பின் தொடர்வோர்

Sunday 6 March 2022

486. தறுகணன்

 

486

சிதம்பரம்

 

             தனதன தனன தனதன  தனன

               தனதன தனனாத்                 தனதான

 

தறுகணன் மறலி முறுகிய கயிறு

      தலைகொடு விசிறீக்                கொடுபோகுஞ்

சளமது தவிர அளவிடு சுருதி

     தலைகொடு பலசாத்                        திரமோதி

அறுவகை சமய முறைமுறை சருவி

    யலைபடு தலைமூச்                     சினையாகும்

அருவரு வொழிய வடிவுள பொருளை

     அலம்வர அடியேற்                       கருள்வாயே

நறுமல ரிறைவி யரிதிரு மருக

     நகமுத வியபார்ப்                         பதிவாழ்வே

நதிமதி யிதழி பணியணி கடவுள்                     

     நடமிடு புலியூர்க்                           குமரேசா

கறுவிய நிருதர் எறிதிரை பரவு

    கடலிடை பொடியாப்                  பொருதோனே

கழலிணை பணியு மவருடன் முனிவு

    கனவிலு மறியாப்                        பெருமாளே

 

பதம் பிரித்து உரை

 

தறுகணன் மறலி முறுகிய கயிறு

தலை கொடு விசிறி கொ(ண்)டு போகும் 

தறுகணன் = அஞ்சாமையாகிய வீரத்தை உடைய மறலி = யமன் முறுகிய மயிறு = தனது திண்ணிய பாசக் கயிற்றின் தலைகொடு விசிறி = நுனித் தலையைப் பிடித்துக் கொண்டு வீசி  கொடுபோகும் = பிடித்துக் கொண்டு போகும்

 

சளம் அது தவிர அளவிடு சுருதி

தலை கொடு பல சாத்திரம் ஓதி 

சளம் அது தவிர = வஞ்சனைத் தொழில் என்னிடம் வராதபடி அளவிடு சுருதி = அளந்து வகைப்படுத்தியுள்ள வேதம் தலைகொடு = முதலாக பல சாத்திரம் ஓதி = பல சாத்திர நூல்களை ஓதி

 

அறுவகை சமயம் முறை முறை சருவி 

அலைபடு தலை முச்சி இனை ஆகும் 

அறு வகை சமய முறை முறை = ஆறு வகைப்பட்ட சமயங்கள் ஒன்றோடொன்று சருவி அலைபடு = மாறுபட்டு மோதி தலை முச்சி = தலை வேதனையாக இனை ஆகும் = போராடும் 

அருவரு ஒழிய வடிவுள பொருளை

அலம் வர அடியேற்கு அருள்வாயே

 

அருவரு ஒழிய = அருவருப்பான செயல்கள் ஒழிய வடிவுள பொருளை = சத்தான உருவமுள்ள (பேரின்பப்) பொருளை அலம் வர = அமைதி உண்டாக அடியேற்கு அருள்வாயே = அடியேனுக்கு உபதேசித்து அருள்க 

நறு மலர் இறைவி அரி திரு மருக

நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே 

நறு மலர் இறைவி = நறு மணமுள்ள செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் அரி = திருமாலுக்கும் திரு மருக = அழகிய மருகனே நகம் = (இமய) மலை உதவிய = ஈன்ற பார்ப்பதி வாழ்வே = பார்வதியின் செல்வக் குமரனே 

நதி மதி இதழி பணி அணி கடவுள்

நடம் இடு புலியூர் குமரேசா 

நதி மதி இதழி பணி அணி = கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவைகளை அணிந்த  கடவுள் = கடவுளாகிய சிவபெருமான் நடம் இடு = நடமிடும் புலியூர் குமரேசா= சிதம்பரத்தில் உள்ள குமரேசனே 

கறுவிய நிருதர் எறி திரை பரவு

கடல் இடை பொடியா(க) பொருதோனே 

கறுவிய = கோபித்து வந்த நிருதர் = அசுரர்கள் எறி = வீசுகின்ற திரை பரவு = அலைகள் பரந்துள்ள கடல் இடை = கடலிடத்தே பொடியாகப் பொருதோனே = பொடியாகும்படி சண்டை செய்தவனே

 

கழல் இணை பணியும் அவருடன் முனிவு

கனவிலும் அறியா பெருமாளே 

கழல் இணை பணியும் = உனது திருவடிகளைப் பணியும் அவருடன் = அடியார்களுடன் முனிவு = கோபம் என்பதை கனவிலும் அறியாப் பெருமாளே = கனவிலும் அறியாத (கருணாகரப்) பெருமாளே

 

சுருக்க உரை 

அஞ்சாத வீரனாகிய யமன் தனது பாசக் கயிற்றை என் மீது வீசி என்னைக் கொண்டு போகும் வஞ்சகச் செயல் என்னிடம் வராத படி, வேதம் முதலிய பல சாத்திர நூல்களை ஓதி, ஆறு வகைப்பட்ட சமயங்களும், ஒன்றற்கொன்று மாறுபட்ட கருத்துக்களைச் சொல்லி மோதும் அருவருப்பான தொழில் ஒழிய, சத்தான உருவமுள்ள பேரின்பப் பொருளை எனக்கு உபதேசித்து அருள்க 

இலக்குமிக்கும், திருமாலுக்கும் மருகனே இமயமலை அரசன் பெற்ற பார்வதியின் செல்வக் குமரனே! கங்கை, நிலா, கொன்றை, பாம்பு இவைகளை அணிந்த சிவ பெருமான் நடனம் செய்யும் தில்லையில் உள்ள குமரேசனே! கோபித்து வந்து அசுரர்களைப் பொடியாக்கியவனே! உன்னைப் போற்றிப் பணியும் அடியார்களிடம் ஒரு போதும்  கோபம் என்பதை அறியாத பெருமாளே! உண்மைப் பொருளை எனக்கு உபதேசிப்பாயாக

 

விளக்கக் குறிப்புகள் 

சளம் = வஞ்சனை 

அறுவகை சமயம் முறை முறை

   அகல்வினை யுட்சார் சட்சம யிகளோடு வெட்கா தட்கிடு

   மழிவிலி வித்தா ரத்தன மவிகார --- திருப்புகழ், அகல்வினை

Rev 30-5-2022


பாடலை கேட்க 








 



No comments:

Post a Comment