பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

418.வாரிமீதே


418
பொது

                            தானான தானன      தந்ததானா

வாரிமீ தேயெழு                 திங்களாலே
   மாரவே ளேவிய             அம்பினாலே
பாரெலா மேசிய              பண்பினாலே
   பாவியே னாவிம           யங்கலாமோ
சூரனீள் மார்புதொ         ளைந்தவேலா
   சோதியே தோகைய     மர்ந்தகோவே
மூரிமால் யானைம           ணந்தமார்பா
   மூவர்தே வாதிகள்           தம்பிரானே.

பதம் பிரித்து உரை

வாரி மீதே எழு திங்களாலே
மார வேள் ஏவிய அம்பினாலே
வாரி மீது எழும் - கடல் மீது எழுகின்ற. திங்களாலும் - நிலவாலும். மார வேள் - மன்மதன். ஏவிய - செலுத்திய. அம்பினாலும் - அம்பாலும்

பார் எ(ல்)லாம் ஏசிய பண்பினாலே
பாவியேன் ஆவி மயங்கலாமோ

பார் எல்லம் - உலகிலுள்ளோர் யாவரும். ஏசிய - இகழ்ந்து பேசிய. பண்பினாலே - செய்கையாலும். பாவியேன் - பாவியாகிய எனது. ஆவி - உயிர். மயங்கலாமோ - நிலை அழியலாமோ?

சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா
சோதியே தோகை அமர்ந்த கோவே

சூரன் நீள் மார்பு - சூரனுடைய பெரிய மார்பை. தொளைந்த வேலா - தொளை செய்த வேலனே. சோதியே - சோதியே. தோகை அமர்ந்த வேலா - மயில் மீது வீற்றிருக்கும் அரசனே

மூரி மால் யானை மணந்த மார்பா
மூவர் தேவாதிகள் தம்பிரானே.

மூரி - பெருமையும். மால் - (உன் மீது) ஆசை கொண்டிருந்த. யானை - தேவ சேனையை. மணந்த மார்பா - மணந்த திருமார்பனே. மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவர்களுக்கும் (பெருமாளே). தேவாதிகள் தம்பிரானே - தேவர்களின் தலைவனே.

சுருக்க உரை

கடல் மேல் எழுகின்ற நிலவாலும், மன்மதன் ஏவும் அம்பாலும், உலகில் உள்ளோர் யாவரும் இகழ்ந்து பேசும் செய்கையாலும், பாவியாகிய என் மனம் நிலை அழியலாமோ?

சூரனுடைய பெரிய மார்பைத் தொளைத்தவனே, சோதியே. மயில் மேல் வீற்றிருப்பவனே, மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே, தேவர்களின்  தலைவனே. பெண்ணாசையால் பாவியாகிய நான் நிலை குலையலாமோ?


No comments:

Post a Comment