பின் தொடர்வோர்

Wednesday 8 September 2021

469.விதியதாகவெ

 


திருவருணை

 

            தனன தானன தனன தானனா

                  தனன தானனந்             தனதான

 

விதிய தாகவெ பருவ மாதரார்

   விரகி லேமனந்                தடுமாறி

விவர மானதொ ரறிவு மாறியே

   வினையி லேஅலைந்          திடுமூடன்

முதிய மாதமி ழிசைய தாகவே

   மொழிசெய் தேநினைந்          திடுமாறு

முறைமை யாகநி னடிகள் மேவவே

   முனிவு தீரவந்              தருள்வாயே

சதிய தாகிய அசுரர் மாமுடீ

   தரணி மீதுகுஞ்                 சமராடிச்

சகல லோகமும் வலம தாகியே

   தழைய வேவருங்              குமாரேசா

அதிக வானவர் கவரி வீசவே

   அரிய கோபுரந்               தனில்மேவி

அருணை மீதிலெ மயிலி லேறிய

   அழக தாய்வரும்             பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

விதி அதாகவே பருவ மாதரார்

விரகிலே மனம் தடுமாறி

விதியதாகவே - விதி கட்டுவிப்பதால் பருவ மாதரார் – இளமை வாய்ந்த பெண்களின் விரகிலே - தந்திரச் செயல்களில் மனம் தடுமாறி - மனம் தடுமாற்றம் அடைந்து

விவரமானது ஓர் அறிவு மாறியே

வினையிலே அலைந்திடு மூடன்

விவரமானது - தெளிவுள்ளதான ஒரு அறிவும் - ஒரு அறிவும் மாறியே - கெட்டுப் போய் வினையிலே - வினை வசப்பட்டு அலைந்திடும் மூடன் - அலைச்சலுறும் முட்டாள்

முதிய மா தமிழ் இசை அதாகவே

மொழி செய்தே நினைந்திடுமாறு

முதிய - பழைய மா - சிறந்த தமிழ் இசை அதாகவே – தமிழ்ப் பாக்களை இசையுடனே மொழி செய்தே -உரைத்துப் பாட நினைந்திடுமாறு – நினைந்திடும்படி

 

முறைமையாக நின் அடிகள் மேவவே

முனிவு தீர வந்து அருள்வாயே

முறைமையாக - முறைமைப்படி நின் அடிகள் – உனது திருவடிகளை மேவவே - அடையுமாறு முனிவு தீர - கோபம்

தீர்ந்து வந்து அருள்வாயே - வந்து அருள் புரிவாயாக

சதி அதாகிய அசுரர் மா முடி

தரணி மீது உகும் சமர் ஆடி

சதியதாகிய - வஞ்சனை கூடிய அசுரர் - அசுரர்களுடைய மா - பெரிய முடி - முடிகள் தரணி மீது உகும் - பூமியில்

சிந்தும்படி சமர் ஆடி - போர் செய்து

சகல லோகமும் வலம் அதாகியே

தழையவே வரும் குமரேசா

சகல லோகமும் - எல்லா உலகங்களும் வலமதாகியே - (மயிலின் மீது) வலமாக தழையவே வரும் - (அவ்வுலகங்கள்) குளிரும்படி வரும் குமரேசா - குமரேசனே

அதிக வானவர் கவரி வீசவே

அரிய கோபுரம் தனில் மேவி

அதிக - நிரம்ப வானவர் - தேவர்கள் கவரி வீசவே - கவரி வீச அரிய - அருமை வாய்ந்த கோபுரம் தனில் மேவி - கோபுரத்தில் வீற்றிருந்து

அருணை மீதிலே மயிலில் ஏறிய

அழகு அதாய் வரும் பெருமாளே

அருணை மீதிலே -திருவண்ணாமலையில் மயிலில் ஏறிய - மயில் மீது ஏறி அழகதாய் வரும் பெருமாளே - அழகுடன் வரும் பெருமாளே

  

சுருக்க உரை

 விதியின் பயனாய், இளமையான பெண்களின் தந்திரச் செயல்களில் மனம் தடுமாறி, தெளிவான அறிவு கெட்டுப் போய், வினை வசப்பட்டு அலையும் மூடனாகிய நான் பழைய, சிறந்த தமிழ்ப் பாக்களை இசையுடன் பாடி உன்னை நினைந்திடும்படியும், உன் திருவடிகளை அடையும்படியும், என் மீதுள்ள கோபம் தீர்ந்து வந்து அருள் புரிவாயாக

 வஞ்சனை மிகுந்த அசுரர்களின் பெரிய முடிகள் தரையில் சிந்தும்படி போர் செய்து,  எல்லா உலகங்களும் நலமுறும்படி மயிலின் மேல் வலமாக வந்த குமரேசா! தேவர்கள் கவரி வீச, அருமையான கோபுரத்தில் வீற்றிருந்து, அ ருணையில் அழகுடன் மயில் மேல் வரும் பெருமாளே! உன் கோபம் தீர்ந்து வந்து என்னை அருள் புரிவாயாக!

 

ஒப்புக

 சகல லோகங்களும் வலமதாகியே.....

 செவ்வேள் மயிலிடை வைகி ஊர்ந்தான் மாமுகந் திசைகள் முற்றும் -  கந்த புராணம்

பாடலை கேட்க :        https://youtu.be/VZnLHYbOoGU?list=PLFwcC0dtfDTiQSDIfbF9EJYEqTaA4iZ_6


 

No comments:

Post a Comment