பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

420.வேடர் செழுந்தினை


420
பொது

                தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
             தானன தந்தன தாத்தன             தனதான

வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
   லோசன அம்புக ளாற்செயல்                                தடுமாறி
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
   வேளைபு குந்தப ராக்ரம                                      மதுபாடி
நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
   னாலகு கங்களு மேத்திய                                 இருதாளில்
நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம
   நாடஅ ருத்தவம் வாய்ப்பது                           மொருநாளே
ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
   ராயிர வெம்பகு வாய்ப்பணி                                 கயிறாக
ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
   ளாயனு மன்றெயில் தீப்பட                                 அதிபார
வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
   வாழ்வென வஞ்சக ராக்ஷதர்                               குலமான
வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்
   வானுல குங்குடி யேற்றிய                               பெருமாளே

பதம் பிரித்தது உரை

வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி
லோசன அம்புகளால் செயல் தடுமாறி

வேடர் - வேடர்களுடைய. செழும் தினை காத்து - செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காத்து. இதண் மீதில் இருந்த - (அங்கு) பரண் மீது இருந்த. பிராட்டி - வள்ளி தேவியின். லோசனம் - கண்கள் என்னும். அம்புகளால் - அம்புகள் பாய்வதால். செயல் தடுமாறி - (வள்ளியை வசப்படுத்த இன்னது செய்வது என்று தெரியாமல்) தடுமாற்றம் அடைந்து.

மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு
வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி

மேனி தளர்ந்து - உடல் சோர்வு அடைந்து. உருகா - மனம் உருகி. பரிதாபமுடன் - பரிதபிக்கத் தக்க நிலையில். புனம் மேல் - தினைப் புனத்தின் அருகே. திரு வேளை - தக்க சமயம் பார்த்து. புகுந்த - உள்ளே புகுந்த. பராக்ரமம் அது பாடி - திறமையைக் கவிகளில் அமைத்துப் பாடி

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தம் களை ஆர்
பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில்

நாடு அறியும்படி - உலகத்தோர் (உனது கருணையை) அறிந்து உய்யும்படி. கூப்பிடு - (தங்கள் கவிகள் மூலம்) ஓலமிட்டு உரைக்கின்ற. நாவலர் தம் - நாவல்ல புலவர்களை. ஆர் - கட்டி வசீகரிக்கும். பதினாலு உலகங்களும் - பதினான்கு உலகில் உள்ளோரும். ஏத்திய - போற்றும். இரு தாளில் - உனது இரண்டு திருவடிகளில்.

நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம
நாட அரு தவம் வாய்ப்பதும் ஒரு நாளே

நாறும் - நறு மணம் வீசும். கடப்பு அணியா - கடப்ப மாலையை அணிந்து. பரிவோடு புரந்த - அன்புடன் காக்கின்ற. பராக்ரம - உனது திறமையை. நாட - ஆய்ந்து அறிய. அரும் தவம் - அருமையான தவச் செயல். வாய்ப்பதும் ஒரு நாளே - அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ?

ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி
ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக

ஆடக மந்தர - பொன் மயமான மந்தர மலையை. நீர்க்கு - கடல் நீரில். அசையாமல் - அசையாதபடி. உரம் பெற - பலமாக. நாட்டி - (மத்தாகப்) பொருத்தி வைத்து. ஒரு - ஒப்பற்ற. ஆயிரம் வெம் - ஆயிரக் கணக்கான கொடிய தடிய. பகுவாய் - பிளவான நாக்குகளை உடைய. பணி - பாம்பாகிய ஆதிசேடனை. கயிறாக - (மத்தின்) கயிறாகச் சுற்றி.

ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள்
ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார

ஆழி கடைந்து - கடலைக் கடைந்து. அமுது ஆக்கி - அமுதத்தை வரவழைத்து. அநேக - பல (தேவர்களுடைய). பெரும் பசி தீர்த்து - பெரிய பசியை நீக்கி. அருள் - அருளிய. ஆயன் - திருமாலும். அன்று - முன்பு. எயில் - முப்புரங்களும். தீப்பட - தீயில் அழிய. அதி பார - அதிக பாரமானதும்.

வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய
வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள

வாடை - வடக்கே உள்ளதுமான. நெடும் கிரி - பெரிய மேரு மலையை. கோட்டிய - (வில்லாக) வளைத்த. வீரனும் - வீரனுமாகிய சிவபெருமானும். எம்பரம் மாற்றிய - எங்களுக்கும் மேற்பட்ட பர தத்துவத்தை உடைய. வாழ்வு என - செல்வன் என்று (போற்றவும்). வஞ்சக ராக்ஷதர் - வஞ்சக அரக்கர்களின். குலம் மாள - கூட்டம் அழியவும்.

வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன்
வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே.

வாசவன் - இந்திரனை. வன் சிறை - வலிய சிறையினின்றும். மீட்டு - விடுவித்து. அவன் ஊரும் - அவன் ஊராகிய பொன்னுலகத்தையும். அடங்கலும் - மற்றும் செல்வங்களையும். மீட்டு - மீட்டுத் தந்து. அவன் வானுலகும் - அவனுடைய விண்ணுலகத்தில். குடி ஏற்றிய பெருமாளே - குடி ஏற்றி வைத்த பெருமாளே.
                                                               
சுருக்க உரை

வேடர்களின் செழுமை வாய்ந்த தினைப் புனத்தில் பரண் மீது இருந்த வள்ளியைத் தன் வசப்படுத்த வழி தெரியாமல் தடுமாற்றம் உற்று, உடல் சோர்ந்து, மனம் உருகி, சமயம் பார்த்து அந்தப் புனத்தில் புகுந்த உனது திறத்தைப் புகழ்ந்து, கவிகளில் அமைத்துப் பாடும் நாவலர்களுடைய பிறப்புக்களைத் தீர்த்து, உனது இரு திருவடிகளில் அன்புடன் சேர்த்து, உன் அருளை நாடும் தவச் செயல் உண்டாகும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ?

மந்தர மலையை மத்தாகக் கடலில் நட்டு, ஆதிசேடனைக் கயிறாகச் சுற்றிக், கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து, தேவர்கள் அனைவருடைய பசியை நீக்கிய திருமாலும், முப்புரங்களை எரித்தவனும், மேருவை வில்லாக வளைத்தவருமாகிய சிவபெருமானும் எங்களுக்குப் பர தத்துவத்தை அளித்த வாழ்வே என்று போற்றவும், அசுரர்கள் கூட்டம் அழியவும், இந்திரனுக்குப் பொன் உலகத்தையும், அவனுடைய செல்வங்களையும் மீட்டுக் கொடுத்து, அவனை விண்ணுலகத்தில் குடி ஏற்றிய பெருமாளே, உன் புகழ் பாடும் அருந் தவத்தை எனக்கு அருள்வாயாக.

விரிவுரை  குகஸ்ரீ ரசபதி

ஒரு காலத்தில் எங்கும் அசுர ஆட்சி எழுந்தது. அதனால் வேள்விகள் அடங்கின.    இமையவர் அவிசை இழந்தனர். பசியோ பெரிதும் பாதித்தது. புனித மேனி குலைந்தது, உடலின் ஒளியும் ஒழித்து. விண்ணவர் பரிபவ விளைவு இது.

தேவர் சகாயம் இல்லாமையால், வானம் பெய்யலை மறந்தது. திரளும் பயிர்கள் தீய்ந்தன. பசுமை புற்கள் கரிந்தன. உணவின்றி பசுக்கள் முயங்கின. கண்ணீர் சிந்தின. கலங்கி நின்றன. மண்ணவர் அமுதை மறந்தனர். கடல் நிற வண்ணா, கோபாலா என்று கதறினர்.

காப்பு கடவுளான திருமால், அரிதுயில் நீங்கினார். கதறலை உணர்ந்தார்.கடமையை நினைந்தார். எழுந்த மந்தர மலையை எடுத்தார், எதிரில் இருந்த பாற்கடலில் இட்டார். அதை ஆடாது அசையாத படி அழுத்தினார்.1000 வாய்ப் பாம்பை கடை கயிறு ஆக்கினார். கடலை கடைந்தார். தெளிந்த அமுதம் பிறந்தது. அசுரரை இயைத்தார். அதை அமரருக்கு அளித்தார். அதிர்த்த கொடும் பசி அடங்கியது. உம்பர் உலகம் உய்ந்தது.
அவ்வளவு தானா?.

ஆதி மாதவர் அருட் கண்ணனாக அவனியில் உதித்தார். புனித ஆயர்குடியில் புகுந்தார். இன்பக் குழலை இசைத்தார். அந்த இனிய ஒலியால் தளர்ந்த பயிர்கள் தழைந்தன. எங்கும் பசுமை எழுந்தது. மேதகு பசுக்கள் மேய்ந்தன. உம்பர்கள் உலகம் உவந்தது. அதன் பயனாக, பெருகி கால மழை பெய்தது. சிறக்க விளைவுகள் செழித்தன. பசி தவிர்ந்து மானுட மக்கள் மகிழ்ந்தனர். படி அளக்கும் பரந்தாமர் இச் செயல்களால் பசி தவிர்த்த பெருமாள் ஆயினர்.

மற்றொரு சமயம் விஞ்ஞானத்தை அசுரர்கள் விருத்தி செய்தனர். மெய்ஞானத்தை மறந்தனர். அறிவால் எதையும் ஆளலாம் என்று அங்கலாய்த்தனர். பறக்கும் நகர்களைப் படைத்தனர். எண்ணிய போது அவைகள் எங்கும் ஏறி இறங்கின. அதன் கீழ் இருந்தவர் அதிர்ந்து நசுங்கி அழிந்தனர். விண்ணில் இந்த விளைவு- மண்ணில் கோர மல்லாட்டம்.
பாதகமோ பெரிதும் வளர்ந்திருந்தது, இச்சூழ்நிலையால் இயங்க இயலாமல் கோள்கள் எங்கும் குமுறின. நாள் மீன்கள் வருந்தி நைந்தன. இயற்கை சிதைந்தது. செயற்கை சிரித்தது. எங்குமே இருள் எழுந்தது. எவரும் துன்பம் எய்தினர்.

அறிவின் முயல்வில் விஞ்ஞானம். அருளின் செயலில் மெய்ஞானம். அசுராவேச விஞ்ஞானத்தால் அமைதி குலைந்தது. ஆக்ரமிப்பு, கோரதாண்டவம் செய்து கொக்கரித்தது. அசுர விஷப்பூச்சிகளை அழித்து உயிர்களின் அயர்வை அகற்றும் ருத்திரர் இதை உணர்ந்தார். செயல் பட எழுந்தார். மேருவை எடுத்தார். வில்லாக வளைத்தார். பூமியைச் சுமக்கும் வாசுகியை நாணாக பூட்டினார். அக்னி தத்துவத்தையே அம்பாக்கினார்.

மண்ணில், விண்ணில், பாதாளத்தில் கோட்டைகளைக் கட்டி பறந்த அசுர விஞ்ஞானிகள் இதை அறிந்தனர்., அஹ் ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா என்று ஆரவாரித்தனர். அது கண்ட ருத்திரர் முப்புரங்களை நோக்கி முறுவலித்தார். கோபக் கனல் நகையிலிருந்து கொப்பளித்தது. 
அதனால் பொல்லாத முப்புரங்கள் பொரிந்து கரிந்தன. இதன் பின் நாட்கள், கோள்கள் நவை இன்றி நகர்ந்தன. அன்பர்கள் இவைகளை அறிந்தனர். ஹர ஹர என்று போற்றி உள்ளம் புளகிதம் எய்தினர். தீய நினைவும், உதட்டுப் பசப்பும் கொடுமைச் செயலாகி குளம்பும். அதனிலிருந்து விஷப்பூச்சிகள் போல் அவுணர்கள் உதிப்பர். பாழும் அக்கிரமத்தைப் பரப்புவர். எங்கும் அதனால் இடர். எங்கும் கண்ணீர். சாதுக்கள் படும் சங்கடம் கண்டு உருத்திரரும் அச்சுதரும் உறுத்தெழுவர். கவலைக்குறிய களைகளை களைந்து உயிர்களாகிய பயிர்கட்கு என்றும் உய்வு அளிப்பர். இச்சம்பவங்கள் இப்படி எத்தனையோ தரம் நிகழ்ந்துள.

விண், மண், பாதாளம் கொண்டது ஓர் அண்டம் . போர் காலத்தில் மோசமான மாயையின் சக்தி பெற்ற மும் மலங்கள், மூன்று தலைமை அசுரராகி முளைத்தன. சூரபதுமன், சிங்க முகன், தாருகன் எனும் பெயரை இயன்றன. கம்பீரமான 1008 அண்டங்களை கை வசப்படுத்தின. பெரும்அசுராவேசத்தை பெருக்கின. 108 யுகம் வரை நைவிக்கும் அராஜக ஆட்சிநடத்தின. அண்டங்களின் அதிபர்கள் கலங்கினர். முடங்கி ஒடுங்கும் உயிர்களை காக்க முடியாமல் மாலும் ருத்திரரும் மயங்கினர். ‘காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா’ என்று அலறி உலகர் அழுதனர். விமல முருகா, வினயம் மிக்க அவர்கள் பிராத்தனைக்கு இரங்கி வெளிப்பட்டீர். வேலால் அவுணர்களை வென்றீர்.
அவர்களின் மன்னன் சூரனை மயில் ஊர்தி ஆக்கினீர். பதுமனை சேவல் கொடியாக்கி சிறக்க ஏந்தினீர். 1000 சிங்க முக அதிபன் ஒருவனை வரத தேவிக்கு வாகனமாக்கினீர். ஆனைமுக அசுராதிபனை ஹரிஹர புத்திரர் வாகனம் ஆகும்படி ஆக்கினீர். அதன் பின் உலகம் அமைதி அடைந்தது.

ஆழி கடைந்து, அமுதாக்கி அநேகர் பெரும் பசி தீர்த்தருள் ஆயனும், (ருத்திர) வீரனும் அணுகினர். அனைவரையும் காக்க முடியாமல் கலங்கினோம். எமது பொறுப்பை ஏற்றீர். பழுவைக் குறைத்தீர். ‘வாழி குமரா, வாழி முருகா’ என்று வாழ்த்தினர்., பாலிக்கும் உமது பேரருள் மேலும் மேலும் வளர்ந்தது.

நெஞ்சில் வஞ்சம், வாக்கில் நஞ்சம் ஆன இரக்கமற்ற அரக்கரை அழித்தபின் விண்ணவரை சிறையிலிருந்து விடுவித்தீர். காமதேனுவுக்கு விடுதலை. ஐந்து பேர்கட்கு சுதந்திரம். இப்படி நிரந்தர இன்பம் எவர்க்கும்எவைக்கும் நிலைக்கச் செய்தீர். இந்திரன் ஆதியரை அவரவர் பதவியில் அமர்த்தினீர். எவர் குடிகளும் இவைகளால் ஏற்றம் எய்தின. அதனை ஓர்ந்து குடியேற்றிய பெருமாளேஎன்று வாயார உலகம் உம்மை வாழ்த்தியது.
இவ்வளவு தொல்லையும் விளைவது எதனால்? பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம். பிறாவார் உறுவது பெரும் பேரின்பம். இது முதுமொழி. ஆன்மா பேதமை காரணமாக பிறக்கும். அதிர வரும் வினையை அனுபவிக்கும், நியதி என்றும் கடமையை நிறைவேற்றும். அதனால் ஆகாமியம் உரு ஆவதில்லை. அந்நிலையில் கசிந்து கசிந்து கடவுளைக் கருதும். பெருகி இச்செயல் பிறங்கும் நிலையில், ஜீவ சுபாவம் சிறிது சிறிதாக சிதறும். அப்பரிபாகத்தில். எங்கே சிவம்? எங்கே பரம்? என்று ஏமாந்து ஆன்மா எத்திசையும் நோக்கும். தாபம் பெருகி தவிக்கும். அதன் ஆர்வம் கண்ட பரம், அந்த ஆன்மாவை ஆவலித்து அணுகும்.

ஆன்ம நோக்கம், அருள் நோக்கத்தை இப்படி சிறிது சிறிதாக ஈர்க்கும். அக்காலத்தில் உயிரின் சுபாவம் முழுதும் ஒழிய ஆடல் பலவும் காட்டும் அருள் இறைவன். ஜீவன் சேய், சிவம் தாய். ஒன்றை ஒன்று தழுவ, இடையில் எழுகிற பாடு பல. கிணற்றில் விழுந்த சேய் அம்மா அம்மா என்று முழுகி எழுந்து மொறுவும். அழைப்பின் அலறலை அறிந்த பின் அச்சேயை எடுக்க முயலும் அன்னையின் துடிப்பு நாம் அறிந்தது தான்.

அந்த நியாயம் போல் பிறவிக்கடலில் ஆழ்ந்து, வேடச் சேற்றில் அழுந்திய வள்ளியார், சேர்ந்த இடத்திற்கு ஏற்ற செய்கைளைச் செய்தார். அவர் இதயம் மட்டும் குமரா, இறைவா, குகா என்று குமுறிக் கொண்டே இருந்தது. அதை அறிந்தீர். உலகத்தில் உடம்பில் நின்ற அந்த அபிமானம் நீங்க நினைத்து, அணு அணுவாக அவரை அணுகினீர். ஆள்பவனே ஆனாலும் அவ்வளவு எளிதாக ஓர் ஆன்மாவை ஆண்டு கொள்ளல் ஆவதில்லை. அது கருதி ஆடல் பலவும் நடத்தினீர்.

பரிதாபம் கொண்டு, காலம் பார்த்து, வேளை நோக்கி, சமயம் அறிந்து அவரை ஆட்கொண்ட உமது அருள் ஆற்றலை மாதவர் உள்ளம் மறந்தது இல்லையே. அவர்கள் வாணியைத் தம் நாவில் வாழ வைத்தவர்கள். அதனால் நாவலர் எனும் பெயரையும் எய்தினர். வேடர் செழுந்தினை காத்து, இதண் மீதில்  இருந்த பிராட்டி விலோசன அம்புகளால் செயல்தடுமாறி, மேனி தளர்ந்து உருகா  பரிதாபமுடன், புன மேல் திரு வேளை புகுந்த உமது பர ஆக்ரமத்தை  வாயார பரிவு மிகுந்து பாடலாயினர்.

யோகஜீவனுக்கு சிவபோகம் ஊட்டுபவர் நீர். அதற்கு அடையாளமாக உமது திருவடிகளில் கடப்ப மலர் கமழ்கிறது. ஊன்றி அந்த அருமை உணர்ந்து 14 உலகங்களும் அத்திருவடிகளை ஏத்தி, போற்றி இறைஞ்சுகின்றன. வள்ளியார் திருமுன் திருவேளை புகுந்த பராக்கிரமம்போல் அந்த அருளைப் பாடும் நாவலர்களையும் பரிவோடு புரந்தது உமது பராக்கிமம்.

பரத்திற்கென ஜீவனை அக்கிரமித்துக் கொள்ளும் அந்நிலை பர ஆக்கிரமம் எனப்பெறும். அப்பராக்கிரமத்தை அடியேன் சதா எண்ணி இருக்கும் என்று வாய்க்குமோ? அதை நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே, அரசே, துரையே, முருகா, என்று வீறிட்டு, வாழ்த்திட்டு விண்ணப்பித்த படி

ஒப்புக
பரிவோடு புரந்த பராக்ரம...
சேவலங் கொடியோன் காப்ப ஏம் வைகல் எய்தின்றால் உலகே ...குறுந்தொகை, கடவுள் வாழ்த்து.

விளக்கக் குறிப்புகள்
பராக்ரமம் அது பாடி நாடறியும்படி....
வள்ளிக்காக முருகவேள் காட்டிய திறமையை அருணகிரி நாதரே திருவகுப்பில்     பாடியிருக்கின்றார்.

மேவிய புனத்திதணில் ஓவியமெ னத்திகழு
மேதகு குறத்திதிரு  வேளைக்காரனே
                                                ...திருவேளைக்காரன் வகுப்பு
 
வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணில்
மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே
                                               ....வேடிச்சி காவலன் வகுப்பு.


No comments:

Post a Comment