489
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் தனதானா
பரமகுரு நாத கருணையுப தேச         
   பதவிதரு ஞானப்                                     பெருமாள்காண்      
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை      
   பகருமதி காரப்                                          பெருமாள்காண்      
திருவளரு நீதி தினமானொக ராதி      
   செகபதியை யாளப்                               பெருமாள்காண்      
செகதலமும் வானு மருவையவை பூத      
   தெரிசனை சிவாயப்                              பெருமாள்காண்      
ஒருபொருள தாகி அருவிடையை யூரு       
   முமைதன்மண வாளப்                    பெருமாள்காண்        
உகமுடிவு கால மிறுதிகளி லாத            
   உறுதியநு பூதிப்                                        பெருமாள்காண்        
கருவுதனி லு\று மிகுவினைகள் மாய        
   கலவிபுகு தாமெய்ப்                              பெருமாள்காண்        
கனகசபை மேவி அனவரத மாடு        
   கடவுள்செக சோதிப்                                       பெருமாளே.
பதம் பிரித்து உரை
பரம குரு நாத கருணை உபதேச
பரவி தரு ஞான பெருமாள்காண்.
பரம குரு நாத - மேலான குரு நாதனே கருணை உபதேச - கருணையுடன் உபதேசிப்பவனே பதவி தரு - அருட்பதவியைத் தருகின்ற (சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவிகளை) ஞானப் பெருமாள்காண் -  ஞானப் பெருமாள் நீ தான்
பகல் இரவு இலாத ஒளி வெளியில் மேன்மை        
பகரும் அதிகார பெருமாள்காண்
பகல் இரவு இல்லாத - இராப்பகலற்ற ஒளி வெளியில் - ஒளிவீசும் (சிதாகாச) வெளியில் மேன்மை - மேன்மையான உண்மைப் பொருளை பகரம் - விளக்கிச் சொல்லவல்ல அதிகாரப் பெருமாள்காண் - அதிகாரம் கொண்ட பெருமாள் நீதான்
திரு வளரும் நீதி தின மனோகர ஆதி        
செக பதியை ஆள் அ பெருமாள் காண்
திரு வளரும் - முத்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதி -நீதியே தினம் மனோகர - நித்திய அழகனே ஆதி - மூலப்பொருளே செக பதியை - பூவுலகச் அரசர்களையும் ஆள் அப்பெருமாள் காண் - ஆள்கின்ற அந்தப் பெருமாள் காண்
செக தலமமும் வானும் மருவு ஐ அவை பூத
தெரிசனை சிவாய பெருமாள் காண்
செக தலமும் - மண்ணும் வானும் - விண்ணுலகமும் மருவு அவை ஐ பூத - பொருந்தியவைகளான ஐம் பூதங்களிலும் தெரிசனை - கலந்து விளங்கித் தரிசனம் தரும் சிவாயப் பெருமாள் காண் - சிவாய என்னும் பஞ்சாக்ஷரத்தின் பொருளாய் விளங்கும் பெருமாள் நீ தான்
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும்
உமை தன் மணவாள பெருமாள்காண்
ஒரு பொருள் அதாகி - ஏகப் பொருளாகி அரு -அருமையான விடையை - இடப வாகனத்தில் ஊரும் -ஏறுகின்ற உமை தன் மணவாளா - உமா தேவியின் கணவனாகிய பெருமாள் காண் - பெருமாள் நீ தான்
உக முடிவு காலம் இறுதிகள் இல்லாத    
உறுதி அநுபூதி பெருமாள்காண்
உக முடிவு காலம் இறுதிகள் இலாத - உக முடிவு, காலம்,இறுதிகள் என்பவை இல்லாத உறுதி அநுபூதி - உறுதி நிலை பெற்ற சிவானுபூதி பெருமாள் காண் - பெருமாள் நீ தான்
கருவு தனில் ஊறு மிகு வினைகள் மாய    
கலவி புகுதா மெய் பெருமாள் காண்
கருவு தனில் ஊறும் - கருவில் இருக்கும் போதே மிகு வினைகள் மாய - கொடிய வினைகள் அழிய கலவி புகுதா - சேர்க்கையில் வாராத வகைக் காக்கும் மெய்ப் பெருமாள் காண் - உண்மைப் பொருள் நீ தான்
கனக சபை மேவி அனவரதம் ஆடு
கடவுள் செக சோதி பெருமாளே. 
கனக சபை மேவி - பொன்னம்பலத்தில் பொருந்தி அனவரதம்ஆடும் -எப்போதும் திருநடனம் செய்கின்ற. கடவுள் - கடவுளாகிய செக சோதிப் பெருமாளே - சோதியாக விளங்கும் பெருமாளே
சுருக்க உரை
மேலான குரு நாதனே!
கருணையுடன் உபதேசிப்பவனே!
அருள் பதவிகளைத் தரும் பெருமாள் நீ தான். இரவு, பகல் இல்லாத  ஞான ஒளி வீசும் வெளியில் மேன்மையாக உண்மைப் பொருளை விளக்கிச் சொல்ல வல்ல அதிகாரம் படைத்தவன் நீ தான்.
முத்திச் செல்வத்தை  வளர்க்கின்ற நீதியே!
நித்திய அழகனே!
ஆதிப் பொருளே!
அரசர்களுக்கு அரசே!
ஏக மூர்த்தியே!
ரிஷபவாகனத்தில் ஏறும் உமா தேவியின்  கணவனே!  ஐம்பூதங்களிலும் கலந்து விளங்கித் தரிசனம் தரும் சிவாயநம என்னும் பஞசாக்ஷரத்தின் பொருளாய் விளங்கும் பெருமாள் நீ தான்.
உக முடிவிலும் அழியாமல் நிலைத்து  நிற்பவன் நீ தான். கருவிலேயே என் கொடிய வினைகளை அழித்து, நான் கலவியில் புகா வண்ணம் காக்கும் உண்மைப் பொருள் நீ தான்.
சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சோதியே!
உன்னைத் துதிக்கின்றேன்.
விளக்கக் குறிப்புகள்
 திரு வளரும் நீதியே.... 
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன்
....சம்பந்தர் தேவாரம்.
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே ...சம்பந்தர் தேவாரம்
செகதமும் வானு மருவை யவை பூத....ஐம்பூதங்களையும் தந்தது
ஐந்தெழுத்தே.
மதிய மண்குண மஞ்ச நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை தங்குகோண...திருப்புகழ், மதியமண்.
தெரிசனை சிவாயப் பெருமாள்....
தில்லையில் அருணகிரி நாதர் முருகவேளைச் சிவபெருமானாகவே
காண்கிறார்.
சிவசிவ ஹர ஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம...திருப்புகழ், அவகுணவிர.
முத்தி நால்வகை; சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் என்பன.
1. சாலோகம் – இறைவனுடன் அவ்வுலகில் இருக்கும் நிலை. 
2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை. கடவுளின் அருகே இருப்பது. 
3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு. கடவுளின் உருவினைப் பெற்று வாழ்வது 
4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர்
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக மிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ர கெம்பீர பரிபூரண விலாசனே
சுயம்பு ரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !
                                                     – சூரிய நமஸ்கார பதிகம்
சாயுஜ்யம்,சிவன்,குருநாதா,சாரூபம்,சாமீபம்,ஞானப்பொருள்,

No comments:
Post a Comment