பின் தொடர்வோர்

Thursday 27 May 2021

448.இமராஜன்

 448



திருவருணை

 

              தனதானன தான தனத்தந்           தனதானா

 

இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே

   இளவாடையு மூருமொ றுக்கும்    படியாலே

சமராகிய மாரனெ டுக்குங்  கணையாலே

   தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே

குமராமுரு காசடி லத்தன் குருநாதா

   குறமாமக ளாசைத ணிக்குந்       திருமார்பா

அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே

   அருணாபுரி வீதியி னிற்கும்       பெருமாளே

 

 

பதம் பிரித்து உரை

 

இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே

இள வாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே

இம ராஜன் - பனிக்கு அரசனாகிய நிலா - சந்திரன் எறிக்கும் கனலாலே - வீசுகின்ற நெருப்பாலும் இள வாடையும் - மெல்லிய தென்றலும் ஊரும் ஒறுக்கும் - ஊராரும் வருத்துகின்ற படியாலே - தன்மையாலும்

சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே

தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே

சமர் ஆகிய - போர்க்கென எழுந்த மாரன் - மன்மதன் எடுக்கும் கணையாலே - தொடுக்கும் மலர்ப் பாணங்களாலும் தனி மான் உயிர் - தனித்துக் கிடக்கும் மான் போன்ற இப்பெண்ணின் உயிர் சோரும் அதற்கான - சோர்வு அடைகின்றதே அதற்கு ஒன்று - ஒரு வழியை அருள்வாயே - அருள்வாயாக

 குமரா முருகா சடிலத்தன் குருநாதா

குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா

குமரா முருகா - குமரனே, முருகனே சடிலத்தன் - சடையை உடைய சிவபெருமானுக்கு குரு நாதா - குரு நாதரே குற மா மகள் - சிறந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் ஆசை தணிக்கும் திரு மார்பா - ஆசையை நிறைவேற்றிய அழகிய மார்பனே

அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே

அருணா புரி வீதியில் நிற்கும் பெருமாளே

 அமராவதி - பொன் நகரில் வாழ் அமரர்க்கு - வாழும் தேவர்களுக்கு அன்று அருள்வோனே - அன்று அருள் செய்தவனே அருணா புரி வீதியினில் நிற்கும் பெருமாளே - திருவண்ணாமலையின் வீதிகளில் உறையும் பெருமாளே


சுருக்க உரை

 சந்திரன், தென்றல் ஆகியவை வருத்துகின்ற தன்மையாலும் மன்மதன் தொடுக்கும் மலர்ப் பாணங்களாலும் தாக்குண்ட தனியாக இருக்கும் இந்தப் பெண் மானின் உயிர் சோர்வை ஒழிக்க ஒரு வழி கூறுவாயாக

குமரா, முருகா, சடையை உடைய சிவனுக்கு உபதேசம் செய்தவனே குறமகளாகிய வள்ளியின் ஆசையை நிறைவேற்றியவரே தேவர்களுக்குப் பொன் உலக வாழ்வை அன்று அருளியவனே எனக்கு அருள் செய்வாயாக

(இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது )

No comments:

Post a Comment