பின் தொடர்வோர்

Monday 4 June 2018

331.ஆராதகாதலாகி


331
பொது
 
               தானான தான தான தானன
                 தானான தான தான தானன
                 தானான தான தான தானன         தந்ததான
 
ஆராத காத லாகி மாதர்த
       மாபாத சூட மீதி லேவிழி
       யாலோல னாய்வி கார மாகியி     லஞ்சியாலே
ஆசாப சாசு மூடி மேலிட
      ஆசார வீன னாகி யேமிக
       ஆபாச னாகி யோடி நாளும        ழிந்திடாதே
 ஈராறு தோளு மாறு மாமுக
       மோடாரு நீப வாச மாலையு
       மேறான தோகை நீல வாசியு      மன்பினாலே
 ஏனோரு மோது மாறு தீதற
        நானாசு பாடி யாடி நாடொறு
        மீடேறு மாறு ஞான போதக         மன்புறாதோ
வாராகி நீள்க பாலி மாலினி
      மாமாயி யாயி தேவி யாமளை
      வாசாம கோச ராப ராபரை         யிங்குளாவி
 வாதாடி மோடி காடு காளுமை
      மாஞால லீலி யால போசனி
       மாகாளி சூலி வாலை யோகினி      யம்பவானி
 சூராரி மாபு ராரி கோமளை
       தூளாய பூதி பூசு நாரணி
       சோணாச லாதி லோக நாயகி      தந்தவாழ்வே
 தோளாலும் வாளி னாலு மாறிடு
        தோலாத வான நாடு சூறைகொள்
        சூராரி யேவி சாக னேசுரர்          தம்பிரானே.
 
பதம் பிரித்து பொருள்

ஆராத காதலாகி மாதர் தம்
ஆபாத சூடம் மீதிலே விழியால்
ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே
ஆராத - அடங்காத. காதலாகி - மோகம் கொன்டு. மாதர் தம் - பெண்களுடைய. ஆபாத சூடம் மீதிலே - உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள (அங்கங்களின் அழகில்). விழி ஆலோலனாய் - கண்ணால் கலக்குதல் கொண்டு காமுனாகி. விகாரமாகி - மனக்கலக்கம் அடைந்தவனாக. இலஞ்சியிலே - குண விசேடத்தால்

ஆசா பசாசு மூடி மேலிட
ஆசார ஈனனாகியே மிக
ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே
ஆசா பசாசு - ஆசையாகிய பேய்த் தனம். மூடி மேலிட - என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள. ஆசார ஈனனாகி - ஆசாரக் குறைவு பட்டவனாகி. மிக ஆபாசன் ஆகி - மிகவும் அசுத்தனாகி. ஓடி - அங்கும் இங்கும் ஓடி. நாளும் ஒழிந்திடாதே - நாளுக்கு நாள் கெட்டு அழியாதவாறு.


ஈராறு தோளும் ஆறு மா முகமோடு
ஆரும் நீப வாச மாலையும்
ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே
ஈராறு தோளும் - உனது பன்னிரண்டு தோள்களையும். ஆறு மா முகமோடு - ஆறு திருமுகங்களுடன். ஆரும் - நிறைந்துள்ள. வாச நீப மாலையும் - நறு மணம் கொண்ட கடப்ப மாலையையும். ஏறான-  ஆணான. தோகை நீல வாசியும் - மயிலாகிய நீலக் குதிரையையும். அன்பினாலே - என் மீது அன்பு கொண்டு.


ஏனோரும் ஓதுமாறு தீது அற
நான் ஆசு பாடி ஆடி நாள் தொறும்
ஈடேறுமாறு ஞான போதகம் அன்பு உறாதோ
ஏனோரும் - என்னையன்றி பிற மக்களும். ஓதுமாறு - போற்றிப் புகழுமாறு. தீது அற - கேடுகள் ஒழிய. நான் ஆசு பாடி ஆடி - நான் ஆசு கவிகளைப் பாடியும் ஆடியும். நாள் தொறும் - ஒவ்வொரு நாளும். ஈடேறுமாறு - முன்னுக்கு வருவதற்கு. ஞான போதகம் - எனக்கு ஞான உபதேசம் செய்ய. அன்பு உறாதோ - அன்பு கொள்ள மாட்டாயோ

வாராகி நீள் கபாலி மாலினி
மா மாயி ஆயி தேவி யாமளை
வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி
வாராகி - திருமாலின் சக்தியில் ஒன்றானவள். நீள் கபாலி – பெரிய கபாலத்தை ஏந்தியவள். மாலினி - மாலையை அணிந்தவள். மா மாயி - மகாமாயி. ஆயி - அனைத்துக்கும் தாய். தேவி - தேவி. யாமளை - பச்சை (சியாமள) நிறத்தவள். வாசா மகோசரா - வாக்குக்கு எட்டாதவள். பராபரை- பரிபாலிப்பவள். உள் இங்கு ஆயி- (உள்ளத்திலே) தங்குகின்ற தாய்.


வாதாடி மோடி காடுகாள் உமை
மா ஞால லீலி ஆல போசனி
மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி
வாதாடி - (இறைவனுடன் காளியாய்) வாதாடியவள். மோடி - துர்க்கை. காடுகாள் - வன தேவதை. உமை - உமா தேவி. மா ஞால - பெரிய பூமியில். லீலி - லீலைகள் புரிபவள். ஆல போசனி - விடத்தை உண்டவள். மா காளி - மகா காளி. சூலி - சூலாயுதம் ஏந்தியவள். வாலை - பாலாம்பிகை. யோகினி - யோகினி. அம் பவானி - அழகிய பவானி.


சூராரி மா புராரி கோமளை
தூளாய பூதி பூசு(ம்) நாரணி
சோணாசல ஆதி லோக நாயகி தந்த வாழ்வே

சூராரி - மகிடா சூரனுக்கு பகையானவள். புராரி - பெரிய திரி புரத்தை எரித்தவள். கோமளை - அழகி. தூளாய பூதி பூசு - திரு நீறாகிய விபூதியைப் புசும். நாரணி - துர்க்கை. சோணாசலம்- திருவண்ணா மலையில் ஆதி லோக நாயகி - முதல் தேவதையாக இருப்பவள். தந்த வாழ்வே - பெற்ற செல்வமே.

தோளாலும் வாளினாலும் மாறிடு
தோலாத வான நாடு சூறை கொள்
சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே

தோளாலும் வாளினாலும் - தோள் கொண்டும், வாள் கொண்டும். மாறிடு - பகைமை பூண்ட வனும். தோலாத - தோல்வியே இல்லாத வான நாடு சூறை கொள் - பொன்னுலகைச் சூறை ஆடியவனும் ஆகிய. சூராரி - சூரனை அழித்த வனே. விசாகனே - முருகக் கடவுளே. சுரர் தம்பிரானே - தேவர்களுக்குத் தம்பிரானே. 


தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு


சுருக்க உரை
அடங்காத மோகம் கொண்டு,பெண்களுடைய அங்க அழகில் மயங்கி, கலக்கம் கொண்ட காமுகனாகி, ஆசை என்னும் பேயால் ஆட்கொள்ளப்பட்டு, ஒழுக்கம் கெட்டு, அசுத்தனாகி ஓடித் திரிந்து கெட்டு நான் அழியாதவாறு, உணது பன்னிரு தோள்கள், ஆறு முகங்களுடன் கடப்ப மாலையுடன் மயில் மேல் ஏறி வந்து எனக்கு ஞான உபதேசம் அருள மாட்டாயோ.

மாலினி, மகமாயி, ஆயி, சூலி என்று பலவாறு போற்றப்படும் உமா தேவி பெற்ற குமரனே. பகைவனான சூரனை அழித்தவனே. தேவர்களுக்குத் தம்பிரானே. எனக்கு ஞான உபதேசம் அருள வேண்டும்.


விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் தேவி துதியாகும்.
1ஏனோரும் ஓதுமாறு தீதற....

தமது பாடலை அன்பர்கள் கேட்டும் பாடியும் மகிழவேண்டும், அவர்களும்
கரையேற வேண்டும்
     
காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி
ஆசக்குக் காளமுகில் ஆவனே -- தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங் கௌவையெனக் கூறு   ---      தனிப்பாடல்.

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு மருள்வாயே --- திருப்புகழ்297, பரவு நெடுங்கதி

2வராகி நீள்கபாலி.....
வராகி - திருமால் வராகத் திரு முகத்துடன் தரிசனம் தந்ததால்  வராகினி என்னும் பெயர்.
நாரணி - நாராயணன் தங்கை. திருமாலிடத்திருந்து காத்தலாகிய  தொழிலை நடத்துவதலின் நாராயணி.

3 திருமால் திரு நீறு புசுதல் ---  கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும் பெரிய கோலத் தடங் கண்ணண்.திருவாய் மொழி

No comments:

Post a Comment