பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

411.மனைமக்கள்


411
பொது

                       தனனத்த தத்த   தனதான

மனைமக்கள் சுற்ற       மெனுமாயா
   வலையைக்க டக்க               அறியாதே
வினையிற்செ ருக்கி      யடிநாயேன்
   விழலுக்கி றைந்து               விடலாமோ
சுனையைக்க லக்கி       விளையாடு
   சொருபக்கு றத்தி                 மணவாளா
தினநற்ச ரித்ர           முளதேவர்
   சிறைவெட்டி விட்ட            பெருமாளே

பதம் பிரித்து உரை

மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா
வலையை கடக்க அறியாதே
மனை - மனைவி. மக்கள் - குழந்தைகள். சுற்றம் - உறவினர். என்னும் மாயா - என்னும் மாயமான. வலையைக் கடக்க - வலையை விட்டு விலக. அறியாதே - தெரியாமல்.

விழியில் செருக்கி அடி நாயேன்
விழலுக்கு இறைத்து விடலாமோ

விழியில் - வினையிலே செருக்கி - களித்து மயங்கி அடி நாயேன் - அடிமை நாயாகிய நான். விழலுக்கு இறைத்து விடலாமோ - (என் ஆயுளை) வீணாகக் கழித்து விடல் நன்றா?

சுனையை கலக்கி விளையாடும்
சொருப குறத்தி மணவாளா

சுனையைக் கலக்கி - சுனையிலுள்ள நீரைக் கலக்கி. விளையாடு - விளையாடிய. சொருபி - உருவழகியாகிய வள்ளியின். மணவாளா - மணவாளனே.

தினம் நல் சரித்திரம் உ(ள்)ள தேவர்
சிறை வெட்டி விட்ட பெருமாளே.

தினம் - நாள் தோறும்.  நல் சரித்திரம் உள்ள தேவர் - நல்ல ஒழுக்கங்களை மேற்கொண்ட. தேவர் - தேவர்களின். சிறை வெட்டி விட்ட பெருமாளே - சிறையை வெட்டிவிட்ட பெருமாளே.

சுருக்க உரை
மனைவி, மக்கள், சுற்றம் என்கின்ற மாய வலையிலிருந்து விலகத் தெரியாமல், வினைகளிலேயே களித்து மயங்கி நிற்கும் அடி நாயேன், என் வாழ் நாட்களை வீணாகக் கழித்தல் நன்றோ?

சுனையைக் கலக்கி விளையாடும் வள்ளியின் கணவனே, நல்லொழுக்கம் கொண்ட தேவர்களின் சிறையை நீக்கி ஒழித்த பெருமாளே, என் வாழ்க்கையை விழலுக்கு இறைத்து விடலாமோ?

ஒப்புக

தின நற் சரித்ரமுள தேவர்...
  புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்...திருப்புகழ் கன்னியர்.
நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே (தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர்) ...சம்பந்தர் தேவாரம்.



No comments:

Post a Comment