பின் தொடர்வோர்

Sunday 2 December 2018

357.காதி மோதி

357
பொது

                   தான தான தானான தானத்     தனதானா


காதி மோதி வாதாடு நூல்கற்         றிடுவோருங்
      காசு தேடி யீயாமல் வாழப்    பெறுவோரும்
மாது பாகர் வாழ்வே யெனாநெக்      குருகாரும்
      மாறி லாத மாகால னூர்புக்        கலைவாரே
நாத ரூப மாநாத ராகத்               துறைவோனே
      நாக லோக மீரேழு பாருக்        குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற்           கொடியோனே
      தேவ தேவ தேவாதி தேவப்     பெருமாளே


பதம்பிரித்து உரை

காதி மோதி வாது ஆடு நூல் கற்றிடுவாரும்
காசு தேடி ஈயாமல் வாழ பெறுவோரும்

காதி - வெட்டுதல் போலப் பேசியும் தாக்கியும் வாது ஆடு - தர்க்கம் செய்வதற்கு உளதான நூல் கற்றிடுவோரும் - நூல்களைக் கற்பவர்களும் காசு தேடி - பொருள் ஈட்டி ஈயாமல் வாழப் பெறுவோரும் - பிறருக்கு ஈயாமல் வாழ்க்கை நடத்துபவரும்

மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும்
மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே

மாது பாகர் - உமாதேவியின் பாகரான சிவ பெருமானது வாழ்வே எனா - செல்வமே என்று நெக்கு உருகாரும் - உனைப் புகழ்ந்து உள்ளம் உருகாதவர்களும் மாறு இலாத - நீங்குதல் இல்லாமல் மா - பெரிய காலன் ஊர் - யம புரியில் புக்கு அலைவாரே - புகுந்து அலைச்சல் உறுவார்கள்

நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே
நாக லோகம் ஈரேழு பாருக்கு உரியோனே

நாத ரூப - ஒலி உருவத்தவனே மா நாதர் ஆகத்து - பெரிய பெருமான் ஆகிய சிவ பெருமானது உள்ளத்தில் வீற்றிருப்பவரே நாக லோகம் - சுவர்க்க லோகம் போன்ற ஈரேழு பாருக்கும் - பதினான்கு உலகங்களுக்கும் உரியோனே - தலைவனாக நிற்பவனே

தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவ பெருமாளே

தீது இலாத - தீமையே செய்யாத வேல் வீர - வேலாயுதத்தை உடையவனே சேவல் கொடியோனே - சேவலைக் கொடியாக உடையவனே தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே - தேவர்களுக்கு தேவ தேவர்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கும் பெருமையிற் சிறந்தவரே

சுருக்க உரை

தாக்கிப் பேசுவதற்கும், வாதம் செய்வதற்கும் உரிய பல நூல்களைக் கற்பவரும், பொருள் ஈட்டிப் பிறருக்கு ஈயாமல் வாழ்பவர்களும், சிவபெருமானை உளமாறப் புகழ்ந்து மனம் உருகாதவர்களும், யமனுடைய ஊரில் புகுந்து அலைச்சல் உறுவார்கள் நாத வடிவானவனே, அடியார்கள உள்ளத்தில் வீற்றிருப்பவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவனே தேவர்களுக்குப் பெருமாளே

விளக்கக் குறிப்புகள்

1காதி மோதி வாதாடு நூல்
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக்    கசடாகும்
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகனுங் கொட்புற்    றுடன்மோதும்
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் குறியாதே
                      ---- திருப்புகழ் கலைஞரெணுங்க
காசுதேடி யீயாமல் வாழ
   கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
  தேடிப் புதைத்துத்திருட்டிற் கொடுத்துத்
  திகைத்திளைத்து
  வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே   ---- கந்தர் அலங்காரம்
3 நாதரூப நாதர் ஆகத்து
   ஓசை ஒலியெலாம் ஆனாய்நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே ---
                                     திருநாவுக்கரசர் தேவாரம்    
   மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த லோனே---
                                         திருப்புகழ்,முத்துத்தெறி
4 ஈரேழு பாருக்கு உரியோனே
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை பெருமாளே) ---
                                         திருப்புகழ், கரியமேகமோ




No comments:

Post a Comment