491
சிதம்பரம்
        தந்த தந்த தத்தான தந்ததன 
         தந்த
தந்த தத்தான தந்ததன 
         தந்த
தந்த தத்தான தந்ததன    தந்ததான
வந்து வந்து வித்தூறி யென்றனுடல் 
   வெந்து வெந்து வொட்டோட
நொந்துயிரும் 
   வஞ்சி னங்க ளிற்காடு
கொண்டவடி         வங்களாலே 
மங்கி மங்கி விட்டேனை யுன்றனது 
   சிந்தை சந்தொ ஷித்தாளு கொண்டருள 
   வந்து சிந்து ரத்தேறி
யண்டரொடு         தொண்டர்சூழ 
எந்தன் வஞ்ச னைக்காடு சிந்திவிழ 
   சந்த ரண்டி சைத்தேவ ரம்பையர்க 
   னிந்து பந்த டித்தாடல்
கொண்டுவா          மந்திமேவும் 
எண்க டம்ப ணித்தோளு மம்பொன்முடி 
   சுந்த ரந்தி ருப்பாத பங்கயமும் 
   என்றன் முந்து றத்தோணி
யுன்றனது        சிந்தைதாராய் 
அந்த ரந்தி கைத்தோட விஞ்சையர்கள் 
   சிந்தை மந்தி ரத்தோட கெந்தருவ 
   ரம்பு யன்ச லித்தோட
எண்டிசையை     யுண்டமாயோன் 
அஞ்சி யுன்ப தச்சேவை தந்திடென 
   வந்த வெஞ்சி னர்க்காடெ ரிந்துவிழ 
   அங்கி யின்கு ணக்கோலை
யுந்திவிடு     செங்கைவேலா
சிந்து ரம்ப ணைக்கோடு கொன்ங்கைகுற 
   மங்கை யின்பு றத்தோள ணைந்துருக 
   சிந்து ரந்த னைச்சீர்ம
ணம்புணர்நல்           கந்தவேளே 
சிந்தி முன்பு ரக்காடு மங்கைநகை 
   கொண்ட செந்த ழற்கோல ரண்டர்புகழ் 
   செம்பொ னம்ப லத்தாடு
மம்பலவர்          தம்பிரானே.
பதம் பிரித்து உரை
வந்து வந்து வித்து ஊறி என் தன் உடல் 
வெந்து வெந்து விட்டு ஓட நொந்து
உயிரும் 
வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே
வந்து வந்து = (உலகில்) திரும்பத் திரும்பத் தோன்றி வித்து ஊறி = சிந்துவில் (சுக்கிலத்தில்] கருவாக ஊறிப் பிறந்து.என் தன் உடல் = எனது உடல் வெந்து வெந்து விட்டு = வெந்து போய் ஓட = [இங்ஙனம்] ஓடுவதால் நொந்து = வாடி உயிரும் = என் உயிரும் வஞ்சினங்களில் = [பல பிறப்புக்களை எடுப்பேன் என்று] சபதம் செய்து கொண்டது போல் காடு கொண்ட = மிகவும் கணக்கில்லாத வடிவங்களாலே = உருவங்களை எடுத்து
மங்கி மங்கி விட்டேனை உன்றனது 
சிந்தை சந்தோஷித்து ஆளு கொண்டு அருள 
வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு
தொண்டர் சூழ
மங்கி
மங்கி விட்டேனை = மீண்டும் மீண்டும் அழிந்து போன என்னை உன்றனது = உன்னுடைய சிந்தை = திருவுள்ளம்
சந்தோஷித்து = மகிழ்ந்து ஆளு கொண்டு அருள = என்னை ஆட்கொள்ளுமாறு வந்து = நீ
எழுந்தருளி சிந்துரத்து ஏறி = [பிணிமுகம் என்னும்] யானையின்
மேல் ஏறி அண்டரோடு =
தேவர்களோடு தொண்டர் சூழ = அடியார்களும் சூழ்ந்து வர.
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ 
சந்தர் அண்டு இசை தேவ லோக ரம்பையர்
கனிந்து பந்தடித்து ஆடல் கொண்டுவர
மந்தி மேவும்
எந்தன் = என்னுடைய. வஞ்சனைக் காடு = மாயையில் பட்ட பிறவிக் காடு சிந்தி விழ = ஒழிந்து தொலைந்து போக சந்தர் = இசையைப் பாடினவராய். அண்டு = நெருங்கி வந்த இசைத் தேவரம் பையர்கள் = இசையில் வல்ல தேவ மகளிர். கனிந்து = உள்ளம் பக்தியால் கனிந்து பந்து அடித்து = பந்தடித்து. ஆடல் கொண்டுவர = நடனம் செய்து கூடி வர. மந்தி = வண்டுகள் மேவும் = விரும்பி மொய்க்கும்.
எண் கடம்பு  அணி தோளும் அம் பொன் முடி 
சுந்தரம் திரு பாத பங்கயமும் 
என்றன் முந்து உற தோணி உன்றனது சிந்தை
தாராய்
எண் = மதிக்கத் தக்க. கடம்பு அணி = கடப்ப மாலை அணிந்த தோளும் = தோள்களும் அம் = அழகிய பொன் முடி = பொன் முடியும் சுந்தர = (கண்டோரால்) விரும்பப்படும் திருப் பாதபங்கயமும் = தாமரைத் திருவடிகளையும் என்றன் முந்து உற = என் முன்னே. தோணி = தோன்றி. உன்றனது சிந்தை தாராய் = உனது திருவுள்ளத்தைத் தந்து அருளுக.
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் 
சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர் 
அம்புயன் சலித்து ஓட எண் திசையை
உண்ட  மாயோன்
அந்தரம் = விண்ணில் உள்ளவர்கள் திகைத்து ஓட = பிரமித்து ஓட விஞ்சையர்கள் = அறிவில் சிறந்தோர். சிந்தை மந்திரத்து ஓட = மனக் கவலையுடன் ஓட கெந்தருவர் = கந்தருவரும் அம்புயன்= பிரமனும் சலித்து ஓட = மனம் சோர்வடைந்து ஓட எண் திசையை = எட்டுத் திசையிலும் பரந்த உலகை உண்ட மாயோன் = [வாமனனாக வந்து] உண்ட திருமால்
அஞ்சி உன் பத சேவை தந்திடு என 
வந்த வெம் சினர் காடு எரித்து விழ 
அங்கியின் குண கோலை உந்தி விடு செம்
கை வேலா
அஞ்சி = அச்சமுற்று. உன் பதச் சேவை = உனது
திருவடிச் சேவையை தந்திடு என = தந்து காத்தருள்க என்று கூறி வந்த = எதிர்த்து வந்த வஞ்சினர் = கோபத்தினரான அசுரர்களின் காடு = காடு போன்ற பெருங்
கூட்டம் எரிந்து விழ = எரி பட்டு விழ அங்கியின் குண = நெருப்பின் தன்மையைக் கொண்ட கோலை  அம்பை உந்திவிடு = செலுத்திய செம் கை
வேலா = செங்கை வேலனே
சிந்துரம் பணை கோடு கொங்கை குற 
மங்கை இன்புற தோள் அணைந்து உருக 
சிந்துரம் தனை சீர் மணம் புணர் நல்
கந்த வேளே
சிந்துரம் = யானையின் பணை = பருத்த. கோடு = கொம்பு போன்ற கொங்கை குற மங்கை = கொங்கையை உடைய குறப் பெண்ணாகிய வள்ளி. இன்புற = மகிழும்படி தோள் அணைந்து = அவளுடைய தோள்களை அணிந்து உருக = உருக நின்று சிந்துரம் தனை = யானையால் வளர்க்கப் பட்ட தெய்வ யானையை. சீர் மணம் புணர் = சிறப்புடன் திருமணம் செய்து கொண்ட நல் கந்த வேளே = நல்ல கந்த வேளே.
சிந்தி முன் புரக்காடு மங்க நகை 
கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ் 
செம் பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே.
முன் = முன்பு புரக் காடு சிந்தி மங்க = திரிபுரங்கள் என்னும் காடு சிதறுண்டு அழிய நகை கொண்ட = சிரிப்பில் கொண்ட செம் தழல் கொண்ட = பெரு நெருப்பை ஏவிய கோலர் = அழகிய நெருப்பு உருவம் கொண்ட சிவபெருமான் அண்டர் புகழ் = தேவர்கள் புகழும் செம் பொன் அம்பத்து = செம்பொன் அமபலத்தில் ஆடும் = நடனம் புரியும். அம்பலவர் = அம்பலவர் ஆகிய சிவபெருமானுக்கு தம்பிரானே = தம்பிரானே.
சுருக்க உரை
மீண்டும் மீண்டும்
கருவில் தோன்றி உருவெடுத்து, என் உடல் திரும்பத் திரும்ப வெந்து போய், உடலும் உள்ளமும் வாடி, கணக்கில்லாத பிறவிகளை
எடுத்த என்னைத் திருவுள்ளம் மகிழ, ஆட்கொள்ள பிணிமுகம் என்ற யானையின் மீது, தேவர்களும் அடியார்களும்
சூழ்ந்து வர, தேவ மகளிர் இசை பாடி நடனத்துடன் கூடி வர, கடப்ப மாலைகள் அணிந்த
தோள்களும் பொன் முடியும், திருவடித் தாமரைகளும்  என் கண்ணில் தோன்றுமாறு வந்து அருள்க.
தேவர்களும் அறிவில் மிக்க சான்றோர்களும், பிரமனும், உலகை உண்ட திருமாலும், அச்சமுற்று ஓடி வந்து காத்தருளுமாறு வேண்ட, அசுரர்களின் கூட்டம் அழிய அம்பைச் செலுத்திய வேலனே!. யானையின் தந்தங்களைப் போன்ற கொங்கைகளைக் கொண்ட குற மாதாகிய வள்ளியை அணைபவனே!. யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனை மணந்த கந்த வேளே!. தன்னுடைய சிரிப்பில் கொண்ட நெருப்பால் திரிபுரங்களை எரித்த சிவபெருமானுக்குத் தம்பிரானே!. என்னை ஆட்கொள்ள என் முன்னே வரவேணும்.
விளக்கக் குறிப்புகள்
 தாளும் கொண்டருள் வந்து சிந்துரத்து ஏறி.... 
அடியார்களை ஆளும் பொருட்டு முருகன் வரும்போது
பிணிமுகன் என்னும் தனது யானை வாகனத்தின் மீது எழுந்தருளுவான். 
உவாவினி யகானுவி நிலாவும
யில்வாகன 
முலாசமுட னேறுங் கழலோனே     ...திருப்புகழ், அவாமரு. 
வஞ்சனை = மாயை. மந்தி = வண்டு.
சந்து = இசை 
மந்திரம் = விசாரம்.
அங்கியின் குணக் கோலை... 
முருகன் அம்புகள் வெங்கனல் விடுத்திடும்
..சரம்....கந்த புராணம் 
சிந்தி முன் புரக் காடு மங்க நகை கொண்ட....
திரிபுரத்தை அழித்த போது இறைவன் நடனம் செய்தார். இந்த
ஆடல்கள் கொடுகொட்டி, பாண்டரங்கம் எனப்படும். 
கற்புரத்தை வீட்டி நட்ட மிட்ட
நீற்றர்...திருப்புகழ். முத்துரத்ந.

No comments:
Post a Comment