திருவருணை
           தனன தான தானான தனன தான தானான 
            தனன தான தானான             
    தனதான
புலைய னான மாவீணன் வினையி லேகு மாபாதன்
   பொறையி லாத கோபீகன்                   முழுமூடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
   பொறிக  ளோடி போய்வீழு                          மதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
   நெறியி லாத வேமாளி                        குலபாதன்
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
   நினையு மாறு நீமேவி                      யருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
   சிதையு மாறு போறாடி                       யொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
   திறமி யான மாமாயன்                       மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
   அமர தாடி யேதோகை                          மயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
   அருணை மீதி லேமேவு                      பெருமாளே
 
பதம் பிரித்து உரை 
புலையன்
ஆன மா வீணன் வினையில் ஏகு மா பாதன்
பொறை இலாத
கோபீகன் முழு மூடன்
புலையனான - கீழ் மகனாய் 
மா வீணன் - மிக இழிந்தவன் 
வினையில் ஏகு - தீ வினைச் செயல்களிலேயே செல்லும் 
மா பாதன் - பெரிய பாதகன் [துரோகம் செய்யும் அல்லது நஷ்டம்
விளைவிக்கக்கூடிய நபர்]
பொறை இலாத -பொறுமை என்பதே இல்லாத 
கோபீகன் - கோப குணத்தினன் 
முழு மூடன் - முழு முட்டாள்
 
புகழ்
இலாத தாம்பீகன் அறிவிலாத காபோதி
பொதிகள்
ஓடி போய் வீழும் அதி சூதன்
புகழி இலாத - புகழ் என்பதே இல்லாத 
தாமீகன் – டம்பன் [வெளிப்பகட்டுகாரன்]
அறிவிலாத காபோதி – அறிவு என்பதே அற்ற கண் இல்லாதவன் [நல்லது எது கெட்டது என்று பிரித்துப் பார்க்கத் தெரியாமல் இருட்டிலே இடறிப் பள்ளத்தில் வீழ்ந்த குருடன்]
பொறிகள் ஓடி போய் விழு - ஐம்பொறிகள் இழிக்கும் வழியே போய் விழுகின்ற 
அதி சூதன் - பெரிய தந்திரக்காரன்
நிலை இலாத
கோமாளி கொடை இலாத ஊதாரி
நெறி இலாத
ஏமாளி குல பாதன்
நிலை இலாத - ஒரு நிலையில் நிற்காத 
கோமாளி- கோணங்கி 
கொடை இலாத - ஈகை இல்லாத 
ஊதாரி - வீண்செலவுக்காரன் 
நெறி இலாத - நன்னெறி என்பதே இல்லத 
ஏமாளி – பேதை [அறிவிலி] 
குல பாதகன் - (தான் பிறந்த) குலத்தைப் பாவத்துக்கு ஆளாக்குபவன்
நினது
தாளை நாள் தோறும் மனதில் ஆசை வீடாமல்
நினையுமாறு
நீ மேவி அருள்வாயே
(இத்தகைய இழி குணம் படைத்த நான்)
நினது தாளை - உனது திருவடியை 
நாள் தோறும் – ஒவ்வொரு நாளும் மனதில் 
ஆசை வீடாமல் - மனதில் பூரண ஆசையுடன்
நினையுமாறு - நினைக்கும் வண்ணம் 
நீ மேவி - நீ என் உள்ளத்திலிருந்து 
அருள்வாயே - அருள் புரிவாயாக
சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணன் ஆர் தோள்கள்
சிதையுமாறு
போராடி ஒரு சீதை
சிலையில் - வில்லினின்று 
வாளி தான் ஏவி – அம்பைச் செலுத்தி 
எதிரி ராவணன் - பகைவனாகிய ராவணனுடைய  
ஆர் தோள்கள் - நிறைந்த தோள்கள் 
சிதையுமாறு - அறுபடும்படி  
போராடி - சண்டை செய்த 
ஒரு – ஒப்பற்ற 
சீதை- சீதையை
சிறை
இலாமலே கூடி புவனி மீதிலே வீறு
திறமியான
மா மாயன் மருகோனே
சிறைய இலாமலே கூடி - சிறை இல்லாதவாறு செய்து மீட்டு 
புவனி மீதிலே - இவ்வுலகில் வீறு 
திறமியான – மேம்பட்டு விளங்கிய 
மாமாயன் மருகோனே - மாயனாகிய திருமாலின் மருகனே
அலைய மேரு
மா  சூரர் பொடியதாகவே வேல் ஏவி
அமர் அது
ஆடியே தோகை மயில் ஏறி
அலைய மேரு - மேரு மலை 
அசைய மா - பெரிய 
சூரர் - சூரன் முதலியோர் 
பொடியதாக - பொடியாகும்படி 
வேல் ஏவி - வேலாயுதத்தைச் செலுத்தி 
அமர் அது ஆடியே - போர் புரிந்து 
தோகை மயில் ஏறி - கலாப மயிலின் மேல் ஏறி
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும்
அருணை
மீதிலே மேவு பெருமாளே
 
அதிக தேவரே - நிரம்பத் தேவர்கள் 
சூழ - சூழ்ந்து வர 
உலக மீதிலே கூறும் - உலகத்தில் புகழ்ந்து ஓதப்படும் 
அருணை மீதில் மேவு பெருமாளே
- திரு அருணையில் வீற்றிருக்கும் பெருமாளே
 
சுருக்க உரை
 
கீழோனாகிய நான் தீ வினைகளில்
ஈடுபடும் பாதகன், புகழே இல்லாதவன், ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலேயே
செல்லும் தந்திரக்காரன், அறிவு இல்லாதாவன், மனம் ஒருமைப் படாத கோணங்கி,
ஈகை என்பதே இல்லாதாவன், குல பாதகன் இத்தகைய இழியோன்
உனது திருவடிகளைத் தினந்தோறும்  நினைக்கும் வண்ணம் நீ மனம் உவந்து அருள்
புரிவாயாக.  
அம்பைச் செலுத்தி இராவணனைக்
கொன்று, ஒப்பற்ற சீதையை மீட்டு, மேம்பட்டு விளங்கிய
திருமாலின் மருகனே! மேரு மலை அசைய, அசுரர்கள் பொடியாக,  வேலாயுதத்தைச் செலுத்தி, மயில் மேல் ஏறித் தேவர்கள் சூழ, உலகம் புகழும் அருணையில்
வீற்றிருக்கும் பெருமாளே! இழியோனாகிய நான் உன்னை என்றும்
நினைக்குமாறு அருள் புரிக
அன்று அருணையில் என்னை ஆட்கொள்ள வந்த வேலவா! இன்று எளியனை கருணையுடன்
பார்ப்பாய். மற்ற ஆசைகள் எல்லாம் அழிந்து போக, உன் திருவடிகளையே நாளும் பொழுதும் நினைத்திருக்கும்படியான
எனது ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றுவாயா ஆறுமுகா. 
விளக்கக் குறிப்புகள்
இப்பாடலில் அருணகிரி நாதர் எத்தகைய இழிந்தோனும் இறைவனை மனம்
 ஒடுங்கித் தியானித்தால் அருள் பெற முடியும்
என்ற பேருண்மையை எடுத்துக்  காட்டுகின்றார்
பாடலை கேட்க            Rev 9-8-2022

No comments:
Post a Comment