பின் தொடர்வோர்

Sunday 16 December 2018

366.சிவஞான

366
பொது

            தனதான தந்ததன தனதான தந்ததன
            தனதான தந்ததன                  தனதான

சிவஞான புண்டரிக மலர் மாது டன்கலவி
  சிவபோக மன்பருக                         அறியாமற்
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்தபொது
    திகழ்மாதர் பின்செருமி                யழிவேனோ
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
  தயவாய்ம கிழ்ந்துதினம்               விளையாடத்
தமியேன் மலங்களிரு வினைநோயி டிந்தலற
  ததிநாளும் வந்ததென்முன்             வரவேணும்
உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
  முறைநாய கங்கவுரி                           சிவகாமி
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
  யொருநாள்ப கிர்ந்தவுமை              யருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
   மமுதால யம்பதவி                     யருள்வோனே
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
  அயிலாபு கழ்ந்தவர்கள்                  பெருமாளே

பதம் பிரித்து உரை

சிவ ஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி
சிவ போகம் மன் பருக அறியாமல்

சிவ ஞான - சிவ ஞானம் என்று சொல்லப்படும் புண்டரிக மலர் - தாமரை மலரில் வீற்றிருக்கும் மாதுடன் - சிவ மாதுடன் கலவி - புணர்ச்சி ஏற்படும் சிவ போகம் - மங்களகரமான இன்பத்தை மன் - நன்றாக பருக அறியாமல் - உண்டு அனுபவிக்கத் தெரியாமல்

செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது
திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ

செகம் மீது உழன்று - பூமியில் அலைந்து திரிந்து மல வடிவாயிருந்து - மும்மலங்களின் உருவாய் இருந்து பொதுதிகழ் மாதர் - (பொருள் கொடுப்பவர் எல்லோருக்கும்) பொதுவாய் விளங்கும் விலை மாதர்களின் பின் செருமி - பின்னரே நெருங்கி அழிவோனோ - அழிந்து போவேனோ?

தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களோடு
தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட

தவம் மாதவங்கள் பயில் - பற்று நீங்கிய வழிபாடும், பெருந் தவமும் செய்கின்ற அடியார் கணங்களோடு - அடியார் கூட்டத்துடன் தயவாய் மகிழ்ந்து - அன்பு வைத்து மகிழ்ந்து தினம் விளையாட - நாள் தோறும் விளையாடவும்

தமியேன் மலங்கள் இரு வினை நோய் இடிந்து அலற
ததி நாளும் வந்தது என் முன் வரவேணும்

தமியேன் - அடியேனாகிய என்னுடைய மலங்கள் - மும்மலங்களும் இரு வினை - பிறப்பு, இறப்பு என்னும் நோய் - நோய்களும் இடிந்து அலற - அச்சமுற்று அலற ததி நாளும் - தக்க சமயத்தில் வந்தது - வந்தவனாய் என் முன் வரவேணும் - என் முன் வர வேண்டுகிறேன்

உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட
முறை நாயகம் கவுரி சிவகாமி

உவகாரி - யாருக்கும் உதவி செய்பவள் அன்பர் பணி - அன்பர்கள் பணிகின்ற கலியாணி - கல்யாண குணங்களை உடையவள் எந்தை இடம் உறை நாயகம் - எந்தை சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற தலைவி கவுரி சிவகாமி - கௌரி அம்மை, சிவகாமி

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங் கனியை
ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா

ஒளிர் ஆனையின் கரமில் - விளங்குகின்ற கணபதியின் கரத்தில் மகிழ் - (யாவரும்) மகிழும்படியாக மாதுளங் கனியை - மாதுளம் பழத்தை ஒரு நாள் பகிர்ந்த உமை - முன்பு ஒரு நாள் பகிர்ந்து கொடுத்த உமை - உமா தேவி அருள் பாலா - அருளிய குழந்தையே

அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும்
அமுத ஆலயம் பதவி அருள்வோனே

அவமே பிறந்த - வீண் காலமே போக்கப் பிறந்த எனை - என்னை இறவாமல் - இறவாத வரத்தைத் தந்து அன்பர் புகு - உன் அன்பர்கள் புகுகின்ற அமுது ஆலயம் - அமுதக் கோயிலில் பதவி - ஒரு நிலையை அருள்வோனே - அருளியவனே

அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ்
அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே

அழகா - அழகனே நகம் பொலியும் மயிலா - (கால்) நகங்கள் விளங்கும் மயில் வாகனனே புகழ்ந்தவர்கள் - (உன்னைப்) புகழும் அடியார்களுக்கு பெருமாளே - பெருமாளே

சுருக்க உரை

சிவ ஞானம் என்ற மாதுடன் கலவி ஏற்படும் மங்களகரமான இன்பத்தை நன்றாகப் பருகி அனுபவிக்கத் தெரியாமல், பூமியில் வீணாக அலைந்து திரிந்து, மும்மலங்கள் சொரூபமாக இருந்து, பொது மகளிர் பின் நெருங்கி, அழிந்து போவேனோ?

பெரிய தவசிகள் கூட்டத்தில் அன்பு வைத்து மகிழ்ந்து தினம் விளையாடவும், அடியேனுடைய மும்மலங்களும், இரு வினைகள் என்ற நோய்களும் அச்சமுற அலற, என் எதிரே வர வேண்டும்.
வீணாகக் காலத்தைப் போக்கப் பிறந்த என்னை இறவாத வரத்தைத் தந்து, அன்பர்கள் புகும் கோயிலில் எனக்கும் ஒரு நிலையைக் கொடுத்து அருள வேண்டும். மயில் வாகனனே குறிஞ்சி நிலங்களில் உறையும் வேலாயுதனே உன்னைப் புகழும் அடியார்களுக்குப் பெருமாளே என் முன் நீ வந்தருள வேண்டும்

விளக்கக் குறிப்புகள்


“சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி” –  பாடல் சிவமாதுடனே அனுபோகமதாய், திருப்புகழ்.
சிவஞானமாகிய செந்தாமரையின்மீது வீற்றிருகின்றவள் முத்தித்திரு. அத்திருவுடன் கலத்தலே முக்திப்பேறு ஆகும். கலத்தல் என்றால் ஒற்றிருத்து நிற்றல். சிவ போகம்: சிவ பெருமானின் திருமேனிகளில் ஒன்றைப்பெற்று சிவபோகம் அனுபவிக்கும் முக்தி சாரூபம் எனப்படும்

கரமில் மகிழ் மாதுளங் கனியை
  படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
  கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
  பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் பதனாலே – திருப்புகழ், புடவிக்கணி

மும்மலங்கள் : The three impurities of the soul which cling to it until it attains final liberation. ஆணவம், கன்மம், மாயை. சங்கராச்சாரியார் சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குவார். சிவபிரான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி.

விநாயக பெருமான் மாங்கனி பெற்றது

சிவ பெருமானும் தேவியும் தம் பிள்ளைகளை நோக்கி, இவ்வுலகினை முதலில் வலம் வருவோர்க்கு இக்கனியைத் தருவோம் என்றனர் உடனே முருகன் மயில் மீது ஏறி ஒரு நொடியில் உலகை வலம் வந்தார் அங்ஙனம் செய்ய இயலாத விநாயகர் உலகெலாம் தம் பெற்றோருள் அடக்கம் என்னும் தத்துவத்தை உணர்ந்து, பெற்றோரைச் சுற்றி வந்து கனியைப் பெற்றார் கோபம் கொண்ட முருகன் திருவாவினன்குடிக்கு வர, நீயே பழமாக இருக்க உனக்கு வேறு பழம் எதற்கு எனக் கூறி அவருக்கு ஆறுதல் கூறினர்.
இந்த கதை சொல்லும் தத்துவம் என்ன?  - ஒருவர் சிவனில் எல்லாவற்றையும் பார்த்தார். மற்றவர் எல்லாவற்றையும் சிவமாக பாவித்தார்.



No comments:

Post a Comment