பின் தொடர்வோர்

Wednesday 5 December 2018

363.சருவிய

363
பொது

                 தனதன தாத்தனத் தனதானா

சருவிய சாத்திரத்                      திரளான
   சடுதிக ழாஸ்பதத்                தமையாத
அருமறை யாற்                 பெறற்கரிதாய
   அனிதய வார்த்தையைப் பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்                   தெழுபார
   நெடுதிரை யார்ப்பெழப்   பொருதோனே
பொருளடி யாற்பெறக்            கவிபாடும்
   புலவரு சாத்துணைப்         பெருமாளே

பதம் பிரித்து உரை

சருவிய சாத்திர திரளான
சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத
சருவிய - பழகியுள்ள சாத்திரத் திரளான - எல்லா சாத்திரங்களுடைய திரண்ட பொருளானதும் சடு திகழ் ஆஸ்பத்து - ஆறு என்று விளங்கும் ஆதாரங்களில் அமையாத - பொருந்தி அடங்காததும்

அரு மறையால் பெறற்கு அரிதாய
அனிதய வார்த்தையை பெறுவேனோ
அரு மறையால் - அரிய வேதங்களால் பெறற்கு அரிதாய - பெறுவதற்கு முடியாததும்  அனிதய வார்த்தையை - மனதுக்கு எட்டாததும் ஆகிய உபதேச மொழியை பெறுவேனோ - பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா?

நிருதரை மூக்கு அறுத்து எழு பார
நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே
நிருதரை - அசுரர்களை மூக்கு அறுத்து - அவமானம் செய்து எழு - ஏழு பார - பெருமை வாய்ந்த நெடு திரை - நீண்ட கடல்களும் ஆர்ப்பு எழ - பேரொலி செய்ய பொருதோனே - சண்டை செய்தவனே

பொருள் அடியால் பெற கவி பாடும்
புலவர் உரு சாத்துணை பெருமாளே

பொருள் - சிறப்பான பொருள் அடியால் பெற - அடி தோறும் அமைய கவி பாடும் - பாடல்களைப் பாடும் புலவர் உசாத் துணைப் பெருமாளே - புலவர்களுக்கு உற்ற துணைவனான பெருமாளே

சுருக்க உரை

பழைய சாத்திரத் திரள்களின் பொருள் ஆனதும், ஆறு ஆதாரங்களில் பொருந்தி அடங்காததும், அரிய வேதங்களாலும் பெறுதற்கு  அரிதானதும் மனதுக்கு எட்டாததும் ஆகிய உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா?

அசுரர்களை அவமானம் செய்து, ஏழு கடல்களும் போரொலி செய்யும்படி சண்டை செய்தவனே சிறப்பான பொருள் அடி தோறும் அமைய புலவோர்களுக்குத் துணை செய்யும் பெருமாளே மனதுக்கு எட்டாத உபதேசத்தை எனக்கு அருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்
சாத்திரத் திரளான சடு திகழ் ஆஸ்பத்தம்
ஆறு ஆதாரங்களாவன  மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம்,   அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை

சடு திகழ் ஆஸ்பதம் என்பதற்கு ஆறங்கம் எனவும் பொருள் கொள்ளலாம் சிஷா,  வ்யாகரணம்,  சந்தம், நிருக்தம், ஜ்யோதிஷம் என்பனனாகும்.  பிறிதோறிடத்தில்
பாடல் 443 ஆறங்க வேள்வி  எனவும் கூறுகிறார்


No comments:

Post a Comment