பின் தொடர்வோர்

Monday, 17 May 2021

443.குருதி புலால்

 


443

திருவானைக்கா

            

தனதன தானந்த தான தந்தன

             தனதன தானந்த தான தந்தன

               தனதன தானந்த தான தந்தன       தனதான

 

குருதிபு லாலென்பு தோன ரம்புகள்

   கிருமிகள் மாலம்பி சீதமண்டிய

   குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பனபொதிகாயக்

குடிலிடை யோரைந்து வேட ரைம்புல

   அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்

   கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய         அதனாலே

சுருதிபு ராணங்க ளாக மம்பகர்

   சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை

   துதியொடு நாடுந்தி யான மொன்றையு   முயலாதே

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய

   திமிரரொ டேபந்த மாய் வருந்திய

   துரிசற ஆநந்த வீடு கண்டிட                  அருள்வாயே

ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்

   நிருதரு மாவுங்க லோக சிந்துவும்

   உடைபட மோதுங்கு மார பங்கய                  கரவீரா

உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்

   அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்

   உளமதில் நாளுங்கு லாவி யின்புற வுறைவோனே

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்

   அரிகரி கோவிந்த கேச வென்றிரு

   கழல்தொழு சீரங்க ராச னன்புறு     மருகோனே

கமலனு மாகண்ட லாதி யண்டரு

  மெமது பிரானென்று தாள்வ ணங்கிய

 கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள்    பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

குருதி புலால் என்பு தோல் நரம்புகள்

கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய

குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொத காய

குருதி - இரத்தம் புலால் - ஊன் என்பு - எலும்பு தோல் - தோல் நரம்பு கள் - நரம்புகள் கிருமிகள் - புழுக்கள் மால் -

காற்று அம் - நீர் பிசீதம் - இறைச்சி மண்டிய -(இவைகள்) நிரம்பிய குடர் - குடல் நிணம் – கொழுப்பு  ரோமங்கள் - மயிர் மூளை - மூளை என்பன - என்று

சொல்லப்பட்ட இவை பொதி - நிறைந்த காய(ம்) – உடல் என்னும்

குடில் இடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல(ன்)

அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர்

கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே

குடில் இடை - குடிசையாகிய இந்த உடலில் ஓர் ஐந்து வேடர் - நிகரற்ற ஐம் பொறிகள் ஐம் புல அடவியிலோடும் -

ஐம்புலன்கள் என்னும் காட்டினிடையே துர் ஆசை – கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள் - மோசம் செய்பவர்கள்

கொடியவர் - பொல்லாதவர்கள் மா பஞ்ச பாதகம் செய - பெரிய ஐந்து (கொலை, பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை ஆகிய) பாபச் செயல்களைச் செய்ய அதனாலே – அதன் விளைவாக

சுருதி புராணங்கள் ஆகமம் பகர்

சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை

துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே

சுருதி - வேதங்கள் புராணங்கள் -புராணங்கள் ஆகமம் -ஆகமங்கள் பகர் - சொல்லப்படுகின்ற சரியை க்ரியை -

சரியை, கிரியை அண்டர் பூசை - தேவர் பூஜை வந்தனை -வழிபாடு துதியொடு - தோத்திரம் இவை கொண்டு நாடும்

தியானம் - நாடிச் செய்யும் தியானம் ஒன்றையும் முயலாதே இவை ஒன்றை யேனும் கைக்கொள்ளமல்

சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய

திமிரரொடே பந்தமாய் வருந்திய

துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே

சுமடம் அதுவாய் - அறிவிலியாய் வம்பு – பயனில்லாததும் மால் கொளு தீய - ஆசைகளை எழுப்புவதும் ஆகிய கொடிய திமிரரொடு - ஆணவ இருள் கொண்டவர்களுடன் பந்தமாய் -

கூட்டுறவாய் வருந்திய - வருத்தம் அடைந்த துரிசு அற - குற்றம் நீங்க ஆநந்த வீடு - பேரின்ப வீட்டை கண்டிட

அருள்வாயே - யான் காணும்படியாக அருள் புரிவாயாக

ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும்

நிருதரும் மாவும் க(ல்)லோல சிந்துவும்

உடைபட மோதும் குமார பங்கய கர வீரா

ஒரு தனி வேல் கொண்டு - ஒப்பற்ற ஒரு வேலாயுதத்தால் நீள் - பெரிய க்ரவுஞ்சமும் - கிரௌஞ்ச மலையும் நிரதரும் - அசுரர்களும் மாவும் - மாமர வடிவாக நின்ற சூரனும் கலோல(ம்) - அலை வீசும் சிந்துவும் - கடலும் உடைபட - உடைபட்டு அழிய மோதும் குமார - மோதிய குமரனே பங்கய வீரா - தாமரை மலர் போன்ற கைகளை உடைய வீரனே

உயர் தவர் மா உம்பரான அண்டர்கள்

அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள்

உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே

உயர் தவர் - மேலான தவசிகள் மா - சிறந்த உம்பர் ஆன அண்டர்கள் - மேல் உலகில் உள்ள தேவர்கள் அடி தொழுதே -

(உனது) திருவடியைத் தொழுது மன் - நன்றாக பராவு தொண்டர்கள் - போற்றும் அடியார்கள் உளம் அதில் - மனதில்

நாளும் குலாவி - நாள் தோறும் விளையாடி இன்புற - மகிழ்ச்சியுடன் உறைவோனே - வீற்றிருப்பவனே

கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர்

அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு

கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே

கருதிய - ஆய்ந்து அறிந்த ஆறு அங்க - ஆறு அங்கங்கள் வேள்வி - யாகங்கள் (இவைகளில் வல்ல) அந்தணர்கள் அரிகரி கோவிந்த கேசவ என்று - கோவிந்தா, கேசவா என்று கூறி இருகழல் தொழ - தனது இரண்டு திருவடிகளிலும் தொழுகின்ற சீரங்க ராசன் - ஸ்ரீரங்க ராஜனாகிய திருமால் அன்புறு மருகோனே -

கமலனும் ஆகண்டல் ஆதி அண்டரும்

எமது பிரான் என்று தாள் வணங்கிய

கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே

அன்பு கொள்ளும் மருகனே கமலனும் - தாமரையில் உறையும் பிரமனும் ஆகண்டல் ஆதி - இந்திரன் முதலிய அண்டரும் - தேவர்களும் எமது பிரான்

என்று - எங்கள் தலைவனே என்று தாள் வணங்கிய - திருவடியில் வணங்கப் பெற்ற கரிவனம் வாழ் – திருவானைக் காவில் வீற்றிருக்கின்ற சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே - ஜம்பு நாதர் ஈன்றருளிய பெருமாளே

 

சுருக்க உரை

இரத்தம், ஊன் முதலியவை நிறைந்த குடிசையாகிய இந்த உடலில் ஐம் பொறிகள், ஐம்புலன்கள் என்னும் காட்டில், கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள் ஐந்து பெரிய பாவச் செயல்களைச் செய்ய, அதனால் ஞான நூல்களையும் தியானத்தையும் மற்று நன்னெறி எதையும் கைக்கொள்ளமல், அறிவிலியாய், ஆணவ இருள் கொன்டவருடன் உறவு கொண்டு, வருத்தம் அடைந்த நான் பேரின்ப வீட்டைக் காணும்படியாக அருள் புரிவாயாக.

ஒப்பற்ற வேலாயுதத்தால் கிரௌஞ்ச மலையையும், சூரனையும், கடலையும் அழியும்படி மோதிய வீரனே! தவசிகளும், தேவர்களும் உன் திருவடியைத் தொழுது, உன்னை நன்றாகப் போற்றும் அடியார்கள் உள்ளத்தில் நாள் தோறும் இன்பமுடன் வீற்றிருப்பவனே!

யாகங்களில் வல்ல அந்தணர்கள் தனது திருவடிகளைத் தொழும் ஸ்ரீரங்கத்தில் வாழும் திருமாலின் மருகனே! திருவானைக்காவில் உறையும் ஜம்பு நாதர் ஈன்றருளிய பெருமாளே! உன் பேரின்ப வீட்டை நான் கண்டிட அருள்வாயே.

 

ஒப்புக

ஓரைந்து வேட ரைம்புல

 

ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்

                                                      -சிவஞான போதம் (எட்டாஞ் சூத்திரம்)

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்

சேரவொட் டாரைவர் செய்வதென் யான்           கந்தர் அலங்காரம்

 

 சரியை க்ரியா வண்டர் பூசை

சரியையுடன்க்ரியை போற்றிய

பரமப தம்பெறு வார்க்கருள்-         திருப்புகழ், அரிவையர்நெஞ்சுரு

 

 விளக்கக் குறிப்புகள்

 ஆறங்க வேள்வி அந்தணர் 

ஆறங்கம் - மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபிசிதம், நிருத்தம், சோதிடம்  சந்தோபிசிதம் - வேதத்தின் சந்தங்களை உணர்த்தும் நூல்   

சரியை கிரியை 


ஆகமத்தில் சொல்லப்படும் பாதங்கள் சரியை -புற வழிபாடு: 

கிரியை- அகப்புற வழிபாடு:

யோகம்- அக வழிபாடு:

ஞானம்- அறிவால் வழிபாடு.

 

சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி, பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என்பவை சொல்லப்படுகின்றன

 

சைவ நாற்பாதங்கள் : சரியை

 

சரியை - தாச மார்க்கம்: `எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதும், ஒழுக்கத்தைப்  பின்பற்றி நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படி’ என்கிறார் திருமூலர். `எல்லாமே கடவுள் என்று உணர்ந்து கருணையோடு வாழ்வதே இறைவனை அடையும் சரியை வழி’ என்கிறார் வள்ளலார். திருக்கோயில்களில் செய்யும் தொண்டு, சிவனடியார்களை உபசரித்தல், ஏழைகளுக்கு உதவுதல் எல்லாமே சரியை மார்க்கம்தான்.

 

சரியையில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன.

சரியையில் சரியை - திருக்கோயில் தொண்டால் இறைவனை அடைவது.

சரியையில் கிரியை - எல்லோருக்கும் எப்போதும் தொண்டு செய்து வாழ்தல்.

சரியையில் யோகம் - ஈசனை வணங்கி தியானிக்கும்போது உண்டாகும் ஆன்மபலத்தால் பிற உயிர்களை அனுகிரகித்தல்.

சரியையில் ஞானம் - ஆழ்ந்த இறைபக்தியால் உண்டாகும் ஞானநிலையில் இறைவனைத் தரிசித்தல்.

 

 

சரியை என்ற வழியில் ஈசனை அடைந்த மகாஞானி திருநாவுக்கரச பெருமான். இவரே சரியை வழி பக்திக்கு மிகச் சரியான உதாரண புருஷர்.

 

சைவ நாற்பாதங்கள் : கிரியை

 

கிரியை - சற்புத்திர மார்க்கம்: மிகச் சரியான வழிமுறைகளுடன் பூஜைகள் செய்து இறைவனை அடையும் முறையே கிரியை. குருமார்களின் வழியே தீட்சை பெற்று ஈசனுக்கான சகல பூஜைகளையும் செய்வித்தல், மனதாலும் உடலாலும் எப்போதும் ஈசனை பூஜித்துக்கொண்டே இருத்தலும் இங்கு முக்கியமானது.

 

நான்கு உட்பிரிவுகள்

கிரியையில் சரியை - பூஜைப் பொருள்களை அளித்தல்.

கிரியையில் கிரியை - நியம, நிஷ்டையுடன் இருவேளை பூஜித்தல்.

கிரியையில் யோகம் - மனதில் எப்போதும் இறைவனைப் பூஜித்தல்.

கிரியையில் ஞானம் - முறையான பூஜைகளால் பெறப்படும் ஞானத்தால் மற்றவர்களுக்கு உபதேசித்தல்.

 

ஞானசம்பந்த பெருமான் கிரியை வழியில் இறைவனை பூஜித்த மகாஞானி எனப் போற்றப்படுகிறார்.

 

சைவ நாற்பாதங்கள் : யோகம்

 

யோகம் - சக மார்க்கம்: ஆழ்ந்த தவத்தால் சிவனோடு கலந்து அவரோடு தோழமைகொண்டு மேற்கொள்ளும் தவ வாழ்வே யோக மார்க்கம். நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், தவம், சமாதி ஆகிய எட்டு நிலைகளில் படிப்படியாகத் தேர்ச்சி பெற்று ஈசனை அடையும் முறையே யோகம்.

 

நான்கு உட்பிரிவுகள்

 

யோகத்தில் சரியை - தினசரி வாழ்வுக்கான உடல் மற்றும் மனப் பயிற்சிகள்.

யோகத்தில் கிரியை - இறைவனை வணங்கும் எளிய பூஜைகள்.

யோகத்தில் யோகம் - ஆழ்ந்த தியானம்.

யோகத்தில் ஞானம் - ஈசனோடு கலந்துவிடும் சமாதி நிலை.

 

தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி பெருமான் ஈசனோடு தவத்தால் கலந்து வாழ்ந்தார். அவரே யோக மார்க்கத்தில் சிறப்பானவராகக் கூறப்படுகிறார்.

 

சைவ நாற்பாதங்கள் : ஞானம்​​​​​​​

 

ஞானம் - சன்மார்க்கம்: மேற்கூறிய எல்லா வழிகளிலும் ஈசனை வணங்கிய ஒருவர் இறுதியாக, எங்கும் நிறைந்த பரப்பிரம்மமே ஈசன் என்பதைத் தெளியும் நிலையே ஞான மார்க்கம். `ஈசனே குருவாக வந்து உபதேசிக்கும் நிலையிலேயே ஞான மார்க்கம் கூடும்’ என்கிறார்கள் பெரியோர்கள். சிந்தித்தல், கேட்டல், புரிந்துகொள்ளுதல், நிஷ்டையில் கலத்தல் என்ற நான்கு வழிகளில் ஞானம் கூடும். தாயுமான ஸ்வாமிகள் இந்த மார்க்கத்தைக் `கனி' என்றே சிறப்பித்துப் பாடினார்.

 

நான்கு உட்பிரிவுகள்

 

ஞானத்தில் சரியை - ஞானத்தை குருவிடம் கேட்டல்.

ஞானத்தில் கிரியை - ஞானமே வடிவான குருவை தரிசித்து அவரின் போதனைகளைச் சிந்தித்தல்.

ஞானத்தில் யோகம் - சதா சிவனைப் பற்றியே சிந்தித்துத் தெளிதல்.

ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்டையால் இறைவடிவத்தைக் காணுதல்.

 

திருப்பெருந்துறையில் குருவைக் கண்டு ஞானமடைந்த மாணிக்கவாசகப்பெருமான் ஞான மார்க்கத்தில் ஈசனை அடைந்த மகாஞானி.

 

'சரியையிலே சதாசிவன்  சட வடிவாய் நிற்பான்; கிரியையிலே மந்திரத்தின் மறைபொருளாய் மலர்வான்; ஓங்கி உயர்ந்த யோகத்தில் உள் ஒளியாய் நிற்பான்;  ஞானத்தில் தானாகி  இரண்டறவே கலப்பான்' என்பது திருமந்திரம்

 

-   மு.ஹரி காமராஜ்

 

இது பற்றி 154, 369 பாடல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தையும் பார்க்கவும்





 

 இதன் விளக்கத்தை 369 பாடல் விளக்கத்தில் பார்க்கலாம்

 

No comments:

Post a Comment