பின் தொடர்வோர்

Tuesday 4 December 2018

360.கொடியமதவேள்

360
பொது
                                               
          தனதனன தானத்       தனதானா

கொடியமத வேள்கைக்         ணையாலே
  குரைகணெடு நீலக்               கடலாலே
நெடியபுகழ் சோலைக்            குயிலாலே
  நிலைகெடு மானைத்            தழுவாயே
கடியரவு பூணர்க்                கினியோனே
  கலைகள்தெரி மாமெய்ப்    புலவோனே  
அடியவர்கள் நேசத்             துறைவேலா
  அறுமுகவி நோதப்             பெருமாளே


பதம் பிரித்து உரை

கொடிய மத வேள் கை கணையாலே
குரை கண் நெடு நீல கடலாலே

கொடிய - பொல்லாத மதவேள் - மன்மத வேளின் கை - கையிலிருந்து செலுத்தும் கணையாலே - பாணங்களாலும் குரை கண் - ஒலித்தலுக்கு இடமான நெடு நீலக் கடலாலே - நெடிய நீல நிறக் கடலாலும்

நெடிய புகழ் சோலை குயிலாலே
நிலைமை கெடு மானை தழுவாயே

நெடிய புகழ் - பெரிய புகழைப் பெற்ற சோலைக் குயிலாலே - சோலையில் உள்ள குயிலாலும் நிலைமை கெடு - தனது சுய அறிவு தடுமாறுகின்ற மானை - மான் போன்ற இந்தப் பெண்ணை தழுவாயே - அணைந்து அருள்வாயாக

கடி அரவு பூணர்க்கு இனியோனே
கலைகள் தெரி மா மெய் புலவோனே

கடி அரவு - கடிக்கின்ற குணமுடைய பாம்பை பூணர்க்கு - ஆபரணமாக அணிந்துள்ள (சிவபெருமானுக்கு) இனியோனே - இனிய குழந்தையே கலைகள் - சகல கலைகளையும் தெரி - தெரிந்த மா - சிறந்த மெய்ப் புலவோனே - உண்மைப் புலவனே

அடியவர்கள் நேசத்து உறை வேலா
அறு முக விநோத பெருமாளே

அடியவர்கள் நேசத்து - அடியார்களுடைய அன்பில் உறை வேலா - உறைவிடம் கொண்ட வேலனே அறு முக - ஆறு திருமுகங்களை உடைய விநோதப் பெருமாளே - அதிசயப் பெருமாளே

சுருக்க உரை

மன்மதனின் பாணங்களாலும், நெடிய நீல நிறக் கடலாலும், அழகிய சோலைக் குயிலாலும், மனம் தடுமாறி நிற்கும் இந்தப் பெண்ணைத் தழுவாயோ? கடிக்கும் பாம்பை அணிகலனாகக் கொண்ட சிவபெருமானுக்கு இனிய குழந்தையே, பல கலைகளிலும் வல்ல உண்மைப் புலவனே,
அடியார்கள் மனத்துள் உறையும் வேலனே, ஆறு திரு முகங்களை உடைய அதிசயப் பெருமாளே, காம நோயால் வாடும் இந்தப் பெண்ணைத் தழுவாயாக

ஒப்புக
கலைகள் தெரி மாமெய்ப் புலவோனே
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த 
கல்வி கரை கொண்ட  புலவோனே-   திருப்புகழ், அல்லசல

இந்தப் பாடல் நற்றாயிரங்கல் என்னும் துறையைச் சார்ந்தது

சிறார்கள் பாடுவதை கேட்க

https://www.youtube.com/watch?v=3fiGoBvp-9I




5 comments: