பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

412.மாண்டாரெ


         தாந்தான தந்தன தந்தன
       தாந்தான தந்தன தந்தன
      தாந்தான தந்தன தந்தன      தனதான

மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
   யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை
   வான்பூத லம்பவ னங்கனல்                     புனலான
வான்பூத முங்கர ணங்களு
   நான்போயொ டுங்கஅ டங்கலு
   மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை    யருளாயேல்
வேண்டாமை யொன்றைய டைந்துள
   மீண்டாறி நின்சர ணங்களில்
   வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை   யுடையேனாய்
வேந்தாக டம்புபு னைந்தருள்
   சேந்தாச ரண்சர ணென்பது
   வீண்போம தொன்றல என்பதை          யுணராதோ
ஆண்டார்த லங்கள ளந்திட
   நீண்டார்மு குந்தர்த டந்தனில்
   ஆண்டாவி துஞ்சிய தென்றுமு            தலைவாயுற்
றாங்கோர் சிலம்பு புலம்பிட
   ஞான்றூது துங்கச லஞ்சலம்
   ஆம்பூமு ழங்கிய டங்கும                      ளவில்நேசம்
பூண்டாழி கொண்டுவ னங்களி
   லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி
   போந்தோல மென்றுத வும்புயல்           மருகோனே
பூம்பாளை யெங்கும ணங்கமழ்
   தேங்காவில் நின்றதொர் குன்றவர்
   பூந்தோகை கொங்கைவி ரும்பிய        பெருமாளே.

பதம் பிரித்து உரை

மாண்டார் எலும்பு அணியும் சடை
ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன

மாண்டார் எலும்பு – இறந்த தேவர்களுடைய எலும்பை (மாட்சிமை உடையாருடைய எலும்புகளை தரிக்கின்ற - என்பது வாரியார் அளிக்கும் பொருள்) அணியும் - அணிபவரும். சடை ஆண்டார் - சடா பாரம் கொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான், இறைஞ்ச - உன்னை வணங்க. மொழிந்ததை - நீ உபதேசித்த பொருளை.  வான் - விண். பூதலம் - பூமி. பவனம் - காற்று. கனல் - நெருப்பு. புனல் ஆன - நீர் ஆகிய.

வான் பூதமும் கரணங்களும்
நான் போய் ஒடுங்க அடங்கலும்
மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல்

வான் பூதமும் - பெரிய ஐம்பூதங்களும். கரணங்களும் - (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் நான்கு) கரணங்களும். நான் போய் ஒடுங்க - நான் என்னும் அகங்காரமும் நீங்கி ஒடுங்க. அடங்கலும் மாய்ந்தால் - இங்ஙனம் எல்லம் இறந்து பட்டால். விளங்கும் - விளங்குவதான. அந்த ஒன்றினை - அந்த ஒப்பற்ற ஒரு பொருளை. அருளாயேல் - நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக).

வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம்
மீண்டு ஆறி நின் சரணங்களில்
வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய்

வேண்டாமை - வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான. உள்ளம் ஒன்றை அடைந்து - மன நிலை ஒன்றை நான் அடைந்து. மீண்டு ஆறி - என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதி பெற்று. நின் சரணங்களில் - உனது திருவடிகளில். வீழ்ந்து - விழுந்து. ஆவல் கொண்டு உருக - அசையுடனே உள்ளம் உருகும்படியான. அன்பினை உடையேனாய் - அன்பு நிலையை நான் உடையவனாகி.

வேந்தா கடம்பு புனைந்து அருள்
சேந்தா சரண் சரண் என்பது
வீண் போம் அது ஒன்று அ(ல்)ல என்பதை உணராதோ

வேந்தா - அரசே. கடம்பு புனைந்தருள் சேந்தா - கடப்ப மாலை அணிந்த காரணனே. சரண் சரண் என்பது - உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு. வீண் போம் அது ஒன்று அல்ல என்பதை - வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை. உணராதோ -  உணர மாட்டேனோ?

ஆண்டார் தலங்கள் அளந்திட
நீண்டார் முகுந்தர் தடம் தனில்
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாய் உற்று

ஆண்டார் - (உலகத்தை எல்லம்) ஆள்பவர். தலங்கள் - மூவுலகையும். அளந்திட நீண்டார் - தமது திருவடியால் அளக்க வேண்டி நீண்ட உருவம் எடுத்தவர். முகுந்தர் - முகுந்தர். தடந்தனில் - மடுவில். ஆண்டு - அவ்விடத்தில். ஆவி துஞ்சியது  என்று - உயிரே போய்விட்டது என்று. முதலை வாய் உற்று - முதலையின் வாயில் அகப்பட்டு.

ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட
ஞான்று ஊது துங்க சலஞ்சலம்
ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம்

அங்கு ஓர் - அங்கே ஒரு ஒப்பற்ற. சிலம்பு புலம்பிட - மலை போன்ற (கஜேந்திரன் என்னும்) யானை கூச்சலிட. ஞான்று - அப்பொழுது. ஊது - ஊதின. துங்க - பரிசுத்தமான. சலஞ்சலம் - பாஞ்ச சன்னியம் என்னும் சங்கம். பூ ஆம்  - மலரை ஒத்த வாயில். முழங்கி - முழக்கம் செய்யப்பட்டு. அடங்கும் அளவில் - சங்க ஓசை அடங்குவதற்குள். அளவில் நேசம் - அளவில்லாத அன்பு.

பூண்டு ஆழி கொண்டு வனங்களில்
ஏய்ந்து ஆள வென்று வெறும் தனி
போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே

பூண்டு - பூண்டு. ஆழி கொண்டு - சக்கரத்தை ஏந்தி வந்து. வனங்களில் ஏய்ந்து ஆள என்று - (மடு இருந்த) வனத்தை அடைந்து (அந்த யானையை) ஆண்டருள. வெறும் தனி போந்து - (தான்) வேறு ஆயுதம் இல்லாமல். ஓலம் என்று - அபயம் தந்தோம் என்று. உதவும் புயல் மருகோனே - உதவிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே.

பூம்பாளை எங்கும் மணம் கமழ்
தேம் காவில் நின்றது ஓர் குன்றவர்
பூம் தோகை கொங்கை விரும்பிய பெருமாளே.

பூம் பாளை - அழகிய தென்னம்பாளை. எங்கும் மணம் கமழ் - எங்கும் நறு மணம் வீசுகின்ற. தேம் காவில் - இனிய பூஞ்சோலையில். நின்றது ஓர் - இருந்த ஒப்பற்ற. குறவர் பூந்தோகை - வேடர்களின் அழகிய மயில் போன்ற வள்ளியின். கொங்கை விரும்பிய பெருமாளே - கொங்கைகளை விரும்பிய பெருமாளே.

சுருக்க உரை

இறந்த  தேவர்களின் எலும்புகளை அணிந்த சிவபெருமான் வணங்க, அவருக்கு நீ உபதேசித்த மெய்ப் பொருளை, ஐம்பூதங்களும், நான்கு கரணங்களும், நான் என்னும் அகங்காரமும் ஒடுங்கி அடங்கினால் விளங்குவதான ஒப்பற்ற பொருளை, நீ எனக்கு அருளாவிட்டாலும், அதற்குப் பதிலாக வேண்டாமை  என்னும் மனப்பக்குவம் எனக்கு உண்டாகவும், என் மனம் பல இடங்களில் திரியாமல், வேகம் அடங்கி, அமைதி பெறவும், உன் திருவடிகளில் விழுந்து ஆசையுடன் உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாக, வேந்தா, சேந்தா, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழி பாடு வீணாகப் போகக்கூடியது அல்ல என்பதை நான் உணர மாட்டேனோ?

உலகை ஆள்பவரும், மூவுலகங்களையும் தமது நீண்ட வடிவால் அளந்தவரும், மடுவில் முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன் கூச்சலிட, பாஞ்ச சன்னியம் என்னும் சங்கை  ஊதிக்கொண்டு வந்த திருமால் அந்தச் சங்கின் ஓசை முடிவதற்குள், வனத்தை அடைந்து, யானையைக் காப்பாற்றி அதனை ஆட்கொண்டு, அபயம் தந்தவரும் ஆகிய திருமாலின் மருகனே, தென்னம் பாளை எங்கும் நறுமணம் வீசும் இனிய சோலையில் இருந்த மயில் போன்ற வள்ளியின் கொங்கைகளை விரும்பிய பெருமாளே, உனது திருவடியே சரணம் என்பது வீண் போகாது என்றால் எனக்கு வேண்டாமை என்னும் வரத்தைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்
ஒப்புக
மாண்டார் எலும்பு அணியும் .....
ஊண்தானும் ஒலிகடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர்
மாண்டார் தம் எலும்பு அணிவர் வரி அரவொடு எழில் ஆமை  ...   சம்பந்தர் தேவாரம்

நான் போயொடுங்க அடங்கலுமாய்....
யான் செய்தேன்...என்னது யான் என்னும் இக்கோணை
ஞான எரியால் வெதும்பி நிமிர்த்துத் தான் செவ்வே
நின்றிட அத் தத்துவன் தன் நேரே தனை யளித்து
நிற்கும் வினை ஒளித்திட்டோம்...சித்தியார் 305.
யான் செய்தேன், அவர் செய்தார், என்னுடையது, யான், என்ற இக்கோணபுத்தியை ஞானத்தீயால் அழித்து, திருவருளின் செயலே என்று நின்றிட, இறைவன் அவர்களுக்கு நேரே தன்னை அளித்து முன்நிற்கும். வினை அவர்களை விட்டு ஓடும். நான் செய்தேன் என்று தன்முனைப்பு உள்ளோர்க்கு இறைவன் முன் நில்லாது, போகமும், கன்மமும் கூடி நிற்கும். ஆகவே தன் அறிவாலும், உலக அறிவாலும் பெறமுடியாத சிவஞானத்தை திருவருள் துணை கொண்டே பெறமுடியும்.

வேண்டாமை ஒன்றை அடைந்து உள்ளம்....

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். -  திருக்குறள்
ஆசை அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரானது ஒன்று இல்லை.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃதொன்றுமே வேண்டுவது வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமௌ வேண்டுமவன் பால்...திருக்களிற்றுபடியார்

வேந்தா சேந்தா...
வேலுலாந் தடக்கை வேந்தன் என் சேந்தன் என்னும் இம்மெலியல்
இவளே...திருவிசைப்பா -  சேந்தனார்

சரண் என்பது வீண்போம் தொன்றல என்பதை...
முடியாப் பிறவிக் கடல் புகார்...திருநாமம் புகல்பவரே...கந்தர் அலங்காரம் .

அருளாயேல்....
அருணகிரி நாதர் முருகனிடம் வரம் கேட்ட போது, உன் தந்தையாகிய சிவபெருமான் கேட்க அவருக்கு பிரணவப் பொருளை உபதேசித்தாய். அந்தப் பொருளை எனக்கும் உபதேசிக்க வேண்டுகின்றேன். அப்படி அதைக் கொடுக்க முடியாவிட்டால் அதற்குப் பதிலாக வேண்டாமையை நான் அடைய வேண்டும் என்ற வேண்டுகிறார். இதே போல் மற்றவர்களும் இறைவனைக் கேட்டுள்ளனர்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் --கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா...ஒளவையார்.

தந்தது உன் தன்னைக் கொண்டது உன் தன்னைச்
சங்கரா ஆர் கொலோ சதுரர் அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்  யாது நீ பெற்றது ஒன்று என் பால்...திருவாசகம் , கோயில் திருப்பதிகம்

சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை....
இந்த வரத்தைப் பல விதங்களில் முருகனிடம் கேட்பதைப் பின் வரும் பாக்களால்
அறியலாம்.  அருணகிரி நாதர் சிவனுக்கு உபதேசித்த இரகிசியத்தைத் தமக்கும்  உபதேசிக்குமாறு பல உத்திகளைக் கையாண்டு உள்ளார்.
       நயமாகக் கேட்டது -
நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய்என ஓதிய தெப்பொருள்தான்--- கந்தர் அனுபூதி .
                
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவ   -       
                                               திருப்புகழ்  (இப்பாடல்)           
             
ஏமாற்றும் வகையில் கேட்டது -
 வேண்டாமை யொன்றைய டைந்துள
 மீண்டாறி நின்சர ணங்களில்
 வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையோனாய்
-      திருப்புகழ், மாண்டாரெலும்
              
ஏசும் வகையில் கேட்டது -
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசம்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்கு ருத்து வங்கு
றையுமோதான் -                   திருப்புகழ்,   சயிலாங்கனை.






No comments:

Post a Comment