பின் தொடர்வோர்

Saturday 4 April 2020

415.மூலா நிலமதின்


415
பொது

          தானா தனதன தானா தனதன
          தானா தனதன             தனதான

மூலா நிலமதின் மேலே மனதுறு
   மோகா டவிசுடர்                  தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலு
   மோதா நெறிமுறை              முதல்கூறும்
லீலா விதமுன தாலே கதிபெறு
   நேமா ரகசிய                           வுபதேசம்
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
   நீதா மலமது                           தருவாயே
நாலா ருசியமு தாலே திருமறை
   நாலா யதுசெப                   மணிமாலை
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
   காலார் தரவரு                         குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக
   சோதீ நடமிடு                     பெருமாளே

பதம் பிரித்து உரை

மூலா நிலம் அதின் மேலே மனது உறு
மோக அடவி சுடர் தனை நாடி

மனது உறு - மனத்தில் பொருந்திய. மோக அடவி - ஆசை என்கின்ற காடு (வேறு வழியில் செல்லாது). மூலா நிலம் அதின் மேலே - மூலாதார நிலைக்கு மேல் உள்ள (விநாயகர் முதல், மேலே சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ருத்திரன், ஆஞ்ஞை முதலிய ஆதாரங்களில் உள்ள பிரமன், விஷ்ணு, ருத்திரன், சதாசிவம் ஆகிய மூர்த்திகளின் திருக்கோயில்களைத் தாண்டி). சுடர் தனை நாடி - நல்ல சுடர் தோற்றமுற (யோக வழியில்) நாடி.

மோனா நிலை தனை நானா வகையிலும்
ஓதா நெறி முறை முதல் கூறும்

மோனா நிலை தனை - மெளன நிலையை. நானா வகையிலும் - பல வகையாலும். ஓதா - கற்று. நெறி முறை - நன்னெறி முறை வழி முதலானவற்றை. முதல் கூறும் - முதலில் காட்டுகின்ற.

லீலாவிதம் உனதாலே கதி பெற
நேமா ரகசிய உபதேசம்

லீலாவிதம் - உனது திருவிளையாடல்களின் உண்மை நிலையை. உனதாலே - உன்னுடைய திருவருளாலே. கதி பெற - நான் உய்யுமாறு. நேமா - நியமம் வாய்ந்த. ரகசிய உபதேசம் - ரகசிய உபதேசத்தைத் (தருவாயே).

நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி
நீதா பலம் அது தருவாயே

நீடூழி - நீண்ட ஊழி காலத்தும். தன் நிலை வாடா - தனது நிலை வாடாத. மணி ஒளி - சுயம் பிரகாச மணிச்சோதியே . நீதா - நீதிமானே. பலம் அது தருவாயே - பயன்தரத் தருவாயே.

நாலா ருசி அமுதாலே திருமறை
நாலாய் அது செபம் மணி மாலை

நாலா ருசி அமுதாலே - பலவிதமான இன்பச் சுவை அமுதம் பருகிய உணர்ச்சியால். திருமறை நாலாய் அது - அழகிய வேதங்கள் நான்கினையும். செப மணி மாலை - செப மாலை கொண்டு

நாடு ஆய் தவர் இடர் கேடா அரி அரி
நாராயணர் திரு மருகோனே

நாடு ஆய் - நாடி ஆராய்கின்ற. தவர் - தவத்தினர்களுடைய. இடர் கேடா -  துன்பங்களை அழிப்பவனே. அரி அரி நாராயணர் - அரி அரி என்று ஓதப்படும் திருமால். திரு - இலக்குமி இவர்களின். மருகோனே - மருகனே.

சூல அதிபர் சிவ ஞானார் யமன் உதை
காலார் தர வரு(ம்) குருநாதா

சூல அதிபர் -  சூல ஆயுதம் ஏந்தியவர். சிவ ஞானார் - சிவ மனத்தினர். யமன் உதை- யமனை உதைத்த. காலர் - திருவடியினர். தர - தந்தருள. வரும் - வந்த. குருநாதா - குருநாதரே.

தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடும் பெருமாளே.

தோதீ .....நடமிடு - தோதீ முதலான ஒலிகளோடு நடனம் செய்கின்ற. பெருமாளே - பெருமாளே.

சுருக்க உரை

மனத்தில் பொருந்திய ஆசை என்னும் காடு, வேறு வழியில் செல்லாது அடக்கி, யோக வழியில் நின்று, மூலாதார நிலைக்கு மேல் உள்ள மற்ற ஆதாரங்களையும் கடந்து, சோதி ஒளியாகிய உன்னை நாடி, மவுன நிலையை பல வகையாலும் கற்று, நன்னெறி காட்டும் உனது திருவிளையாடல்களை உன் திருவருளால் ஆராய்ந்து, நான் நற்கதியைப் பெற வேண்டிய ஒழுங்கான ரகசிய உபதேசத்தை எனக்குப் பயன்படுமாறு தந்தருளுக.

ஊழி காலத்திலும் தன் நிலை வாடாத ஒளி வீசும் மணிச் சோதியே, நீதிமானே, உபதேச மொழியைத் தருவாயாக. பல விதமான இன்பச் சுவையைப் பருகிய உணர்வால், நான்கு மறைகளையும் செப மாலை கொண்டு ஆய்கின்ற தவசிகளின் இடர்களை அழிப்பவனே, திருமால், இலக்குமி இவர்களின் மருகனே, யமனைக் காலால் உதைத்த சிவபெருமான் அருளிய குருநாதரே, தோதீ என நடமிடும் பெருமாளே, எனக்கு உபதேசம் செய்வாயாக.

ஒப்புக
* நானா வகையிலும் ஓதா நெறி முறை....
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடேறு நானு ரைத்த நெறியாக
                                                      ....திருப்புகழ்,நாவேறுபாம.

* மூலா நிலமதின் மேலே மனதுறு....
மூலங்கிள ரோருரு வாய் நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்புங்கலை நாடியொ டாடிய முதல்வேர்கள்
                                                           ...திருப்புகழ், மூலங்கிள.

* மணியொளி நீதா...
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்....கந்தர் அனுபூதி.
ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் தம்பிரானே
                                                      ...திருப்புகழ் ஓதுமுத்தமிழ்.



No comments:

Post a Comment