள். ஈது கண்டு வருவாயே - இக்கோலத்தைக் கண்டு நீ வந்து அருள் புரிவாயாக.

நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த
நாதர் பாலிலே இருந்த மகமாயி

நாரி - தேவி. வீரி - வீரம் உள்ளவள். சூரி அச்சத்தைத் தருபவள். அம்பை - அம்பிகை. வேத வேதமே புகழ்ந்த- எல்லா வேதங்களும் புகழ்கின்ற. நாதர் பாலிலே இருந்ததலைவரான சிவபெருமானுடைய ஒர் பாகத்திலே உறையும். மகமாயி - பார்வதி தேவி.

நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து
நாளு நாளுமே புகன்ற வரை மாது

நாடி ஓடிவாற அன்பர் - (தன்னை) விரும்பி ஓடி வருகின்ற அன்பர்கள். காண - கண்டு. வேணதே - நிரம்ப. புகழ்ந்து - போற்றி. நாளும் நாளுமே புகன்ற - நாள் தோறும் துதித்த. வரை மாது - மலை மகள்.

நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
நீப மாலையே புனைந்த குமரேசா

நீரின் மீதிலே இருந்த நீலி - கடல் நீரில் பள்ளி கொண்டிருக்கும் நீல நிறமுடைய . சூலி - சூலாயுதத்தை ஏந்திய பார்வதியின். வாழ்வு மைந்த - வாழ்வாய் அமைந்த மகனே. நீப மாலையே - கடப்ப மாலை. புனைந்த குமரேசா - அணிந்துள்ள குமரேசனே.

நீலனாக ஓடி வந்த சூரை வேறு வேறு கண்ட
நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே

நீலனாக - கொடியவனாக. ஓடி வந்த சூரை - ஓடி வந்த சூரபதுமனை. வேறு வேறு கண்ட - துண்டம் துண்டமாகப் பிளந்தெறிந்த. நீதனானது - அறத்தில் பிறழாத. ஓர் ஒப்பற்ற குழந்தை பெருமாளே - குழந்தைப் பெருமாளே.

சுருக்க உரை
ஆடம்பரமான வாழ்வில் காலம் கழித்து, எம தூதுவர்கள் நெருங்கி வந்து கோபத்துடன் என்னைக் ஊசியால் குத்தி, ஆலையில் வைத்த கரும்பைப் போல் கசக்கி, சூரிக் கத்தி கொண்டு என்னைப் பிளந்து எறிவார்கள். நான் அங்ஙனம் மரண வேதனைப் படும் போது, மனைவி, மக்கள் எல்லாரும் என் உடல் மீது விழுந்து அழுவார்கள். இக் கோலத்தைப் பார்த்து நீ வந்து அருள் புரிவாயாக.

வீரமுள்ள தேவியும், வேதங்கள் போற்றும் சிவபெருமான் ஒரு பாகத்தில் உறைபவளும், அடியார்கள் புகழும் மலைமகள் சூலாயுதம் ஏந்தியவள். இத்தகைய பார்வதி பெற்ற மைந்தனே, கொடியவனாக ஓடி வந்த சூரபதுமனைத் துண்டம் துண்டமாகப் பிளந்த அறந் தவறாதவனே, உயிர் விடும்போது என் முன் வருவாயே.
 
விளக்கக் குறிப்புகள்
1. நீலாக ஓடி வந்த சூரை....
நீலன் - கொடியவன்.   நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே  - தாயுமானவர் (பன்மாலை 6).

 2. நீரின் மீதிலே இருந்த நீலிதேவி விஷ்ணு சக்தி. அம்பிகை. வைஷ்ணவியென்னும் பெயரோடு திருமாலே இடமாகக் கொண்டு தொழில் புரிபவளாதலின் ஆதிசேடன்மேல்துயில் பவளாகக் கூறப்படிகிறாள் - அபிராமி அந்தாதி 35.
'பொங்கமளிப் புணரித் துயில்வல்லி' – தக்கயாக பரணி


                     https://thiruppugazhamirutham.shutterfly.com/

No comments:

Post a Comment