பின் தொடர்வோர்

Sunday 6 March 2022

487. நஞ்சினை

487



சிதம்பரம்

 

               தந்தனத் தானதன தந்தனத் தானதன

                   தந்தனத் தானதன                   தந்ததான

 

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை

   நம்புதற் றீதெனநி                               னைந்துநாயேன்

நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை

   நங்களப் பாசரண                                   மென்றுகூறல்

உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்

   உன்சொலைத் தாழ்வுசெய்து                      மிஞ்சுவாரார்

உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்

   உம்பருக் காவதினின்                            வந்துதோணாய்

கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு

   கண்களிப் பாகவிடு                            செங்கையோனே

கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு

   கஞ்சுகப் பான்மைபுனை                 பொன்செய்தோளாய்

அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்

   அந்தரத் தேறவிடு                                      கந்தவேளே

அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை

   அம்பலத் தாடுமவர்                                     தம்பிரானே

 

பதம் பிரித்து உரை

 

நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை

நம்புதல் தீது என நினைந்து நாயேன்

நஞ்சினைப் போலும் = விடம் போல மன வஞ்சகக் கோளர் = மனத்தில் வஞ்சகம் கொண்டுள்ளவர்களை நம்புதல் = நம்புதல் தீது என நினைந்து = கெடுதல் என்று நினைந்து நாயேன் = அடியேன் 

நண்பு உக பாதம் அதில் அன்பு உற தேடி உனை

நங்கள் அப்பா சரணம் என்று கூறல்

நண்பு உக = (உன் மீது) நண்பு பெருக பாதம் அதில் = உனது திருவடியில் அன்பு உறத் தேடி = அன்பு பொருந்த உன்னைத்தேடி உனை = உன்னை நங்கள் அப்பா சரணம் = எங்கள் அப்பனே, சரணம் என்று கூறல் = என்று ஓலமிடுகின்றேன் (அந்தக் கூச்சல்)

 

உன் செவிக்கு ஏறலை கொல் பெண்கள் மெல் பார்வையை கொல்

உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர்

உன் செவிக்கு ஏறலை கொல் = உன் காதுகளில் ஏற வில்லையோ? பெண்கள் = தேவசேனையும் வள்ளி நாச்சியாரும் மெல் பார்வையை கொல் = உன் மீது கண் பார்வை உள்ளதால் தான் கேட்க வில்லையோ? உன் சொலைத் தாழ்வு செய்து = உனது உபதேச மொழிகளைத் தாழ்வு படுத்தி மிஞ்சுவார் ஆர் = மேற் செல்லுவார் யார்? 

உன் தனக்கே பரமும் என் தனக்கு ஆர் துணைவர்

உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய்

உன் தனக்கே பாரமும் = உனக்கே (என்னைப் புரத்தல்) பாரமாகும் என் தனக்கு ஆர் துணைவர் = எனக்கு துணையாக யார் இருக்கின்றார்கள் உம்பருக்கு ஆவதினின் = தேவர்களுக்கு நீ உற்ற துணை ஆனது போல் வந்து தோணாய் =என் முன்னே வந்து காட்சி அளிப்பாயாக 

கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு

கண் களிப்பாக விடு செம் கையானே

கஞ்சனைத் தாவி = பிரமனை எட்டி முடி முன்பு = அவனது தலையில் முன்பு குட்டு ஏய் = குட்டுப் பொருந்தும்படி மிகு கண் களிப்பாக = மிக்க கண் களிப்புடன் விடு = செலுத்திய செம் கையினனே = சிவந்த கையை உடையவனே 

கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு

கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய்

கண் கயல் பாவை = கயல் மீன் போன்ற கண்களை உடைய பாவை அனைய குற மங்கை = குறப் பெண்ணாகிய வள்ளியின் பொன் தோள் தழுவு = அழகிய தோள்களைத் தழுவும் கஞ்சுகப் பான்மை புனை = சட்டையை அணிந்த தன்மையை ஒக்கத் (தழுவும்) பொன் செய் தோளாய் = அழகிய தோள்களை உடையவனே 

அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம்

அந்தரத்து ஏற விடு கந்த வேளே 

அஞ்ச வெற்பு = கிரௌஞ்ச மலை நடுங்க ஏழு கடல் மங்க = ஏழு கடல்களும் ஒடுங்க நிட்டூரர் குலம் = துட்டர்களாகிய அசுரர் கூட்டம் அந்தரத்து ஏற = விண்ணில் ஏற (இறந்து பட) விடு = வேலைச் செலுத்திய கந்த வேளே = கந்த வேளே 

அண்டம் மு(ன்) பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை

அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே 

அண்டம் முன் = அண்டம் முதலான பார் = உலகங்கள் புகழும் = புகழும் எந்தை = எந்தையே பொன்பு ஊர் = அழகிய ஊராகிய புலிசை = புலியூர் என்னும் சிதம்பரத்தில் அம்பலத்து = பொன்னம்பலத்தில் ஆடும் அவர் தம்பிரானே = நடமிடும்சிவபெருமானுக்குத் தம்பிரானே

 

தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு

 

 சுருக்க உரை

 விடம் போல் வஞ்சக மனமுடைய விலைமாதர்களை நம்புதல் கெடுதலாகும் என்பதை உணர்ந்து, உன் மீது நண்பு பெருக, உன் திருவடியில் சரணம் என்று நான் ஓலமிடுவது உன் செவிகளில் விழவில்லையோ? உன் பார்வை பக்கத்திலுள்ள தேவசேனை, வள்ளி நாயகி ஆகிய இருவர் மேலும் இருப்பதால் உன்னால் கேட்க முடிய வில்லையோ? உன் உபதேச மொழிகளைத் தாழ்வு படுத்த யாரால் முடியும்?  உன்னைத் தவிர எனக்கு வேறு துணை யார் இருக்கிறார்கள்?  தேவர்களுக்கு உற்ற துணையாயிருந்த நீ எனக்கும் துணையாக இருக்க,என் முன்னே வர வேண்டுகின்றேன்  

பிரமன் தலையில் குட்டிக் களிப்புற்ற செவ்விய கையை உடையவனே! கயல் மீன் போன்ற வள்ளியை உடலில் பொருந்தத் தழுவியவனே! கிரௌஞ்ச மலை நடுங்கவும், ஏழு கடல்களும் ஒடுங்கவும், அசுரர்கள் கூட்டம் இறந்து படவும் வேலைச் செலுத்திய கந்த வேளே! எல்லாஅண்டங்களும்  புகழும்படி, அழகிய பொன்னம்பலத்தில் நடமிடும் சிவபெருமானுக்குத் தம்பிரானே! என்னைக் காக்க என் முன் வர வேண்டுகிறேன்

 

ஒப்புக 

கஞ்சனைத் தாவிமுடி முன்பு குட்டு ஏய்

பிரணவத்தின் பொருள் தெரியாது பிரமன் விழித்த போது முருகவேள்  அவனைக் குட்டிச் சிறையில் இட்டார்

 

மறையன் தலை உடையும்படி நடனம் கொள் ஆழைக்கதிர்வேலா                  -  திருப்புகழ், முகசந்திர

 

பிரமனை முனிந்து காவலிட்டு

ஒரு நொடியில் மண்டு சூரனைப் பொருதேறி

                                             - திருப்புகழ் கறைபடுமுட

 

என் தனக்கு ஆர் துணைவர்

தொண்டரடிப் பொடி ஆழ்வாரும் இங்ஙனமே கதறுகின்றார்

 

ஊரிலேன் காணி யில்லை

உறவும ற்றொருவ ரில்லை

காரொளி வண்ணனே என்

கண்ணனே கதறு கின்றேன்

            - நாலாயிரத் திவ்ய பிரபந்தம்  






 

No comments:

Post a Comment