பின் தொடர்வோர்

Sunday 12 September 2021

472. சிரத்தான

 


திருக்காளத்தி

 

          தனத் தானத்தத் தனதானா

 

சிரத் தானத்திற்                     பணியாதே

  செகத் தோர்பற்றைக்               குறியாதே

வருத்தா மற்றொப்                   பிலதான

  மலர்த் தாள்வைத்தெத்        தனையாள்வாய்

நிருத் தாகர்த்தத்                    துவநேசா

  நினைத் தார்சித்தத்             துறைவோனே

திருத் தாள்முத்தர்க்              கருள்வோனே

  திருக் காளத்திப்                 பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 சிரத்தானத்தில் பணியாதே

செகத்தோர் பற்றை குறியாதே

சிரத்தானத்தில் - தலையைக் கொண்டு பணியாதே - (உன்னை அன்றி ஒருவரையும்) பணியாமல் செகத்தோர் - உலகத்தோர் பற்றைக் குறியாதே - பாசங்களில் நோக்கம் செலுத்தாமலும்

 

வருத்தா மற்று ஒப்பிலதான

மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய்

வருத்தா – வருத்தி [வரவழைத்து] (ஏன்று கொண்டு) மற்று ஒப்பிலதான – வேறு எதுவும் நிகரில்லாத மலர்த் தாள் வைத்து - மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து எத்தனை ஆள்வாய் - வஞ்சகனாகிய என்னை ஆட்கொள்ளுவாயாக

 

நிருத்தா கர்த்தத்துவ நேசா

நினைத்தார் சித்தத்து உறைவோனே

நிருத்தா – நடனம் புரிவதில் வல்லவனே கர்த்த்துவ - கடவுள் தன்மை வகிக்கும் நேசா - நேசனே நினைத்தார் - (உன்னை) நினைப்பவர்களுடைய சித்தத்து உறைவோனே - மனதில் உறைபவனே

 

திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே

திரு காளத்தி பெருமாளே

 

 திருத்தாள் - உனது திருவடியை முத்தர்க்கு - முற்றும் துறந்தவர்களுக்கு (சீவன் முத்தர்களுக்கு) அருள்வோனே- அருள்பவனே திருக் காளத்திப் பெருமாளே - திருக் காளத்தியில் வீற்றிருக்கும் பெருமாளே

 

சுருக்க உரை

 

தலையக் கொண்டு உன்னையன்றி வேறு யாரையும் பணியாமலும், உலகில் எதன் மேலும் பற்று வைக்காமலும், வஞ்சகனாகிய என்னை ஏன்று

கொண்டு, வேறு எதுவும் ஒப்பில்லாத உன் திருவடிகளில் சேர்த்து  ஆட்கொள்வாயாக. கூத்தனே! கடவுள் தானம் வகிக்கும் நண்பனே! உன்னை நினைப்போர் உள்ளத்தில் உறைபவனே! முற்றும் துறந்த சீவன் முத்தர்களுக்கு அருள்பவனே! திருக் காளத்தியில் வீற்றிருக்கும் பெருமாளே! என்னை ஆட்கொள்வாயாக

 

ஒப்புக

  

நினைத்தார் சித்தத்து உறைவோனே

 நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும்

 ஊர் உளான்                             -சம்பந்தர் தேவாரம்

 

விளக்கக் குறிப்புகள்

 முத்தர்க்கு அருள்வோனே

  முத்தர் நால் வகையினர் பிரம வித்துக்கள், பிரம வரர், பிரம வாரியர், பிரம வரிஷ்டர்

  ஜீவன் முத்தர்கள் - இம்மையிலேயே முத்தர் ஆனோர்

  பிரம வித்துக்கள் - பிரம ஞானம் அடைந்தும் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின் படி ஒழுகும் ஞானிகள்

  பிரம வரர் - சமாதியில் நின்றும் தாமே உணரும் ஞானிகள்

  பிரம வாரியர் - சமாதியில் பிறர் கலைக்க எழும் ஞானிகள்

பிரம வரிஷ்டர் - தாமேயாகவும், பிறர் கலைத்தாலும் சமாதியிலிருந்து எழாத ஞானிகள்

                   -          - - வசு செங்கல்வராயபிள்ளை

 

ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞான மயமாக ஒலியுடன்கூடி விளங்கும் ஆகாயம், தகராலயம். அங்கு அநவரதமும் தாண்டவம் புரிவதால் குகனாகிய குமரனை நிருத்தா என அழைத்தார்.

No comments:

Post a Comment