பின் தொடர்வோர்

Sunday 13 March 2022

492 வாத பித்தமொடு.

 




492

சிதம்பரம்

             தான தத்ததன தான தத்ததன

            தான தத்ததன தான தத்ததன

            தான தத்ததன தான தத்ததன   தந்ததான

     வாத பித்தமொடு சூலை விப்புருதி

   யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்

   மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ     டந்திமாலை

மாச டைக்குருடு  காத டைப்புசெவி

   டூமை கெட்டவலி மூல முற்றுதரு

   மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க    ளுண்டகாயம்

வேத வித்துபரி கோல முற்றுவிளை

   யாடு வித்தகட லோட மொய்த்தபல

   வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்       சிங்கியாலே

வீடு கட்டிமய லாசை பட்டுவிழ

   வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற

   வீட ளித்துமயி லாடு சுத்தவெளி              சிந்தியாதோ

ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி

   நீறு பட்டலற சூர வெற்பவுண

   ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக             ழங்கிவேலா

ஓந மச்சிவய சாமி சுத்தஅடி

   யார்க ளுக்குமுப காரி பச்சையுமை

   ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள்            தந்தசேயே

ஆதி கற்பகவி நாய கற்குபிற

   கான பொற்சரவ ணாப ரப்பிரம

   னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய       றிந்தகோவே

ஆசை பெற்றகுற மாதை நித்தவன

   மேவி சுத்தமண மாடி நற்புலியு

   ராடக கப்படிக கோபு ரத்தின்மகிழ்            தம்பிரானே.

பதம் பிரித்து  உரை

 வாதம் பித்தமோடு சூலை விப்புருதி

ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்

மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை

வாதம் = வாயுவினால் ஏற்படும் நோய்கள். பித்தமொடு = பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள். சூலை = வயிற்று உளைவு     விப்புருதி = சிலந்தி ஏறு கல் படுவன் =    கல் போன்ற ஒரு வகைப் புண்    கட்டி. ஈளை = கோழை. பொக்கு இருமல்  = குத்திருமல். மாலை =    கண்ட    மாலை புற்று எழுதல் = புரை வைத்த புற்றுப் புண்.ஊசல் = (உடல்,    மனம்தடுமாற்றம் பல் =பல விதமான ச(ன்)னியோடு = சன்னி நோய் இவற்றுடன் அந்தி மாலை =    மாலைக்கண்

மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு

ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு

மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம்

மாசு அடைக் குருடு = அழுக்கு அடைவதால் வரும் குருடு    காதடைப்பு செவிடு = காது    அடைப்பினால்  வரும்    செவிட்டுத்   தன்மை   ஊமை =    ஊமை. கெட்ட வலி = தாங்க முடியாத வலிகள். மூலம் = மூல நோய். முற்று தரு = (ஆகிய நோய்வகைகள்)    முதிர்கின்ற மரம் போன்ற இந்த உடல் மாலை உற்ற = முறையாகப் பொருந்திய தொண்ணூறு ஆறு தத்துவர்கள் =தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெறுகின்ற உடல்

வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த

கடல் ஓடம் மொய்த்த பல

வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே

வேதவித்து = கடவுள் பரிகோலம் உற்று =    பாதுகாக்கின்ற திருக் கோலத்தைப் பூண்டு    விளையாடுவித்த = விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடல் ஓடம் =    கடலிடைத் தோணி போல    (அலைப்புறும் உடல்) மொய்த்த =    சூழ்கின்ற பல வேடம் இட்டு =    பலவிதமான வேடங்களைப்   பூண்டு பொருள் ஆசை பற்றி உழல்  =    பொருளாசை கொண்டு திரிகின்ற. சிங்கியாலே = விடம் போன்ற அழி செயலாலே

வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ

ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற

வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ

வீடு கட்டி = வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ = காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து. ஓசை கெட்டு =    (உள்ளோசையாகியநாதம் அழிந்து. மடியாமல் = நான் இறந்து படாமல் முத்தி பெற வீடு அளித்து =   முத்தியை அடையுமாறு மயில் ஆடு சுத்த வெளி = நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற சிந்தியாதோ = என் உள்ளம் தியானிக்காதோ?

 ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி

நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு

பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா

ஓத அத்தி = அலைகளை உடைய கடல். முகிலோடு = மேகங்கள். சர்ப்பம் முடி = (ஆதிசேடனாகியபாம்பின் முடி (இவை எல்லாம்). நீறு பட்டு அலற = பொடிபட்டுக் கலங்க    சூரன் =சூரனும் வெற்பு= அவனுடைய எழுகிரியும்அவுணரோடு=அங்கிருந்த அசுரர்களோடு பட்டு விழ=   அழிந்து    விழும்படி வேலை விட்ட = கடலில் செலுத்திய புகழ் = புகழ்மிக்க அங்கி வேலா = நெருப்புப் போன்ற வேலை உடையவனே

 ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும்

உபகாரி பச்சை உமை

ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே

ஓம் நமச்சிவாய சாமி = ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாய கடவுள் சுத்தஅடியார்களுக்கு = பரிசுத்தமானஅடியார்களுக்கு உபகாரி உதவி செய்பவர்    பச்சை உமை=பச்சை நிறங்    கொண்ட  உமை ஓர் புறத்து அருள் =    தமது ஒரு பாகத்தில் இருந்து அருள் சுரக்கும் சிகாமணிக் கடவுள் = சிகா மணித் தெய்வ மாகிய சிவபெருமான் [சிகாமணி-தலைச்சிறந்தோன்] தந்த சேயே =    பெற்ற (கொடுத்த) குழந்தையே

ஆதி கற்பக விநாயகற்கு பிறகான

பொன் சரவணா பர பிரமன்

ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே

ஆதி = முதலில் தோன்றிய. கற்பக விநாயகற்கு = கற்பக விநாயக ருக்கு பிறகான = பின்னர் தோன்றிய பொன் சரவணா = அழகிய சரவண    மூர்த்தியே பரப்பிரமன்=   முழு முதற்  கடவுளான சிவ பெருமான்ஆதி உற்ற பொருள் =     ஆதியாயுள்ள மூல    மந்திரப்    பொருளை ஓதுவித்தமை=ஓதுவிக்கும் தன்மை அறிந்த   கோவே   =    எவ்வண்ணம்   என்று தெரிந்திருந்த தலைவனே

ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம்

மேவி சுத்த மணம் ஆடி நல் புலியூர்

ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே.

ஆசை பெற்ற குற மாதை = உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நித்தம் = நாள் தோறும். வனம் மேவி = தினைப் புனத்துக்குச் சென்றுசுத்த மணம் ஆடி =    பரிசுத்தமான வகையில் திரு மணம் புரிந்து நல் புலியூர் = நல்ல புலியூர் என்னும் தலத்தில் ஆடகம் படிக கோபுரத்தில் = பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ் தம்பிரானே = மகிழ்ந்து மேவும் தம்பிரானே.

 

சுருக்க உரை

 வாதம்பித்தம்சூலைமுதலிய நோய்கள் முதிர்கின்ற இந்த உடல்தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம் பெறும் இந்த உடல்இறைவன் பாதுகாக்கின்ற கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கும் இந்த உடல்பல வேடங்களைப் பூண்டுபொருள் ஆசை கொண்டு திரியும் அழி செயலால்வீடு கட்டிகாம மயக்கத்தில் வீழ்ந்துஉள்ளே இருக்கும் நாதம் போய் இறந்து போகாமல்முத்தி வீட்டை அளிக்க நீ மயிலின் மேல் நடனம் ஆடும் வெட்ட வெளியான ஆனந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ?

 

கடல்மேகங்கள்ஆதிசேடனுடைய முடி ஆகியவை பொடி பட்டுக் கலங்கசூரனும் அவனுடைய எழுகிரியும் அழிந்து விழும்படி கடலில் வேலைச் செலுத்தியவனே ! ஒம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாய்  நின்று அடியார்களுக்கு உதவி செய்பவர்உமா தேவி தமது ஒரு பக்கத்தில் இருந்து அருள் செய்யும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே ! விநாயகருக்குப் பின் தோன்றிய சரவணனே ! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் மூல மந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே ! உன் ஆசையைப் பெற்ற வள்ளியை நாள் தோறும் சென்று திருமணம் புரிந்துபுலியூரில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் தம்பிரானே ! முத்தி பெற மயிலோடு சுத்த வெளியை என் மனம் சிந்தியாதோ?

 

விளக்கக் குறிப்புகள்

 

சிங்கியால் = அழிசெயலால்.

பற்சனி = பதின்மூன்று வகைப்பட்ட சன்னி நோய்.

 96 தத்துவர்கள் கண்ட காயம்...

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென

அறையு மறையென அருந் தத்துவங்களென

                                                    ....திருப்புகழ், அதலவிதல.

 

தத்துவங்கள் 96.

மூலப் பொருள்களின் கூறுகள் = 36. (அசுத்த தத்துவம் = 24. சுத்தா சுத்த  தத்துவம் =7. சுத்த தத்துவம் 5).

புற நிலைக் கருவியின் கூறுகள் = 60 (பிருதிவி (5) அப்பு (5), வாயு = 5

தேயு (5), தச வாயு (10) ஆகாயம் (5). நாடி = 10. வாக்கு = 4. வசனாதி = 5. குணம் = 3. அகங்காரத் திரயம் = 3.

 

ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே...

‘மூலப் பொருள் இன்னதென்று அறிந்திலன் பிரமன் என்று அவனை சிறைலிட்டனையே, உனக்கு அப்பொருள் கூற வருமோ?’ என்று தந்தையார் முருகனை கேட்ட போதுதம்மால் கூற முடியும் என்றும்தந்தையார் ரகசியமாகதத் தாய்பார்வதிக்கு உபதேசித்த போதுதாம் தாயின் கூந்தலில்  ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகவும் முருக வேள் கூறிய வரலாறு இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment