பின் தொடர்வோர்

Sunday 6 March 2022

488. நாடா பிறப்பு

 

488. சிதம்பரம்

 




                தானா தனத்ததன தானா தனத்ததன                   

                    தானா தனத்ததன                 தனதான

 

நாடா பிறப்புமுடி யாதோ வெனக் கருதி

        நாயே னரற்றுமொழி                        வினையாயின்

நாதா திருச்சபையி னேறாது சித்தமென

        நாலா வகைக்குமுன                                  தருள்பேசி

வாடா மலர்ப்பதவி தாதா எனக் குழறி

        வாய்பாறி நிற்குமெனை                           அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது

        வாரே னெனக்கெதிர்முன்                  வரவேணும்

சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி

         தோலா சனத்தியுமை                             யருள்பாலா

தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த

        தோழா கடப்பமல                                   ரணிவோனே

ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு

        மேராள் குறத்திதிரு                                   மணவாளா

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை

         ஈடேற வைத்தபுகழ்                                 பெருமாளே.

 

பதம் பிரித்து உரை  

 நாடா பிறப்பு முடியாதோ என கருதி

நாயேன் அரற்று மொழி வினையாயின்

நாடா - ஆராய்ந்து  பிறப்பு முடியாதோ என - (ஓயாது வரும்இப்பிறவிகள் முடிவு பெறாதோ என்று கருதி - (கவலையுடன்எண்ணி    நாயேன் -    அடியேன் அரற்று மொழி கூச்சலிடும் இந்த    வார்த்தை வினையாயின் - நான் முன் செய்த வினையின் பயனால் என்பதாக இருப்பின்

நாதா மலர் பதவி தா தா என குழறி

வாய் பாறி நிற்கும் எனை அருள் கூர

நாதா - தலைவனே திருச் சபையில் - (நான்)     உன் சபா மண்டபத்தில் ஏறாது சித்தம் என – என் முறையீடு ஏற்றுக் கொள்ள மாட்டாதென உன் மனதில்  இருக்கும்    எண்ணத்தை நான் உணர்ந்து  நாலா வகைக்கும் - பலவாறாக உனது அருள் பேசி -    உனது திருவருள் பெருமையையே பேசி

வாடா மலர்ப்பதவி தா தா எனக் குழறி

 வாய்பாறி நிற்கும் எனை   அருள்கூர

வாடா - என்றும் அழியாத மலர்ப் பதவி -    உனது  திருவடி மலர் என்னும்   பதவியை (முத்தியைதா தா என -   கொடுத்தருள்கொடுத்தருள் என்று குழறி குழறி [கூறி] வாய் பாறி வாய் கிழிபட்டு    நிற்கும் எனை - ஓலமிட்டு நிற்கும் என்னை    அருள் கூர – அதிகப் படியான திருவருள் கூடும்படி.

வாராய் மன கவலை தீராய் நினை தொழுது

வாரேன் எனக்கு எதிர் வரவேணும்


வாராய் வந்தருளுக  மனக் கவலை தீராய் – என்னுடைய மனத் துயரத்தைத்    தீர்ப்பாயாக  நினை – உன்னை தொழுது    வாரேன் - தொழுது வருதல் என்பதே இல்லாத எனக்கும் - அடியேனுக்கும் எதிர் முன் வர வேணும் – முன்னே எழுந்தருளி வர வேண்டுகின்றேன்.

சூடா மணி பிரபை ரூபா கனத்த அரி

தோல் ஆசனத்தி உமை அருள் பாலா

சூடா மணிப் பிரபை – சூடாமனி போன்ற ஒளி உடைய  ரூபா உருவத்தினள் கனத்த அரி -    பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோல் ஆசனத்தி - தோலை இருப்பிடமாகக்   கொண்டவள் (ஆகியஉமை அருள் பாலா -    உமை தேவி அருளிய குழந்தையே.

தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த

தோழா கடப்ப மலர்  அணிவோனே

தூயா பரிசுத்த மூர்த்தியே துதித்தவர்கள் நேயா – உன்னைத் தொழுபவர்களின் நேயனே  எமக்கு அமிர்த தோழா – எனக்கு  [என் போன்றவர்களுக்கும்] அமுதம்     போல இனிமையான நண்பனே கடப்ப மலர் அணிவோனே - கடப்ப    மலர்    மாலையை அணிபவனே

ஏடு ஆர் குழல் சுருபி ஞான ஆதனத்தி மிகு

மேராள் குறத்தி திரு மணவாளா

ஏடு ஆர் - மலர் நிறைந்த  குழல் -    கூந்தலை  உடைய   சுருபி [ஸ்வரூபி]    வடிவத்தினளும் ஞான ஆதனத்தி – ஞானத்தையே ஆஸனமாக உடையவளும் மிகு மேராள்  - மிக்க அழகு           உடையவளும் (ஆகியகுறத்தி திரு மணவாளா – குறவர்களிடம் வளர்ந்த வள்ளியின் கணவனே

ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை

ஈடேற வைத்த புகழ் பெருமாளே.

ஈசா ஈசனே தனி ஒப்பற்ற புலிசை வாழ்வே - சிதம்பரத்தில் வாழும் செல்வனே சுரர் திரளை - தேவர் கூட்டத்தை  ஈடேற வைத்த    - வாழ்வித்த புகழ் பெருமாளே -   புகழைக் கொண்ட பெருமாளே.

 சுருக்க உரை

என் பிறப்புக்கள் ஒழியாதோ என்று நான் ஓலமிடும் இந்தச் சொற்கள் நான் முன்பு செய்த வினையின் பயனாக இருந்தால், நாதனே, அது உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது என்பதை நான் உணர்ந்து, பல விதங்களில் உன் பெருமையைப் பேசி, என்றும் நிலையான உனது திருவடிகளில் பதவியைக் கொடுத்தருளுக என்று பல முறை உன் முன்னே வாய் கிழியக் கூறி நிற்கும் என் முன்னே எழுந்தருளி வர வேண்டும்.

 சூடாமணி போன்ற ஒளி விளங்கும் உருவம் கொண்டவளும், சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய உமா தேவியின் குழந்தையே ! தூயவனே. உன்னைத் துதிப் போர்க்கு நேயனே ! எனக்கு அமுதம் போல் இனிய நண்பனே ! மிக்க அழகுள்ள வள்ளியின் கணவனே ! சிதம்பரத்தில் வாழும் செல்வனே ! தேவர்கள் கூட்டத்தை வாழ வைத்த புகழைக் கொண்ட பெருமாளே என் முன்னே வர வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

 துதித்தவர்கள் நேயா...

சுந்தரருக்கு சிவ பெருமான் தோழனாக இருந்ததைப் போல் தனக்கும் நண்பனாக    இருக்குமாறு அருணகிரி நாதர் முருக வேளைப் பிரார்த்திக்கின்றார்.

ஏழ் இசையாய் இசைப்பயனாய்இன் அமுதாய்என்னுடைய

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி.

                ..... சுந்தரர்  தேவாரம்.

 rev 30-5-2022

பாடலை கேட்க




No comments:

Post a Comment